முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது தமிழ்நாட்டின் நன்மைக்காகத்தான்- முதல்வர் எடப்பாடி விளக்கம்

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

கடலூர் : டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது தமிழ்நாட்டின் நன்மைக்காகத்தான் என்று கடலூர் விழாவில் முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.

கடலூரில்...

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை தமிழக அரசு நடத்தி வருகிறது. மதுரையில் துவங்கிய இந்த விழா திருப்பூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிறகு நேற்று கடலூரில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கடலூரின் பெருமைகளை பற்றி முதல்வர் பேசினார். விழாவில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். புதிய திட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர்

விழாவில் அவர் பேசியதாவது:-

இன்றைக்கு அம்மா (ஜெயலலிதா) என்னென்ன கனவு கண்டார்களோ அதையெல்லாம் அம்மாவினுடைய அரசு நிறைவேற்றி வருகின்றது.  விவசாயிகள் இந்த நாட்டிற்கு தூணாக விளங்குகின்றார்கள். விவசாயம் செழிக்க வேண்டும், விவசாயிகளுக்கு தேவையான நன்மைகள் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையோடு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அம்மா வழியில் வந்த அம்மாவினுடைய அரசு விவசாயிகள் நன்மை கிடைக்கவேண்டும் என்பதற்காக ஆங்காங்கே இருக்கின்ற ஏரிகள், குளங்களையெல்லாம் தூர்வார வேண்டும் என்பதற்காக குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை அறிவித்தது. 

விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்

இது விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டம். இந்த திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கி 1519 ஏரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தத் திட்டத்தில் முழுக்க முழுக்க விவசாயிகள் பங்களிப்போடு, அரசும் சேர்ந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.  ஆங்காங்கே இருக்கின்ற ஏரிகள், குளங்களில் இருக்கின்ற வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக அரசு தருகின்றது.  இந்த வண்டல் மண்ணை விவசாயிகள் அள்ளி தங்கள் நிலங்களுக்கு எருவாக இடுகின்றபோது, அந்த விவசாயிகள் பயிரிடுகின்றபொழுது, அதில் அதிகமான விளைச்சல் பெற்று, அதிகமான லாபம் பெறக்கூடிய சூழ்நிலையை அம்மாவினுடைய அரசு ஏற்பாடு செய்திருக்கின்றது. 

ரூ.300 கோடி ஒதுக்கீடு

இதுவரைக்கும் எந்த அரசும் செய்ய முடியாத திட்டம். இன்றைக்கு விவசாயிகளுடைய மேம்பாட்டிற்காக, விவசாயிகளுடைய வளர்ச்சிக்காக, விவசாயிகளுடைய வளர்ச்சி மேலும், மேலும் சிறப்படைய, விளைச்சல் அதிகரிக்க, வருமானம் இரட்டிப்பாக பெறுவதற்காக, இந்தத் திட்டத்தை அம்மாவினுடைய அரசு கொண்டு வந்திருக்கிறது.  இந்தத் திட்டம் சிறப்பான திட்டம் என்று விவசாயிகள் மத்தியில் இருந்து கோரிக்கைகள் வந்ததன் விளைவாக, மேலும் இந்த திட்டத்திற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கி, தமிழகத்தில் 2065 ஏரிகள் இந்தத் திட்டத்தின் மூலமாக எடுத்துக் கொள்ள இருக்கின்றது.  இந்தத் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலமாக, ஆங்காங்கே இருக்கின்ற ஏரிகள், குளங்கள் மூலமாக விவசாயிகள் வண்டல்மண் அள்ளுகிறார்கள். 

மழைநீர் வீணாகாமல் ...

வண்டல்மண் அள்ளுகின்ற பொழுது, தூர்வாருகின்ற பொழுது, அந்தக் குளம் ஆழமாகின்றது.  ஆகவே, பருவகாலங்களிலே பெய்கின்ற மழைநீர் முழுவதும் அந்த ஏரி, குளங்களில் சேமிக்கப்படுகிறது. வறட்சியான காலத்தில் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயத்திற்கு தேவையான நீர், குடிதண்ணீருக்கு தேவையான நீர் இந்தத் திட்டத்தின் மூலமாக கிடைக்கிறது.  இந்த அற்புதமான திட்டத்தால் விவசாயிகளும் பயன்பெறுகிறார்கள், பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் பாதுகாக்கின்ற திட்டம் குடிமராமத்து திட்டம் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். 

தடுப்பணைகள் கட்ட நிதி...

