முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்: நல்லதே நடக்கும் - முதல்வர் எடப்பாடி நம்பிக்கை

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி : நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட முன்வரைவுக்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் இசைவு தெரிவித்ததை அடுத்து, மத்திய சட்ட அமைச்சகம் தமிழக அரசின் முன்வரைவுக்கு நேற்று ஒப்புதல் அளித்தது. பிறகு, இந்த வரைவு மத்திய சுகாதாரத்துறை, உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு பின் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. தமிழக அரசு எடுத்த முயற்சி காரணமாக, கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தது. இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீட் மதிப்பெண் அடிப்படையில் நடந்தது.

நிர்மலா சீதாராமன் ...

இந்நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு தர மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதையடுத்து கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு பெறுவதற்கான அவசர சட்ட வரைவை சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய உள்துறை அமைச்சகத் திடம்  சமர்ப்பித்தார்.

சட்ட அமைச்சகம் ....

இந்த சட்ட வரைவு தொடர்பாக அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபாலிடம் மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது. நேற்று பிற்பகல் தமிழக அரசின் அவசர சட்ட வரைவை ஆதரித்து மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கே.கே.வேணுகோபால் குறிப்பு அனுப்பினார். இதனை தொடர்ந்து தமிழக அரசின் சட்ட முன் வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

இறுதி முடிவு ....

இந்நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு இன்று இறுதி முடிவு எடுக்கும் என தெரிகிறது. இந்த முடிவு தமிழக அரசின் கோரிக்கைக்கு சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, தமிழக அரசின் அவசர சட்ட முன் வரைவு சுகாதரத்துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சக ஒப்புதலுக்கு அனுபப்படும். பின்னர், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் மருத்துவ மாணவர் சேர்க்கையில், 2017-2018 கல்வியாண்டில் தமிழக மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) விதிகளின்படி எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 31-ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லதே நடக்கும்

இதற்கிடையே, கடலூரில் நேற்று நடைப்பெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு விவகாரத்தில், நல்லதே நடக்கும் என்று தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

நீட்தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தப்பிறகு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வை நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு நீட்தேர்வுக்கு ஆதரவான மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பின்பற்றி நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை விரைவில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை அவசரமாக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து