முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறுகள் : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

மதுரை, -           மதுரை மேற்குசட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார்.
 மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.90 ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு மற்றும் நேரு தெரு ஆகிய பகுதிகளில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில்  புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திறந்து வைத்து வார்டு எண்.88 சோலையழகுபுரத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
             அப்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பொதுமக்களிடையே பேசியதாவது:-
            மறைந்த முதல்வர்  அம்மாவின் அரசானது மக்கள் நல திட்டங்களை முன்னெடுத்து செல்கின்றது. அம்மா வகுத்து கொடுத்த திட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர்  பல்வேறு திட்டங்களை  ஒவ்வொரு துறையாக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். கடந்த மாதம் வார்டு எண்.90 மற்றும் 91 பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது சில பகுதிகளில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருமாறும், சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி என பல்வேறு வசதிகள் செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் வீரகாளியம்மன் கோவில் அருகிலும், நேரு தெருவிலும் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏனைய கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டு நீர் நிலைகள் அனைத்தும் வற்றி விட்ட போதும் மதுரை மாநகராட்சி திட்டமிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு 4 நாட்களுக்கு ஒருமுறை குழாய்கள் மூலமும் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் லாரிகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 மாதங்களில் மதுரை மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. வார்டு எண்.88 மிகப்பெரிய வார்டுப்பகுதி ஆகும். இப்பகுதியில் தாழ்வான பகுதிக்கு தண்ணீர் வருகின்றது மேடான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே தேவையான பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் விரைவில் அமைக்கப்படும். மேலும் பொதுமக்களின் கோரிக்கையான ஜானகி நகர் மேட்டுத்தெரு, ராமமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது. மேலும் ராமமூர்த்தி நகர் 2 மற்றும் 5 வது தெரு, வ.உ.சி. தெரு, ஜானகி நகர் குறுக்குத் தெரு, அப்பள கம்பெனி தெரு ஆகிய பகுதிகளில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜானகி நகர் 1 வது, 2 வது தெரு, மகாலெட்சுமி நகர் தெரு, எம்.கே.புரம் மெயின் ரோடு, ஜானகி நகர் குறுக்குத் தெரு  ஆகிய பகுதிகளில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளது. இந்திரா நகர் கடைசி தெருவிலும், சத்துணவு சந்து  இராமமூர்த்தி நகர் 2 வது தெருவில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
                    மேலும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான  பட்டா வழங்குவதற்கு மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதிகளவில் மக்கள் வருவதால் இடப்பற்றாக்குறை உள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே இடவசதி இல்லாத காரணத்தினால் சுகாதார நிலையத்தின் மேற்புரத்தில் படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டிடம் விரைவில் கட்டப நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் சார்பில் 32 மாவட்டங்களிலும்  எம்.ஜி.ஆரின்  நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இப்பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கை எதுவாக இருந்தாலும் அருகில் உள்ள சட்டமன்ற அலுவலகத்திலும், நேரில் என்னிடத்திலும் வந்து கோரிக்கை மனுக்கள் வழங்கலாம்.  எனது அலுவலகத்தில் கோரிக்கை  மனு வாங்குவதற்கு என்று தனிநபர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். அம்மனுவினை பெற்று துறை அலுவலர்கள் மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அம்மாவின் அரசு அமைதியும் வளமும் மிகுந்த ஒளிமயமான அரசாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  பொதுமக்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
    முன்னதாக மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா வழங்குதல், குடிநீர் இணைப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், இலவச தையல் இயந்திரம் வழங்குதல் உள்ளிட்ட 85 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
 இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர் க.கார்த்திக்கேயன், உதவி ஆணையாளர் கௌசலாம்பிகை, செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவிசெயற்பொறியாளர்கள் ஆரோக்கிய சேவியர், செந்தில், உதவிப்பொறியாளர் தியாகராசன்,  சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், சுகாதார ஆய்வாளர் நாகராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து