அதேபோல அம்மாவினுடைய அரசு மூன்றாண்டுகளுக்கு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்திருக்கிறது.  நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலே 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்தோம். ஆங்காங்கே இருக்கும் ஓடைகளின், நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு, பருவகாலங்களிலே பெய்கின்ற மழைநீர் ஆங்காங்கே சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர் உயரவேண்டும் என்பதற்காக மூன்றாண்டுகளிலே தடுப்பணை கட்டுவதற்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முதல்கட்டமாக, அம்மாவினுடைய அரசு 350 கோடி ரூபாய் இந்த ஆண்டு இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக, ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு, நீர்நிலைகளை உயர்த்தி, மக்களுக்கு தேவையான நீரை சேமிக்கக்கூடிய வகையில் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். 

விவசாயிகளுக்கு முன்னுரிமை ...

அதுபோல நீர்வள, நிலவள திட்டத்தின் மூலமாக இன்றைக்கு, தமிழகம் முழுவதும் 220 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.  இதற்காக 787 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே, இத்திட்டத்தின் மூலமாக வாய்க்கால்கள், ஏரிகள், மதகுகள் புதுப்பிக்கப்படும்.  இதன் மூலமாக, பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்துக் கொள்ளப்படும்.  இப்படிப்பட்ட அற்புதமான திட்டத்தை  விவசாயிகளுக்கு வழங்கிய அரசு அம்மாவினுடைய அரசு.  விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற அரசு இந்த அரசு என்பதை இந்த நேரத்திலே சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.  அதுமட்டுமல்ல.  கடலூர் மாவட்டம், விவசாயம் நிறைந்த மாவட்டம், விவசாயத்தை நம்பி வாழ்கின்ற அதிகமான விவசாயிகள் இருக்கின்ற மாவட்டம், விவசாயிகள், விவசாய தொழில்கள் அதிகமாக இருக்கின்ற பகுதி இந்த கடலூர் மாவட்டம். 

ரூ.2244 கோடி நிவாரண...

ஆகவே, கடலூர் மாவட்டத்தில் ஏராளமான திட்டங்களை அம்மா வாரிவாரி கொடுத்திருக்கின்றார்கள் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன். அதுமட்டுமல்ல.  கடந்த 140 ஆண்டுகாலமாக இல்லாத கடுமையான வறட்சி, பருவமழை பொய்த்து விட்டது.  அப்படி இருந்தும்கூட, தமிழகத்தில் விலைவாசி ஏறாமல் அம்மாவினுடைய அரசு பார்த்துக் கொண்டது.  இப்படிப்பட்ட கடுமையான வறட்சியிலும் ஆங்காங்கே குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து,  மக்களுக்குத் தேவையான குடிநீர் வழங்கிய அரசு இந்த அம்மாவினுடைய அரசு என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.  வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக 2244 கோடி ரூபாய் அளித்து, அந்தத் திட்டம் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

ஒரே மாநிலம் தமிழ்நாடு

அதே போல, கல்விக்கு முன்னுரிமை. ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி, கல்வியை மையமாக தான் வைத்திருக்கின்றது. எந்த ஒரு நாட்டிலும், எந்த ஒரு மாநிலத்திலும் கல்வி அறிவு அதிகமாக இருக்கின்றது என்று பார்த்தால், அங்கே வளம் பெறும், சமூக பொருளதார மேம்பாடு அடையும்.  அங்கே அமைதி, அன்பு, திறமை இருக்கும்.  அத்தனையும் வேண்டுமென்றால் கல்வி வேண்டும். அப்படிப்பட்ட கல்வியை அம்மா தந்தார்கள். அம்மா, கல்வியில் ஒரு புரட்சியை, மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.  இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கல்வியில் அதிக நிதி ஒதுக்கீடு செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். 

ஏனென்று சொன்னால், ஒரு நாடு அமைதியாக இருக்க வேண்டும் என்று சொன்னால், ஒரு மாநிலம் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொன்னால், கல்வி அறிவு தேவை.  அதற்கு அம்மா எடுத்த நடவடிக்கை ஏராளம். அம்மா கல்வியிலே புரட்சி ஏற்படுத்தியதன் விளைவு, இன்றைக்கு நம்முடைய மாணவர்களுடைய தரம் உயர்ந்திருக்கின்றது, உயர்கல்வி படிப்பவர்களுடைய எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது. ஆகவே 2011 ஆம் ஆண்டு அம்மா முதல்வராக பொறுப்பேற்ற பொழுது, அப்பொழுது 100க்கு 21 சதவீதம் உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தார்கள்.  ஆனால், அம்மா கல்வியில் எடுத்த நடவடிக்கை, கல்வியில் ஏராளமான திட்டங்களை நம்முடைய மாணவர்களுக்கு கொடுத்ததன் விளைவாக இன்றைக்கு கல்வியினுடைய சதவீதம், உயர்கல்வி படிப்பவர்களுடைய எண்ணிக்கை 44.3 சதவீதமாக உயர்ந்து இன்றைக்கு தமிழகம் கல்வியிலே ஒரு உயர்ந்த மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. 

