முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமெடி நடிகர் வாசு உடல்நிலை கவலைக்கிடம்

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      சினிமா
Image Unavailable

மதுரை :  காமெடி நடிகர் 'அல்வா' வாசுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவரது முழுப்பெயர் வாசுதேவன்.

'அமைதிப்படை' படத்தில் சத்யராஜுக்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, அதன்மூலம் 'அல்வா' வாசு எனப் பிரபலமானவர் நடிகர் வாசு. இவர், வடிவேலுவுடன் சேர்ந்து பல படங்களில் காமெடி செய்து மக்களை சிரிக்கவைத்தவர். இவர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, வாழ்க்கை சக்கரம்' படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர்.  சிவாஜி, மற்றும் நடிகர் சத்யராஜுடன் பல படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இவர் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலமானவை.

உடல்நிலை மோசம் :

கல்லீரல் பாதிப்பால் கடந்த ஆறு மாதங்களாக, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்றுவந்தார். நேற்று, அல்வா வாசுவின் மனைவி அமுதாவிடம், 'அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை, விரைவில் உயிர் பிரிந்துவிடும். அதனால் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம்' என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவர்களுக்கு, கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளார்.

குடும்பப் பின்னணி :

சினிமா பின்னணி ஏதும் இல்லாத ஒரு வசதியான கிராமத்துக் குடும்பத்திலிருந்து வந்து குழந்தை நட்சத்திரமாக 70-களின் மத்தியில் அறிமுகமானார் அல்வா வாசு. அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்ததும் சினிமாத் துறையில் இருக்கும் தனது நண்பனை சந்திக்கச் சென்ற அல்வா' வாசுவும் சினிமாதான் இனி வாழ்க்கை' என சென்னையிலேயே தங்கிவிட்டார். நடன உதவியாளராகவும் அதன் பின்னர் சிறிய வேடங்களில் தோன்றும் நடிகனாகவும் மாறினார். ஆனால் இவருக்கு கதை எழுதும் திறமை, கற்பனை வளம் அதிகம். ஆகவே, இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.

மணிவண்ணனின் செல்லப்பிள்ளை :

மணிவண்ணனிடம் பணியாற்றிய சுந்தர்.சி. போன்றோர் பெரிய இயக்குனர்கள் ஆகிவிட, இவர் தொழிலில் கவனம் செலுத்தாமல் இயக்குனருக்கு செல்லப் பிள்ளை ஆகிப் போனார்.  வாசு இல்லாமல் இயக்குனர் மணிவண்ணன் சாப்பிடுவது கூட இல்லை என்கிற அளவிற்கு பாசம் காட்டினார்.  மணிவண்ணன் தனது படத்தில் ஓரிரு காட்சிகளில் நடிக்க வைத்தார். 'அமைதிப்படை' படத்தில் சத்யராஜுக்கு அல்வா கொடுக்கும் காட்சி இவருக்குக் கொஞ்சம் கை கொடுத்தது. பிறகு, வடிவேலு உருவாக்கிய காமெடி டீமில் அல்வா வாசு சேர்ந்தார். ஐந்து வருடங்களுக்கும் மேல் தொடர்ச்சியாக நடித்துப் பட்டையைக் கிளப்பினார் வாசு.

உடல்நலக் குறைவு :

வடிவேலு அரசியலில் இறங்கி வாய்ப்புகள் இழந்ததால் வாசுவுக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வடிவேலுவை மட்டுமே நம்பி இருந்த பல நடிகர்கள் மீண்டும் வறுமையில் சிக்கினார்கள். அதன்பிறகு, கல்லீரல் பாதிப்படைந்த வாசு கடந்த ஆறு மாதங்களாகச் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து