முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்லம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணப்படும்: ராஜ்நாத் சிங்

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  டோக்லம் மோதல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவுக்குட்பட்ட டோக்லம் பகுதியை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் இருநாட்டு ராணுவத்தினர் நேருக்கு நேர் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண பலவழிகளிலும் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் நடந்த இந்தியா-திபெத் எல்லை பாதுகாப்பு படையினரின் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இணை அமைச்சர் கிரண் ரிச்சு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியில் வீரர்களுக்கு பதவி உயர்வு தந்து அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில் டோக்லம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கு சீனா ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்தியா ஒரு போதும் பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் செயலில் ஈடுபட்டதில்லை. அண்டை நாடுகளுடன் எப்போதும் நட்புறவுடன் இருக்கவே இந்தியா விரும்புகிறது. எந்த நாட்டு மீதும் இந்தியா படை எடுத்தது கிடையாது. அதேசமயத்தில் நமது எல்லையை காக்கும் அளவுக்கு நமது ராணுவத்தனர் வலிமையுடன் இருக்கிறார்கள் என்றும் ராஜ்நாத் கூறினார்.

எல்லைப்பகுதியில் இந்திய-திபெத் படைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எல்லைப்பாதுகாப்பு பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது. அன்னிய சக்திகள் நமது எல்லைப்பகுதியை கெட்ட நோக்கத்துடன் பார்க்க முடியாது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அண்டை நாடுகளுடன் நல்லுறவு வைத்துக்கொள்ளும் நோக்கத்துடன்தான் இந்த அழைப்பை அவர் விடுத்தார் என்றும் ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.

இந்திய-திபெத் எல்லைபாதுகாப்பு படையானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியா-சீனா இடையே சுமார் 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லைப்பகுதி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து