முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரானதும் ரூ.330 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தவர் எம்.ஜி.ஆர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்

சனிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

திருவாரூர் : விவசாயிகளுக்காக சினிமாவில் பாடல்கள் பாடியவர் எம்.ஜி.ஆர் மட்டுமே என்றும் முதல்வரானதும் ரூ.330 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்தவரும் அவரே என்றும் திருவாரூரில் நடைப்பெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் சூட்டினார்.

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா திருவாரூரில் நேற்று நடைப்பெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். திருவாரூர் மாவட்ட சிறப்புகளை குறிப்பிட்டு புகழாரம் சூட்டிய அவர் தனது உரையை தொடர்ந்தார்.

கடன்கள் தள்ளுபடி ...

அப்போது அவர் கூறுகையில்:-

எம்.ஜி.ஆர் முதல்வரானதும் 330 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ததோடு பயிர்ப் பாதுகாப்பு காப்பீட்டு முறையையும் கொண்டு வந்தார். “அன்னமிட்ட கை, நம்மை ஆக்கி விட்ட கை” என்றும், “நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே” என்று உழைக்கும் கைகளை புகழ்ந்தவர் புரட்சித்தலைவர். ஒரு நாட்டின் வெற்றி தோல்வியை விவசாயம்தான் தீர்மானிப்பதாக புரட்சித்தலைவர் எண்ணினார். 

தட்டிக்கேட்கும் ...

பொதுவாகவே, உழைக்கும் மக்களுக்கு ஒரு துன்பம் என்றால் முதலில்  உதவிக்கரம் நீட்டுபவர் எம்.ஜி.ஆர்.ஆகத்தான் இருப்பார்.  தவறை தட்டிக் கேட்கும் குணம் அவர்  ரத்தத்திலேயே ஊறியிருந்தது. அதற்கு உதாரணமாக, அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தையே எடுத்துக் கூறலாம்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கும்பகோணம் யானையடி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அந்த வகுப்புத் தலைவன் வகுப்புக்கு  தண்ணீர் பானை வாங்க ஆளுக்கு காலணா பணம் வசூலித்தான். ஒரு ரூபாய் சேர்ந்த பிறகு வகுப்புத் தலைவன் முக்கால் ரூபாய்க்கு பானை வாங்கிவிட்டு, கால் ரூபாய்க்கு தின்பண்டம் வாங்கி சாப்பிட்டு விட்டான்.  இதை அறிந்த எம்.ஜி.ஆர்.அந்த வகுப்புத் தலைவனிடம், “மாணவர்களின் பொது பணத்தை நீ சாப்பிட்டது தப்பு! அதை திருப்பிக் கொடுத்து விடு” என்றார்.

ஆசிரியர் வியப்பு ...

கோபம் கொண்ட அந்த வகுப்புத் தலைவன் சிறுவன் எம்.ஜி.ஆரை  தகாத வார்த்தைகளால் திட்டினான். பொறுத்துக் கொள்ள முடியாத சிறுவன் எம்.ஜி.ஆர். அந்த மாணவனை பளார் என்று அறைந்து விட்டார். பஞ்சாயத்து, வகுப்பு ஆசிரியரிடம் சென்றது. “நான் வகுப்புத் தலைவனை அறைந்தது தப்புதான், மன்னித்துவிடுங்கள்” என்றார் எம்.ஜி.ஆர். ஆசிரியர் எம்.ஜி.ஆரை தட்டிக் கொடுத்து, பிறர் பொருளை எடுப்பது தவறு என்றும், அந்தத் தவறை தட்டிக் கேட்க தயங்கக்கூடாது என்ற தைரியமும், தவறு என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியும், சிறுவன் எம்.ஜி.ஆரிடம் இருப்பதைக் கண்டு ஆசிரியர் வியந்தார்.

கட்சியிலிருந்து நீக்கம் ...

உடனடியாக அந்த வகுப்புத் தலைவனை மாற்றிவிட்டு, சிறுவன் எம்.ஜி.இராமச்சந்திரனை வகுப்புத்  தலைவனாக்கினார். இந்த சம்பவத்தைப் போலவே, பிற்காலத்தில் அவருடைய அரசியல் வாழ்க்கையிலும் நடந்தது. தான் சார்ந்திருந்த கட்சியிடம் கணக்கு கேட்டதற்காக கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார். தவறை தட்டிக் கேட்கும் அவரின் குணம்தான் பின்னாளில் தமிழ் நாட்டின் தலையெழுத்தையே மாற்றி எழுதியது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.அந்த குணம்தான் அவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கியது. காலம் மாறினாலும் தன் குணத்தை மாற்றிக் கொள்ளாத கொள்கை விளக்காக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து