முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யப்படும் : அ.தி.மு.க இரு அணிகளும் விரைவில் இணையும் - திருவாரூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சனிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

திருவாரூர் : கருத்துவேறுபாடுகள் பேச்சுவார்த்தையின் மூலமாக சரிசெய்யப்பட்டு அ.தி.மு.க இரு அணிகளும் விரைவில் இணையும் என்று திருவாரூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உற்சாக வரவேற்பு ...

திருவாரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விழாவில் கலந்து கொண்ட அவர் எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். எம்.ஜி.ஆர். திருவுருவ படத்தையும் திறந்து வைத்த அவர். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளையும் மக்களுக்கு வழங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

விரைவில் இணையும் ...

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கண்ணை இமை காப்பது போல காத்து, தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு தன்னுடைய ஆட்சியில் ஏராளமான திட்டங்களையும், நலன்களையும் அளித்திருக்கிறார். எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை, அம்மா சிறப்பாக வழிநடத்தி சென்றார். தற்போது இந்த இயக்கத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.  அது இப்பொழுது பேச்சுவார்த்தையின் மூலமாக சரிசெய்யப்பட்டு விரைவில் இரு பிரிவுகளும் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேகதாது விவகாரம் ...

மேகதாதை பற்றி பல்வேறு கட்சித்தலைவர்கள் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.  அது முற்றிலும் தவறானது. காவிரி நடுவர் மன்றத்தின் 5.2.2007-ம் நாளிட்ட இறுதி ஆணையின் மீது சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது 11.7.2017 முதல் இறுதி வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  கர்நாடகம் மற்றும் கேரள அரசின் சார்பான இறுதி வாதம் நிறைவடைந்த நிலையில், 2.8.2017 முதல் தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் திரு சேகர் நபடே அவர்களால் இறுதிவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழகம் எதிர்ப்பு ...

இந்நிலையில் 17.8.2017 அன்று விவாதம் நடைபெற்ற போது, கர்நாடக மூத்த வழக்கறிஞர் எஸ்.எஸ்.நரிமன் அவர்கள் குறுக்கிட்டு, காவிரி நதியில் தமிழ்நாட்டின் பங்கான 120 டிஎம்சி அடி நீரை விடுவித்த பின்னர் எஞ்சியுள்ள மிகை நீரை கர்நாடக அரசு பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும்,  தமிழ்நாட்டிற்கு நீர் விடுவிக்க ஏதுவாக மிகை நீரை சேமிக்க கர்நாடக அரசு மேற்கொள்ளும் புதிய அணை கட்டும் பணியினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் வாதிட்டார். 

தற்போதுள்ள அணையிலேயே ...

தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக, தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞரை  நீதிபதிகள் கேட்டபொழுது, தமிழ்நாட்டின் சமதள நிலப்பரப்பின் காரணமாக புதிய அணைகள் கட்டுவது இயலாது என்பதாலும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை சுட்டிக்காட்டி மிகையான நீரினை தற்போதுள்ள அணையிலேயே சேமித்து வைத்து, அனைத்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உரிய பங்கினை பெற்றுக் கொள்ள குறிப்பிட்டதாகவும், தமிழ்நாடு தரப்பு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.  இத்தருணத்தில், தமிழ்நாட்டிற்கு நீர் வழங்குவதற்கு ஏற்ற தக்க இடத்தில் ஒரு அணையைக் கட்டி அதனை நிர்வகிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடலாமா என்ற கருத்தினை முன்வைத்து  நீதியரசர்  தீபக் மிஸ்ரா மத்திய தலைமை வழக்கறிஞர் இதற்கான நிலைபாட்டினை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். 

உண்மைக்கு மாறானது ...

இதற்கு தமிழ்நாடு அரசின் மூத்த வழக்கறிஞர், இதுகுறித்து தனியே வாதிடப்படும் பதிலுரைத்தார்.  இந்நிலையில், கர்நாடகா மேகதாதில் புதிய அணை கட்டுவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று தமிழ்நாடு அரசின் மூத்த வழக்கறிஞர் கூறியுள்ளதாக வந்த பத்திரிகை செய்தி உண்மைக்கு மாறானதாகும்.  புதிய அணைகள் கட்டுவது  தொடர்பாக மத்திய அரசு அதன் நிலைபாட்டினை, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கும்பொழுது தமிழ்நாட்டின் உரிமைகள் எவ்விதமும் பாதிக்காத வகையில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்படும்.  எனவே, தமிழக அரசு  விவசாயிகள் நலனுக்கு எதிராக, கர்நாடகா அரசு, புதிய அணை கட்டுவதற்கு அம்மாவின் அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து