முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை-முதல்வர் - அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை-முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

அவசர ஆலோசனை

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் நேற்று காலை கவர்னரிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக குறிப்பிட்டிருந்தனர். 

இந்த பரபரப்பான சூழலில் முதல்வர் பழனிசாமி, துணை-முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம்  முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பில் அமைச்சர்களும் பங்குபெற்றனர்.

ஆபத்து இல்லை

டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரின் எதிர்ப்பு கடிதத்தால் எடப்பாடி அரசுக்கு ஆபத்து இல்லை என்று எடப்பாடி அணி ஆதரவாளரான அன்வர்ராஜா எம்.பி. கூறினார். இதுகுறித்து, அன்வர்ராஜா எம்.பி. கூறியதாவது:-

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று கடிதம் கொடுத்ததாக செய்திகள் வந்தது. இதனால் இந்த அரசுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. ஏனென்றால் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லை என்று அவர்கள் சொல்லவில்லை. முதல்வர் மீதுதான் நம்பிக்கை இல்லை என்று கூறி இருக்கிறார்கள். இதன் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க முடியாது. இது உள்கட்சி விவகாரம். முதல்வரை தேர்ந்தெடுப்பது எம்.எல்.ஏ.க்கள் தான் இதில் கவர்னர் தலையிட இயலாது.
இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும் வருவார்கள்

மதுரை பழங்காநத்தத்தில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி இருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்ததாவது:-

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தற்போது எங்களுடன் ஒன்று சேர்ந்துள்ளனர். அதுபோல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள். இதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்தும் நல்லபடியே நடக்கும். கட்சியின் அனைத்து வி‌ஷயங்களையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய ஆற்றல் படைத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒருங்கிணைத்து செல்லும் ஆற்றலை அம்மாவிடம் நல்லமுறையில் அவர் பயிற்சி எடுத்துள்ளார். எல்லாமே நல்லப்படியாக நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும் வெற்றி பெறுவோம்

ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ.க்களும் எங்களுடன் இணைவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கனவே 2 முறை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக கூறிய அவர், மீண்டும் வாக்கெடுப்பு நடந்தாலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து