முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சதுர்த்தி சிலைகளை கரைக்கும் வழிமுறைகள் ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் அறிவிப்பு

வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அமைக்கப்படும் விநாயகர் சிலைகள் கரைக்கும் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
       சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். நமது கொண்டாட்டங்களினால் சுற்றுச்சூழல், குறிப்பாக நீர்நிலைகள் மாசுபடாமல் பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. எனவே, பொது மக்கள் வருகின்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றின் வழிமுறைகளை பின்பற்றுவது நமது நீர் நிலைகள் மாசடைவதை தடுக்க மிகவும் பேருதவியாக அமையும். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்யப்பட்டு, சுடப்படாததாகவோ, கிழங்கு மாவு போன்ற வேதிப்பொருட்கள் கலக்காத மூலப்பொருட்களை கொண்டோ தயாரிக்கப்பட வேண்டும். இவற்றில் பூசப்படும் வர்ணங்கள் நீரில் கரையும் தன்மையுடையதாகவும்இ எவ்வித நச்சு தன்மையற்றதாகவும் இயற்கை வர்ணங்களை  உடையதாகவும் இருத்தல் வேண்டும் நச்சுத்தன்மையுடைய, மக்கும் தன்மையற்ற வேதிப்பொருட்களை கொண்டு தாயாரிக்கப்படும் வர்ணங்களை விநாயகர் சிலைகளில் பயன்படுத்துதல் கூடாது.
       விநாயகர் சிலைகள் காவல் துறையினரால் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவப்பட வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ள இடம் மற்றும் ஊர்வலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. மேலும், ஊர்வலம் மாலை 6 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது.   விநாயகர் சிலைகள் அனுமதி அளிக்கப்பட்ட நீரிநிலைகளில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும்.  சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் முன்னர் அவற்றில் காணப்படும் பூக்கள், மாலை, இலை, துணி மற்றும் பிற ஆபரணங்கள் நீக்கப்பட வேண்டும். இவற்றில் மக்கும் பொருட்களை உரமாக்கி பயன்படுத்தலாம். விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பதனால் சுற்றுச்சூழல் மாசு படாதிருப்பதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வருவாய்துறை மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் ஆகியவை பரிசீலித்து மாவட்டத்தில் பின்வரும் இடங்களில் கரைக்கலாம் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இதன்படி தொண்டி கடற்கரை,பாசிப்பட்டிணம் கடற்கரை, தாமோதிரப்பட்டிணம் கடற்கரை, திருப்பாலைக்குடி கடற்கரை, தெற்கு வளமாவூர் கடற்கரை, உப்பூர் மோர்பண்ணை கடற்கரை, தேவிப்பட்டிணம் நவபாஷன கடற்கரை, முடிவீரன்பட்டினம் கடற்கரை, நொச்சிவயல் ஊரணி, ராமநாதபுரம், வெள்ளரி ஓடை ஊரணி, தலைதோப்பு கடற்கரை, வேலுநகர் ஊரணி, ஆற்றங்கரை ஆறு மற்றும் கடல், தர்காவலசை கடற்கரை, பிரப்பன்வலசை கடற்கரை, மண்டபம் கடற்கரை, பாம்பன் பாலம் கடற்கரை, வில்லுண்டி தீர்த்தம், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை, கீழக்கரை அலவாய்க்கரைவாடி கடற்கரை, சின்ன மாயகுளம் கடற்கரை, சின்ன ஏர்வாடி கடற்கரை, கொட்டக்குடி ஆறு, குதக்கோட்டை பெரிய ஊரணி, பெரியப்பட்டிணம் இந்திரா நகர் கடற்கரை, முத்துப்பேட்டை கடற்கரை, களிமண்குண்டு சண்முகவேல்பட்டினம் கடற்கரை, உத்திரகோசமங்கை வராகி அம்மன் கோவில் ஊரணி, பரமக்குடி பெருமாள் கோவில் அருகில் வைகை ஆறு, கமுதி செட்டியூரணி, ராமசாமிபட்டி வேலுவூரணி, மேலமுந்தல் கடற்கரை, வாலிநோக்கம் கடற்கரை, எஸ்.மாரியூர் கடற்கரை, நரிப்பையூர் கடற்கரை, அம்பலத்தான் ஊரணி, திருவரங்கம், புளியன்குடி கண்மாய், முதுகுளத்தூர். பெரிய ஊரணி, முதுகுளத்தூர். சங்கரபாண்டி ஊரணி,முதுகுளத்தூர் ஆகியவை ஆகும்.
   எனவே, பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் மட்டும் குறிப்பிட்ட வழி முறைகளின் படி நீர்நிலைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்ததாத வகையில் தயாரிக்கப்பட்டு விநாயகர் சிலைகளை மட்டும் கரைத்து, எதிர்வரும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து