முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை வெள்ளத்துக்கு 70 பேர் பலி: 200 இந்திய சுற்றுலா பயணிகள் தவிப்பு

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

காத்மாண்டு :  நேபாளத்தில் பெய்து வரும் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 70 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளநீர் சூழ்ந்ததால் சுற்றுலா சென்றவர்கள் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.

நேபாள நாட்டில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இவற்றால் இதுவரை 70 பேர் பலியாகி உள்ளதாகத் தெரிகிறது. 36 ஆயிரம் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் சுமார் 48 ஆயிரம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 25 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், பிரபல சுற்றுலா நகரான சித்வானில் உள்ள சவுரகா பகுதியில் சுமார் 600 சுற்றுலா பயணிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 200 பேர் இந்தியப் பயணிகள்.அவர்கள் தங்கி உள்ள ஓட்டல்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அவர்களால் வெளியேற முடியவில்லை.

சுற்றுலாப் பயணிகளை அந்த இடத்தில் இருந்து அழைத்து வர யானைகளை பயன்படுத்தலாமா என்று அதிகாரிகள் யோசனை நடத்தி வருகின்றனர். வெள்ளநீர் வடிய காலதாமதமாகும் என்பதோடு ஆங்காங்கே மலைச்சரிவுகளும் ஏற்பட்டு வருவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும் மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து