65 புதிய கல்லூரிகள் ...

இந்திய அளவில் பார்க்கும் பொழுது 24.5 தான்.  தமிழ்நாட்டில் தான் உயர்கல்வி படிப்பவர்களுடைய எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது. அதுமட்டுமல்ல, அம்மா ஆங்காங்கே கிராமத்திலே வாழ்கின்ற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதாரண குடும்பத்திலே இருக்கின்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிக்கவேண்டும், பட்டப் படிப்பு படிக்கவேண்டும் என்பதற்காக அம்மாவினுடைய 6 ஆண்டு கால ஆட்சியிலே ஏராளமான கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழகத்திலே நிறுவினார்கள். ஆறாண்டு கால ஆட்சியிலே 4 பொறியியல் கல்லூரிகள், 16 பாலிடெக்னிக் கல்லூரிகள், 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என்று மொத்தம் 65 கல்லூரிகள் துவக்கப்பட்ட அரசு அம்மாவினுடைய அரசு.  இன்றைக்கு குறைந்த கட்டணத்திலே உயர்கல்வியை நம்முடைய மாணவச் செல்வங்கள் அம்மாவினுடைய ஆட்சியில் தான் கல்வி கற்றார்கள். 

சரித்திரம் கிடையாது

எனவே தான் இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலும் ஆறாண்டு காலத்தில் இத்தனை கல்லூரிகளை உருவாக்கிய சரித்திரம் கிடையாது. அம்மா தான் செய்தார்கள்.  இன்றைக்கு வசதி படைத்தவர்கள் எல்லாம் தனியார் கல்லூரிகளில் படித்து, பட்டம் பெற்று வேலைக்கு சென்று விடுகிறார்கள்.  ஆனால் ஏழை குடும்பத்திலே பிறந்த தாழ்த்தப்பட்ட மாணவ மாணவிகள் எல்லாம் தனியார் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாத சூழ்நிலை.  இப்படிப்பட்ட மாணவர்களும் சமமாக இருக்கவேண்டும் என்பதற்காக அம்மா அரசுக் கல்லூரியை உருவாக்கி, இன்றைக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பதற்கு வித்திட்டவர் அம்மா. 

இந்த ஆண்டு 8 கல்லூரிகள்...

அம்மா வழியில் நடக்கும் அம்மாவினுடைய அரசு  இந்த ஆண்டு 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொடுத்திருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, உங்களுடைய மாவட்டத்திலும் அம்மாவினுடைய அரசு ஒரு அரசு மற்றும் அறிவியில் கல்லூரியை உங்களுடைய பகுதிக்கு கொடுத்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.  காட்டுமன்னார் கோயில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அம்மாவினுடைய அரசு தந்திருக்கின்றது, இந்த ஆண்டே துவக்கப்பட்டிருக்கின்றது.  ஆகவே ஏழை மாணவன் படிக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டத்தை கொடுத்திருக்கின்றோம்.  அதேபோல, 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 3 பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள் என்று மொத்தம் 11 கல்லூரிகள் துவங்கப்பட்டிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழ்நாட்டின் நன்மைக்குத்தான்...

அதேபோல, அம்மாவினுடைய ஆட்சியிலே மீனவர்களை விடுதலை செய்த அரசு அம்மாவினுடைய அரசு.  சிலபேர் பேசுகின்றார்கள். அடிக்கடிடெல்லிக்கு சென்று பாரதப் பிரதமரை சந்திக்கிறார்கள்,  என்ன சாதித்தார்கள் என்றெல்லாம் சொல்கின்றார்கள்.  நாங்கள் அடிக்கடி பிரதமரை சந்தித்ததன் விளைவு தான் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.  அடிக்கடி டெல்லி சென்று பாரதப் பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும்  சந்திப்பது தமிழ்நாட்டினுடைய நன்மைக்குத் தான் என்பதை இந்த நேரத்திலே கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன். 

அதே போல, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி போன்ற பகுதிகளில் ஏழை, எளியோர்கள் வீடுகட்டுவதற்காக 2,10,000 ரூபாய் மானியமாக அரசின் சார்பாக கொடுக்க இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.  நெசவாளர்களுக்கு மின்சார சலுகை, விசைத்தறி நெசவாளர்களுக்கு விசைத்தறி தொழில் செய்பவர்களுக்கு மானியத்திலே மின்சாரம், இப்படி பல்வேறு திட்டங்களை அம்மாவினுடைய அரசு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து