முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக நாடுகளின் ராணுவ மையத்துக்கு இடத்தை வாடகைக்கு விடும் ஆப்பிரிக்க நாடு டிஜிபோதி

சனிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

டிஜிபோதி: ஆப்பிரிக்க கண்டத்தின் மிகச் சிறிய நாடு 'டிஜிபோதி'. இப்போது உலக பிரதான நாடுகளின் ராணுவ மையமாக திகழ்கிறது.

நடப்பில் உள்ள ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில், சீனா, ஆப்பிரிக்க கண்டத்தின் மூன்றாவது மிகச் சிறிய நாடான 'டிஜிபோதி'-யில் ராணுவத் தளம் ஓன்றை அமைத்துள்ளது.

இது தொடர்பாக சீன ராணுவ அதிகாரிகள் கூறுகையில், 'இந்த ராணுவ தளமானது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைக்கப்பட்டது அல்ல. சீனா மனித நேயத்தையும், நட்புறவையும் ஆப்பிரிக்க கண்டத்தில் உருவாக்கவே தளம் அமைத்துள்ளதாகவும் கூறுகிறது.

ஆனால், மற்ற நாட்டினர் சீனா ஆப்பிரிக்க கண்டபகுதிகளிலும் தங்களது ஆக்கிரமிப்பை செய்ய விரும்பியே டிஜிபோதி-யில் ராணுவ தளம் அமைத்து, ஆயுத தளவாடங்களை வைக்கும் இடமாக மாற்றியுள்ளது என்று கூறுகின்றனர்.

டிஜிபோதி நாடானது, 'ஆயுத பவர்' அதிகம் உள்ள நாடுகளின் பார்வையை வெகுவாகக் கவரும் நாடாக உள்ளது. செங்கடலின் தெற்கு நுழைவு வாயிலாக இருக்கிறது டிஜிபோதி. இதன் மொத மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் கீழ்.

பிரான்ஸ் ஆதிக்கம் அதிகம்
இங்கு வசிப்பவர்கள், ஐரோப்பிய, ஆசியா, அமெரிக்க ஆகிய கண்டத்து நாட்டவர்கள் அதிகம் பேர் ஏதாவது காரணத்துக்காக அங்கேயே தங்கி இருக்கிறார்கள். டிஜிபோதி பிரான்ஸ் நாட்டின் காலனியில் இருந்து விடுபட்டு உள்ளது. ஆனாலும் பிரான்ஸ் ஆதிக்கம் அங்கே அதிகம்.

அமெரிக்காவுக்கும் ராணுவ தளம்
மேலும், அமெரிக்காவில் நடந்த 2011 வருட சம்பவத்துக்கு பிறகு அமெரிக்காவும் அங்கே ராணுவ தளத்தை அமைத்துள்ளது. அதே போல ஜப்பானுக்கும் தளம் இருந்தது. இந்த நிலையில் சீனாவும் ராணுவத் தளத்தை விரிவாக்கம் செய்துள்ளது.

எத்தியோப்பியாவின் துறைமுகம்
எத்தியோப்பியா, டிஜிபௌட்டியை தனது துறைமுக பகுதியாக பயன்படுத்தி வந்தது. அதன் மூலம் கப்பல் வர்த்தகப் போக்குவரத்து நடந்து வந்துள்ளது. 1991க்கு பிறகு டிஜிபோதி தனியாகவே சுதந்திரமாக இயங்க ஆரம்பித்தது. எத்தியோப்பியா வேறு துறைமுகத்தை நாட ஆரம்பித்தது.

இயற்கைவளம் குறைந்த நாடு
இது தொடர்பாக 'திங்க் டேங்க் சஹான் ரிசர்ச்' அமைப்பின் இயக்குனர் மேத்தியூ பிரைடன் கூறுகையில், டிஜிபோதியில் மக்கள் வளமும், இயற்கை வளமும் குறைவு. ஆனாலும் அரசு பெரு முயற்சி எடுத்து 'புவி அரசியல் பார்ச்யூன்' என்ற பெயரில் வணிக மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொண்டது.

சர்வாதிகார ஆட்சி
மேலும் பிரைடன் கூறுகையில், " டிஜிபோதி அதிபர் இஸ்மாயில் உமர் குல்லே இதுவரை 4 முறை அதிபராக பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 70 வயதான அவர் தன்னாட்சி முறையில் - சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். அவருக்கு எதிர்ப்பு வந்தால் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். இது நிகழ கூடாது என்பதால் சட்டத்தில், திருத்தம் கொண்டுவந்து அவரே அதிபராக நீடிக்க வழிசெய்துகொண்டார்." என்கிறார்

வேலையில்லா திண்டாட்டம் அதிகம்
டிஜிபோதி, வேலையின்மை பிரச்னை அதிகம் உள்ள நாடு. அதனால் ராணுவ தளம் அமைக்க இடம் கொடுத்து வருமானம் ஈட்டுகிறது டிஜிபோதி. அமெரிக்க 63 மில்லியன் டாலர் ஆண்டுக்கு வாடகை கொடுக்கிறது. அதே போல சீனா 20 மில்லியன் டாலர் வாடகை கொடுக்கிறது.

சீனா உதவி
மேலும், சீனா, சாலைகள், ரயில் வழித்தடங்கள், தொழிற்பேட்டைகள், வங்கிகள் ஆகியவற்றை அமைத்துள்ளது. இதுதான் டிஜிபோதி -க்கு ஆதாரமாக இருக்கிறது.

எந்த நேரத்திலும் சண்டை நடக்கும்
அதே நேரத்தில் இந்த நாடு, மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறது. அந்த ஆபத்து என்னவென்று பிரைடன் கூறியதாவது ," ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்க கண்டத்து நாடுகளுக்கு ராணுவ மையமாக இருப்பதால், அண்டைநாடுகளுடன் சுமூக உறவை டிஜிபௌட்டி இழந்துவிட்டது. அதனால் சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது" என்று விளக்குகிறார் .

நாட்டையே ஆயுத தளமாக வல்லரசு நாடுகளுக்கு வாடகைக்கு விட்டு பொருளாதார சப்போர்ட் தேடிக்கொள்ளும் டிஜிபோதி உலக நாடுகளில் சற்று வித்தியாசமான நாடுதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து