முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட்: தவான் - விராட் கோலி அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

தம்புல்லா : இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றியை ருசித்தது. ஷிகர் தவான் சதம் விளாசினார். ஒரு நாள் கிரிக்கெட் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 3–0 என்ற கணக்கில் இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றியை ருசித்தது. ஷிகர் தவான் சதம் விளாசினார்.

ஒரு நாள் கிரிக்கெட்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 3–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி விட்டது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நேற்று பகல்–இரவு மோதலாக நடந்தது. இந்திய அணியில் ரஹானே, மனிஷ் பாண்டே, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேல் வாய்ப்பு பெற்றனர்.
டிக்வெல்லா 64 ரன்

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி, இலங்கையை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து விக்கெட் கீப்பர் நிரோ‌ஷன் டிக்வெல்லாவும், குணதிலகாவும் இலங்கையின் இன்னிங்சை தொடங்கினர். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் இருவரும் சிரமமின்றி ரன்களை சேகரித்தனர். அணிக்கு நல்ல தொடக்கம் தந்த இவர்கள் 74 ரன்களை எட்டிய போது பிரிந்தனர். குணதிலகா 36 ரன்களில் (44 பந்து, 4 பவுண்டரி), யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து குசல் மென்டிஸ் இறங்கினார். இந்த ஜோடியும் இலங்கையின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது.

டிக்வெல்லா 64 ரன்கள் (74 பந்து, 8 பவுண்டரி) எடுத்த நிலையில், பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர் கேதர்ஜாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து பார்த்தும் அவருக்கு பலன் கிட்டவில்லை.

இதன் பிறகு இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பிடியில் சிக்கி இலங்கை வீரர்கள் தத்தளித்தனர். மிகப்பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே ஆடிய இலங்கை வீரர்கள், ஒன்று, இரண்டு வீதம் ரன் எடுக்க தவறினர். விளைவு, அவசரகதியான ஷாட்டுகள் மூலம் விக்கெட்டுகளை தாரைவார்த்தனர்.

இலங்கை 216 ரன்கள்

ஒரு கட்டத்தில், ஒரு விக்கெட்டுக்கு 139 ரன்களுடன் (24.2 ஓவர்) வலுவான நிலையில் இருந்த இலங்கை அணி அடுத்த 39 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த ஊசலாட்டத்தில் இருந்து அவர்களால் மீளவே முடியவில்லை.

280 ரன்கள் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி கடைசியில் 43.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு அடங்கிப்போனது. கடைசி 6 பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட இரட்டை இலக்கை தொடவில்லை. முன்னாள் கேப்டன் மேத்யூஸ் 36 ரன்களுடன் (36 ரன், 50 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் அக்‌ஷர் பட்டேல் 3 விக்கெட்டுகளும், கேதர் ஜாதவ், சாஹல், பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

ரோகித் ரன்–அவுட்

அடுத்து எளிய இலக்கை நோக்கி களம் புகுந்த இந்திய அணியில் துரதிர்ஷ்டவசமாக ரோகித் சர்மா (4 ரன்) ரன்–அவுட் ஆனார். ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடிய ரோகித் சர்மா கிரீசுக்கு மிக அருகில் வந்த போது பேட்டை நழுவ விட்டதால் ரன்–அவுட் செய்யப்பட்டார். அவர் கிரீசை கடக்கும் போது அவரது கால் அந்தரத்தில் இருந்ததால் பரிதாபமாக நடையை கட்டினார்.

இதன் பின்னர் ஷிகர் தவானும், கேப்டன் விராட் கோலியும் கைகோர்த்து இலங்கை பந்துவீச்சை பஞ்சராக்கினர். அவசரமின்றி ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டிற்கு அனுப்பிக் கொண்டே இருந்தனர். இவர்களை கட்டுப்படுத்த வழிதெரியாமல் இலங்கை கேப்டன் தரங்கா பரிதவித்து போனார்.

தவான் சதம்

ஹசரங்காவின் ஒரே ஓவரில் ஷிகர் தவான் 3 பவுண்டரிகளை விளாசி தனது 11–வது சதத்தை நிறைவு செய்தார். மறுமுனையில் 44–வது அரைசதத்தை தாண்டிய கேப்டன் விராட் கோலி, சன்டகனின் சுழற்பந்து வீச்சில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓடவிட்டு அமர்க்களப்படுத்தினார்.

இறுதியில் தவான், பவுண்டரி அடித்து இலக்கை எட்ட வைத்தார். இந்திய அணி 28.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 220 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. ஷிகர் தவான் 132 ரன்களுடனும் (90 பந்து, 20 பவுண்டரி, 3 சிக்சர்), விராட் கோலி 82 ரன்களுடனும் (70 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். முன்னதாக தவான் 87 மற்றும் 118 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது. தவான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2–வது ஒரு நாள் போட்டி வருகிற 24–ந்தேதி பல்லகெலேவில் நடக்கிறது.

தவானின் அதிவேக சதம்

*இந்திய வீரர் 31 வயதான ஷிகர் தவான் 71 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். அவரது அதிவேக சதம் இது தான். இதற்கு முன்பு 2013–ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 73 பந்துகளில் மூன்று இலக்கை தொட்டதே அவரது துரிதமான சதமாக இருந்தது.

*இந்திய அணி 127 பந்துகள் மீதம் வைத்து வெற்றிக்கனியை பறித்தது. 200 ரன்களுக்கு மேலான இலக்கை அதிவேகமாக எட்டிப்பிடித்ததில் இந்தியாவுக்கு இது ஒரு சாதனையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து