முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் விபத்துகளைத் தவிர்க்க ரயில் பாதைகளை கண்காணிக்க வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ரயில் விபத்துகளைத் தடுக்க நவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரயில் வழித்தடங்களை கண்காணிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது , ''ஒடிசா மாநிலம் பூரி நகரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு கலிங்க - உத்கல் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று மாலை உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் உள்ள கத்தோலி அருகே சென்று கொண்டிருந்த போது 14 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு தீவிர சிறப்பு சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதற்கு மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணத்தொகையை மத்திய அரசு அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.

ரயில் தடம் புரண்ட பகுதியில் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி, இப்பகுதியில் காலதாமதம் செய்யாமல் தொடர் ரயில் போக்குவரத்துக்கு உரிய நடவடிக்கையை ரயில்வே துறை மேற்கொள்ள வேண்டும். இந்த ரயில் விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் ரயில் விபத்துகள் நடைபெறாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.

நம் நாட்டில் ரயில் விபத்துகள் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனைக் கட்டுக்குள் கொண்டுவருவதோடு, ரயில் விபத்துகள் நடைபெறாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மத்திய ரயில்வே துறை முன்வர வேண்டும். நாட்டு மக்களில் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெருமளவில் ரயில் பயணத்தை விரும்பி மேற்கொள்கிறார்கள். எனவே மத்திய பாஜக அரசு ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

குறிப்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் பாதைகளையும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும், அனைத்து ரயில்வே கேட்டுகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் வழி அனுப்ப வருவோர் ஆகியோருக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். முக்கியமாக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரயில் வழித்தடங்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்.

மத்திய ரயில்வே அமைச்சகம் ரயில்வே துறையில் அதிகமான எண்ணிக்கையில் பணியாளர்களையும், அதிக அளவில் புதிய புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி ரயில் போக்குவரத்தில் எந்தவித அசம்பாவிதங்கள், இடையூறுகள், தடங்கல்கள் ஏற்படாத வகையில் ரயிலை இயக்கிட வேண்டும்.

எனவே மத்திய பாஜக அரசு நாட்டு மக்களின் பிரதான போக்குவரத்தாக அமைந்துள்ள ரயில் போக்குவரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, அதனை முறையாக, முழுமையாகப் பயன்படுத்தி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து கொடுத்து, அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து