முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பராமரிப்புத்தொகை ரு.5 ஆயிரமாக உயர்வு - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : கிராம நிர்வாக அதிகாரிகளுக்கான கணக்குப் பராமரிப்பு மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களை பராமரிப்பதற்கு தற்போது வழங்கப்படும் தொகை ரூ.2500-ல் இருந்து ரூ.5 ஆயி¬ரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் நில அளவைப் பதிவேடுகள் துறையில், காலியாக உள்ள 546 புல உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நிர்வாக அமைப்பு மாற்றம்

கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவைத்துறை அலுவலர்கள், கிராமப்புற உதவியாளர்கள் சங்கங்களின் சார்பில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் அடிப்படை நிர்வாகம் கிராமத்திலிருந்துதான் தொடங்குகிறது. இந்தியாவின் வளர்ச்சி என்பது இந்தியாவிலுள்ள அனைத்து கிராமங்களின் ஒன்றிணைந்த வளர்ச்சியில் தான் இருக்கிறது. எனவேதான், கிராமங்களின் நிர்வாகத்தை சீரமைப்பதிலும், வளப்படுத்துவதிலும், ஆட்சியாளர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். 30 வருடங்களுக்கு முன்னர் பல்வேறு விதமான கிராம நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள முன்சீப், கர்ணம் என்ற அலுவலர்களும் தலையாரி, வெட்டியான், நீர்க்கட்டி என்ற பெயரில் உதவியாளர்களும் கிராமங்களில் பகுதிநேர பணியில் இருந்தனர். மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப, மக்கள் சேவையை மேம்படுத்தும் நோக்குடன் 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தான் கிராம நிர்வாக அமைப்பை மாற்றியமைத்தார்.

முன்பு முன்சீப், கர்ணம் போன்ற கிராம நிர்வாக பதவிகள் அந்த கிராமத்தைச் சார்ந்த செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சார்ந்தவர்கள், பரம்பரை பரம்பரையாக பணிபுரிந்து வந்தார்கள். அதனை அரசுப்பணியாக மாற்றி, அந்தப் பதவியில் படித்த இளைஞர்களைக் கொண்டு நிரப்ப ஆணையிட்டார். பகுதிநேர அலுவலர்களுக்குப் பதிலாக, முழு நேர கிராம நிர்வாக அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இப்பதவிகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வரையறைக்குள் கொண்டு வரப்பட்டு, நேரடி நியமனம் ஆக மாற்றப்பட்டது. இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுத்து, அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன்

கிராம நிர்வாகத்தையும் நவீனப்படுத்தி, வலிமைப்படுத்தி, அரசுக்கு நல்ல பெயர் ஈட்ட வழிவகை செய்யப்பட்டது. அதைப் போலவே, அரசின் திட்டங்கள் கிராமத்தின் கடைக்கோடியில் இருக்கிற ஒரு பாமரனுக்கும் சென்று சேருகிறது என்றால், அதற்கு முழு முதற்காரணமாக இருப்பவர்கள், இந்த கிராம நிர்வாக அலுவலர்கள்தான். தற்போது, தமிழ்நாடு முழுவதும் 12,616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரிகிறார்கள். கிராம நிர்வாக அலுவலருக்கு உதவியாக கிராம உதவியாளர்களை முழுநேர அரசுப்பணியாளர்களாக மாற்றி அமைத்து, முதன்முதலில் 1995-ம் ஆண்டு ஆணை பிறப்பித்தவர் அம்மா தான். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் கிராம உதவியாளர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறார்கள்.

