முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

சென்னை: டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த முதலாவது தகுதி சுற்றில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முதல் தகுதிச்சுற்று
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, 2-வது இடம் பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீசை எதிர்கொண்டது. இலங்கை டெஸ்ட் தொடரில் ஆடிய அபினவ் முகுந்த் தாயகம் திரும்பிய உடனே தூத்துக்குடி அணியில் இணைந்து களம் இறங்கினார்.

2 விக்கெட்டுகள்...
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோபிநாத், தலைவன் சற்குணம் அடியெடுத்து வைத்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 2-வது ஓவரில் கோபிநாத் (1 ரன்) வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் பந்து வீச்சில் அஸ்வின் கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4-வது ஓவரில் தலைவன் சற்குணமும் (11 ரன்கள்) அதிசயராஜ் டேவிட்சனின் பந்து வீச்சில் வீழ்ந்தார். 13 ரன்னுக்குள் கில்லீஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

கார்த்திக் 33 ரன்...
3-வது விக்கெட்டுக்கு வசந்த் சரவணன், கார்த்திக்குடன் இணைந்தார். கார்த்திக் அடித்து ஆடினார். ‘பவர் பிளே’ முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து இருந்தது. அணியின் ஸ்கோர் 50 ரன்னை எட்டிய போது வசந்த் சரவணன் (7 ரன்) அஸ்வின் கிறிஸ்ட் பந்து வீச்சில் அவுசிக் சீனிவாசிடம் கேட்ச் ஆனார். தொடர்ந்து கார்த்திக் 26 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்கினார்.

பின்வரிசை வீரர்கள் ...
தூத்துக்குடி அணியின் நேர்த்தியான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. கில்லீஸ் வீரர்கள் நிதானத்தை இழந்து அவசரகதியில் ஷாட்டுகளை அடிக்க முற்பட்டது, சரிவுக்கு வித்திட்டது. சசிதேவ் 2 ரன்னிலும், கேப்டன் சதீஷ் 2 ரன்னிலும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அந்தோணி தாஸ் மட்டும் கொஞ்சம் ஆறுதல் அளித்தார். அவர் 27 ரன்கள்(17 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். பின்வரிசை வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. 20 ஓவர் களை முழுமையாக ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 114 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. யோமகேஷ் 17 ரன்னுடன் (23 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். தூத்துக்குடி அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

வாஷிங்டன் சுந்தர் அபாரம்
அடுத்து 115 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தூத்துக்குடி அணி அதிரடியில் வெளுத்து கட்டியது. வாஷிங்டன் சுந்தர், யோமகேஷின் முதல் ஓவரிலேயே 3 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விளாசி அசத்தினார். அதே போல் தமிழ்குமரனின் ஓவரில் 4 பவுண்டரியும், ஒரு சிக்சரும் விரட்டினார். அவரது தடாலடியான ஷாட்டுகளால் தூத்துக்குடி அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. வெறும் 15 பந்துகளில் அவர் அரைசதத்தை கடந்தார். டி.என்.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக
அரைசதம் இது தான். மறுமுனையில் அவரது ஆட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் கவுசிக் காந்தி 9 ரன்னில் ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் சந்தித்த முதல் பந்திலேயே கிளன் போல்டு ஆனார். இருப்பினும் தூத்துக்குடியின் வீறுநடைக்கு கில்லீஸ் பவுலர்களால் எந்த வகையிலும் முட்டுக்கட்டை போட முடியவில்லை.

8 விக்கெட் வித்தியாசத்தில் ...
தூத்துக்குடி அணி 12.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதுவரை தோல்வியே சந்திக்காத தூத்துக்குடி அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிசுற்றுக்கு வந்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 73 ரன்களுடன் (36 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), அபினவ் முகுந்த் 33 ரன்களுடனும் (27 பந்து, 4 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

இன்னொரு வாய்ப்பு ...
ஆல்-ரவுண்டராக ஜொலித்த வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த தொடரில் இதுவரை 445 ரன்கள் குவித்துள்ள அவர் ஒரு சீசனில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். தோல்வி அடைந்தாலும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி காணும் அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடும். இந்த ஆட்டம் நாளை நெல்லையில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து