முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் சுதந்திர தின உரைக்கு கூட்டணி கட்சி சிவசேனா கண்டனம்

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      அரசியல்
Image Unavailable

மும்பை, நாட்டின் 71-வது சுதந்திர தினத்தன்று பிரதமர் உரையாற்றிய விதத்திற்கு பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சுதந்திர தினம் நேற்றுமுன்தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடி ஏற்றிவைத்து  சுமார் 55 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது காஷ்மீர் பிரச்சினைக்கு புல்லட் குண்டுகள் மற்றும் வன்முறை மூலம் தீர்வுகாண முடியாது என்றார். மேலும் அவர் கூறுகையில் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண அந்த மாநில மக்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்றார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநில மக்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்றால் அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டப்பிரிவை ரத்து செய்ய தயாரா என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா சவால் விடுத்துள்ளது. இதற்கு முன்பு யாருக்கும் எந்த மாதிரி ஆச்சரியத்தை ஏற்படுத்தும் யோசனை உருவாகாதது ஏன் என்று  சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாமனா தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

பிரதமரின் இந்த யோசனையை நடைமுறைப்படுத்தட்டும். அரசியல் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கட்டும். நாட்டின் இதர பகுதியில் உள்ள மக்கள் காஷ்மீருக்கு சென்று அந்த மாநில மக்களை அரவணைக்கட்டும். நம்பிக்கை என்ற அடிப்படையில் வன்முறை நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் முஸ்லீம் மக்கள் மட்டுமல்லாது இந்துக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் இந்து சமுதாயத்தில் ஒரு பிரிவினர் வன்முறையாளர்களாகவும் தீவிரவாதிகளாகவும் மாறியுள்ளனர். அவர்களை எச்சரிப்பது மட்டும் போதாது. உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது, ஜிஎஸ்டி முறை அமுல்படுத்தப்பட்டது மாதிரி வந்தே மாதரம் பாடலை பாட மறுப்பவர்கள் மீது மத்திய அரசு ஏன் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியர்களின் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று கூறியதை வரும் 2 ஆண்டுகளில் பிரதமர் மோடி நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம் என்றும் அந்த தலையங்கத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து