கிராம நிர்வாகத்தின் பங்கு

கிராம நிர்வாகத்தை கிராம நிர்வாக அலுவலர்களும், அவர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்களும், சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட கிராமத்தின் சட்ட-ஒழுங்கு பராமரிப்பு, பொது சுகாதாரம், பொதுச் சொத்துக்கள் பராமரிப்பு, தேர்தல் பணிகள் மேற்கொள்வது, கனிம வளங்களைப் பாதுகாப்பது, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, இயற்கை இடர்பாடுகளின் போது விரைந்து செயல்பட்டு மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவது, அரசின் நலத்திட்டப் பணிகளை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்ப்பதற்கான களப்பணி மேற்கொள்வது போன்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், அடையாளச் சான்றிதழ்கள், அனுபோகச் சான்றிதழ், அடங்கல் படிவங்கள், நில உரிமைச் சான்றிதழ் வழங்குவது , வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சொத்து மதிப்புச் சான்றிதழ், ஆதரவற்ற குழந்தைச் சான்றிதழ், ஆதரவற்ற விதவைச் சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டவர் சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்கள் வழங்க சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுக்கு பரிந்துரை செய்வது, நில உடமைகளை பராமரித்தல், மரம் மற்றும் நில வரிகளை வசூல் செய்தல், ஒவ்வொரு மாதமும் பயிர் ஆய்வுப் பணி மேற்கொண்டு, அடங்கல் எழுதி, அது தொடர்பான கணக்குகளை முறையாக எழுதி பராமரிப்பது போன்ற பணிகளையும் கிராம நிர்வாக அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.

அதிகாரம் படைத்தவர்கள்...

பட்டா மாற்ற விண்ணப்பங்களைப் பெறுவது, உட்பிரிவு விண்ணப்பங்களைப் பெறுவது, அதனை உரிய அலுவலருக்கு பரிந்துரை செய்வது, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோரிய விண்ணப்பங்களைப் பெற்று, அதனை உரிய அலுவலருக்கு பரிந்துரை செய்வது என அனைத்திற்கும் கிராம நிர்வாக அலுவலகத்தின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதிகாரம் படைத்தவர்கள் நீங்கள், ஆகவே, ஒரு சாமானிய மனிதருக்கும் சரி, எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், எந்த சான்றிதழ் பெறவேண்டும் என்றாலும் கிராம நிர்வாக அலுவலரிடம் தான் பெற முடியும் என்ற சூழ்நிலை உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு பெரிய அதிகாரம் படைத்தவர்கள் நீங்கள்.

'அம்மா திட்டம்'

அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிவாரண உதவிகள் மக்களுக்கு விரைவில் சென்றடைய ஏதுவாக 2013-ம் ஆண்டு அம்மாவால் ‘‘அம்மா திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும், மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று, அவர்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, உடனடியாக தீர்ப்பதில் கிராம நிர்வாகத்தின் பங்கு முக்கியமானதாகும். இதே போன்று, மாதந்தோறும் நடத்தப்படும் மனுநீதி நாள் முகாம்களிலும், மக்களின் குறைகளை உடனுக்குடன் களைவதில் கிராம நிர்வாகத்தின் பணி முக்கியத்துவம் பெறுகிறது.

நில அளவைத்துறையில்...

நில அளவைத் துறையைப் பொறுத்தவரையில் முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்தான் முறையான நிளஅளவைப் பணி துவங்கப்பட்டது. நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனரகம் கடந்த 150 ஆண்டுகளாக செம்மையாக பணியாற்றி வருகிறது. மதிப்புமிக்க நில ஆவணங்களை பாதுகாப்பதற்காகவும், துறை சார்ந்த பணிகளை கண்காணிப்பதற்காகவும் நவீன வசதிகளுடன் கூடிய தலைமை அலுவலகக் கட்டடம் 2001–ம் ஆண்டில் அம்மாவால் திறந்து வைக்கப்பட்டது.

வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள நிலஅளவைப் பிரிவுகள், நிலஅளவை குறியீடு மற்றும் நிலஆவணங்கள் பராமரித்தல், நிலஉரிமை மற்றும் பின்னர் அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றினை உரிய பதிவேடுகளில் பதிவு செய்தல் ஆகிய பணிகளுக்குப் பொறுப்பானவையாகும். நில உடமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட பணியாளர்களை ஊதிய ஏற்ற முறையில் நிலஅளவைத் துறையில் ஈர்த்துக் கொள்ள எம்.ஜி.ஆர். 1983-ம் ஆண்டு ஆணையிட்டார்.

