முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட பெருவெள்ளம் - பல லட்சம் பேர் பரிதவிப்பு

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் கடும் மழை பெய்து வருவதால் வீடு, வாசல்களை இழந்து மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
பீகாரை பொருத்தமட்டில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 69.81 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பீகார் முதல்வர் ஆய்வு

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் நிதீஷ் குமார் பார்வையிட்டார். சுதந்திர தின உரையில் பெருத்த வெள்ள பாதிப்பு கவலையை அளிக்கிறது. வட பீகாரில் உள்ள ஆறுகள் அபாய கட்டத்தை மீறி வெள்ள நீர் செல்கிறது. இந்த வெள்ள பாதிப்பால் ஏராளமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் நிதிஷ்குமார்.

56 பேர் பலி

பீகாரில் மழை நீரில் அடித்து செல்லப்பட்டு 56 பேர் உயிரிழந்துவிட்டனர். ரயில் தண்டவாளங்கள் முழுவதும் தண்ணீரில் தத்தளித்துள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 1.61 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களில் 85,949 பேர் பல்வேறு பகுதிகளில் உள்ள 343 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாமில் நிலை மோசம்

கடந்த 10-ஆம் தேதி முதல் அஸ்ஸாமில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகிவிட்டனர். 3,192 கிராமங்களில் உள்ள 31, 59,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு ராணுவத்தினர், தேசிய பாதுகாப்பு படையினர், சிஆர்பிஎஃப் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

191 படகுகள்

அஸ்ஸாமில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க 191 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அஸ்ஸாம் வெள்ளம் குறித்து முதல்வர் சர்வானந்த சோனோவாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

மேற்கு வங்கம்

வடக்கு மேற்கு வங்கத்தில் 5 மாவட்டங்கள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. இங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உள்ளது. லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 60,000 பேர் ஜல்பைகுரி மற்றும் அலிபுர்துவார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

மேற்கு வங்கத்தில் ஆறுகள் அபாய கட்டத்தை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகின்றன. மீட்பு பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து