முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தலாக்கை எதிர்த்து வழக்கு: சுப்ரீம்கோர்ட்டு இன்று தீர்ப்பு

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : முஸ்லீம் மக்களிடையே முத்தலாக் முறையை எதிர்த்து முஸ்லீம் பெண்கள் தொடர்ந்துள்ள வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்குகிறது.

முஸ்லீம் மக்களிடையே முத்தலாக் முறை இருந்து வருகிறது. இதன் மூலம் மனைவியை விவகாரத்து செய்ய வேண்டும் என்றால் கணவன் மூன்று முறை தலாக் கூறினால் போதும். அது விவகாரத்தாக அமையும். இதை நேரிலோ,  தொலைபேசி மூலமாகவோ,  செல்போன் மூலமாகவோ, இணைய தளம் மூலமாகவோ கூறும் பழக்கம் உள்ளது. முத்தலாக் முறையானது இஸ்லாம் மதத்தில் காலம் காலமாக இருந்து வருகிறது. இதை எதிர்த்து முஸ்லீம் மதத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 7 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி கே.எஸ். ஹேகர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கடந்த மே மாதம் கோடை விடுமுறையில் 6 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த மே 18-ம் தேதி தீர்ப்பு வழங்குவது இன்று வரை (ஆகஸ்ட் 22) ஒத்திவைக்கப்பட்டது. பெஞ்சில் நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப். நாரிமன், யு.யு.லலித், எஸ். அப்துல் நாஸர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்த பெஞ்சில் உள்ள நீதிபதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இந்து, பார்ஸி, முஸ்லீம், கிறிஸ்த்துவம்,சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள். முஸ்லீம் மதத்தில் முத்தலாக் முறையானது மதத்தின் அடிப்படை உரிமையா அல்லது இல்லையா என்பது பற்றியும் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட  உரிமையா என்பதை மட்டும் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். முஸ்லீம் மக்களிடத்தில் பலதாரம் மற்றும் நிஹாக் ஹலாலா ஆகிய பழக்கவழக்கம் இருப்பதை பின்னர் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்துவிட்டனர்.

முத்தலாக் முறையானது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர். விசாரணையின்போது முத்தலாக் முறையானது மிகவும் மோசமான பழக்கம் என்றும் விரும்பத்தகாதது என்றும் நீதிபதிகள் கூறினர். அதேசமயத்தில் முத்தலாக் முறையானது சட்டப்படிதான் என்று முஸ்லீம் பள்ளிகள் கருத்து தெரிவித்துள்ளன. இந்த வழக்கில் ராம் ஜெத்மலானி உள்பட பிரபலமான வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். ராம் ஜெத்மலானி கூறுகையில் முத்தலாக் முறையை அருவருக்கத்தக்கது என்று  அரசியல் சட்ட ஆதாரங்களுடன் கடுமையாக சாடினார். முஸ்லீம் மதத்தின் புனித நூலான குரானுக்கும் அரசியல் சட்டத்திற்கும் முத்தலாக் முறை எதிரானது என்றும் ஜெத்மலானி வாதாடினார்.

முத்தலாக் முறையானது செல்லாது என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்தால் முஸ்லீம் மக்களிடத்தில் திருமணம் மற்றும் விவகாரத்து முறையை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது.

அகில இந்திய முஸ்லீம் சட்டம் வாரியம் சார்பாக ஆஜரான பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடுகையில் அயோத்தியில் ராமர் பிறந்தது எப்படி நம்பிக்கையின் அடிப்படையிலோ அதே மாதிரி முத்தலாக் முறையானது முஸ்லீம் மதத்தில் நம்பிக்கை அடிப்படையிலானது. இதை அரசியல் சட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என்றார்.  இந்த நிலையில் முத்தலாக் முறைக்கு எதிராக இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம்கோர்ட்டு வழங்குகிறது.         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து