எம்.ஜி.ஆரால் உருவாக்க....

நிலஅளவை பதிவேடுகள் துறையில் பராமரிப்பு பணியினை மேலும் செம்மைப்படுத்திட வட்ட அலுவலகங்களில் குறுவட்ட அளவர் மற்றும் நில ஆவண வரைவாளர் பதவிகள், 1987-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரால் புதியதாக உருவாக்கப்பட்டது. அம்மா விரைவு பட்டா மாறுதல் திட்டத்தினை 2011-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தினார். பொதுமக்களின் வசதிக்காக உடனடி பட்டா மாறுதல் மேற்கொள்வதற்கு ஏதுவான இத்திட்டம், நில அளவை அலுவலர்களின் கடின உழைப்பாலும், ஈடுபாட்டாலும் வெற்றி பெற்றது. கிராம நிர்வாக அலுவலரும், கிராம உதவியாளர்களும், நில அளவை அலுவலகர்களும் கிராமங்களில் மக்களோடு மக்களாக, இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்டு, கிராம மக்களோடு பின்னிப்பிணைந்து, நிர்வாகத்தையும் நன்றாக கவனித்துவருகிறார்கள் என்றால்.. உண்மையிலேயே அவர்களை நாம் மனதார பாராட்ட வேண்டும்.

எம்.ஜி.ஆர்., கிராமங்கள் தோறும் கிராம நிர்வாக அலுவலகங்கள் திறக்க ஆணையிட்டதைத் தொடர்ந்து முதன்முதலில் 2001ம் ஆண்டு 4000 கிராம நிர்வாக அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அம்மா, அறிவியல் யுகத்திற்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு கிராம நிர்வாகத்தை நவீனப்படுத்தினார். 2012ம் ஆண்டு முதல் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி மற்றும் அச்சுப்பொறிகளை வழங்கி, அதனை திறம்பட கையாள பயிற்சியும் வழங்க ஆணையிட்டார். இதன்மூலம், கிராம நிர்வாக அலுவலர்களின் பணித்திறனை மேம்படுத்தியதுடன், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வுகாண வழிவகை செய்தார்.

பல்வேறு திட்டங்கள்...

இன்றைக்கு மாவட்ட நிர்வாகம் தொய்வில்லாமல் நடைபெறுகிறது என்றால் அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது கிராமத்தில் இருக்கின்ற பலமான நிர்வாக அமைப்புதான். கிராம நிர்வாக அலுவலர்களும், கிராம உதவியாளர்களும் நில அளவை அலுவலர்களும் மனநிறைவோடு பணியாற்ற பல்வேறு திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே நினைவுகூற விரும்புகிறேன்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றியவர்களில் 20 விழுக்காட்டினர் கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு பெறலாம் என ஜெயலலிதா ஆணையிட்டார்.

அம்மாவின் ஆணைப்படி, 3 ஆயிரத்து 672 முன்னாள் கிராம அலுவலர்களுக்கான ஓய்வூதியம் ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து, இரண்டாயிரம் ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து, ஆயிரத்து 500 ரூபாயாகவும் 2014-ம் ஆண்டில் இருந்து உயர்த்தி வழங்கப்பட்டது. கிராம உதவியாளர்கள் 10-ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றிருந்து, 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களுக்கு 20 சதவீதம் கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கி 2014-ம் ஆண்டு முதல் அம்மா ஆணையிட்டார். 2013-14ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் விதி எண்.110ன் கீழ் அம்மா குறு வட்ட அளவர்களுக்கு 100 அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் கட்ட அறிவித்தார். இவை கட்டி முடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.

மகாத்மா காந்தியடிகள், ‘‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது” என்று கூறினார். இந்தியாவின் முன்னேற்றம் கிராமங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே, கிராம நிர்வாகத்தின் முதுகெலும்பாக பணியாற்றும் நீங்கள் அனைவரும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பாக பணிபுரிந்து நாட்டினை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டு, இந்த சிறப்பான விழாவினை ஏற்பாடு செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முக்கிய அறிவிப்புகள்...

நன்றியைத் தெரிவித்துக் கொண்டு நீங்கள் பல்வேறு கோரிக்கைகளை என்னிடமும், உங்களுடைய வருவாய்த்துறை அமைச்சரிடமும் அளித்தீர்கள். வருவாய்த்துறை அமைச்சர் என்னை சந்திக்கின்ற போதெல்லாம் உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமென்று கோரிக்கை வைத்துக் கொண்டே இருப்பார். அக்கோரிக்கைகளை அரசாங்கம் சார்பாக கவனமாக எடுத்துக் கொண்டு சில அறிவிப்புகளை இங்கே வெளியிட விரும்புகின்றேன்.

ரூ. 5 ஆயிரமாக ...

கிராம கர்ணம், கிராம முன்சீப் தேர்வில் 14.11.1980-க்கு முன்னர் தேர்ச்சி பெற்று, பின்னர் 2009-ம் ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்ட 747 கிராம நிர்வாக அலுவலர்களின் பணியை தகுதியின் அடிப்படையில் விரைவில் தகுதிகாண்பருவம் விளம்பி அரசால் ஆணையிடப்படும்.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணக்குப் பராமரிப்பு மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களை பராமரிப்பதற்கென 2004-ம் ஆண்டு முதல் ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் பராமரிப்புச் செலவுத் தொகை ரூ.2500-ஐ, தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ரூ.5 ஆயி¬ரம்- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

காலி பணியிடங்கள்...

வட்ட அலுவலகங்களில் இணைய வழி பட்டா வழங்கும் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட 254 கணினி பதிவேற்றுனர்களை அனைத்து வட்டங்களுக்கும், மேலும் ஓராண்டிற்கு நியமிக்கப்பட்டு 2017-18ம் ஆண்டிற்கு பணியமர்த்தி ஆணை வழங்கப்படும். வருவாய்த்துறையின் மூலமாக வழங்கப்படும் இணையதள சான்றிதழ்களின் பணிகளை மேற்கொள்ளவும், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் பணித்திறனை மேம்படுத்தவும் மற்றும் பொதுமக்கள் விரைவில் சான்றிதழ்களை பெறவும், எல்¬காட் நிறுவனம் மூலம் சிம் கார்டுடன் கூடிய 3ஜி / 4ஜி இணையதள வசதி மற்றும் எழுது பொருள் செலவினம் ஆகியவற்றினை அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் வழங்கப்படும். நில அளவைப் பதிவேடுகள் துறைக்கு ஒப்பளிக்கப்பட்ட 1,234 புல உதவியாளர் பணியிடங்களில், காலியாக உள்ள 546 புல உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

சொந்த உள்வட்டத்தில்...

கிராம நிர்வாக அலுவலர்களை, நிர்வாக சாத்தியக்கூறுகள் மற்றும் வழிவகைகளுக்குட்பட்டு, கூடுமானவரை அவர்களது சொந்த உள்வட்டம், வட்டத்தில் பணிநியமனம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும். இதைத்தவிர நீங்கள் கொடுத்துள்ள பல கோரிக்கைகளை அரசினுடைய பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு கனிவுடன் பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவை உங்கள் சார்பாக சிறப்பாக கொண்டாடுவதற்காக அத்தனை தரப்பிலிருந்தும் ஒட்டுமொத்த முயற்சி எடுத்து சிறப்பாக இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடிய அத்தனை நல்ல உள்ளங்களையும் மனமார பாராட்டி விடை பெறுகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்த விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயகுமார், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி,.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து