முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு உடனடியாக அமெரிக்க தூதரை நியமிக்க வேண்டும்: அதிபர் டிரம்பிற்கு கோரிக்கை

புதன்கிழமை, 23 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், இந்தியாவுக்கு உடனடியாக அமெரிக்க தூதரை நியமிக்க வேண்டும் என்று அதிபர் டொனால்டு டிரம்பிற்கு அந்த நாட்டு பாராளுமன்றத்தில் செல்வாக்கு மிகுந்த உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 45-வது அதிபராக கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். அதிலிருந்து இந்தியாவுக்கு அமெரிக்க தூதர் இன்னும் நியமிக்கப்படாமல் இருக்கிறது. இந்தியாவானது அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு. அதனால் முன்னுரிமை அடிப்படையில் இந்தியாவுக்கு அமெரிக்க தூதரை நியமிக்க வேண்டும் என்று அதிபர் டொனால்டு டிரம்பிற்கு அந்த நாட்டு பாராளுமன்றத்தில் செல்வாக்கு மிகுந்த முக்கிய எம்.பி.யான பிராங் பலோனே கடிதம் எழுதியுள்ளார்.

டிரம்பிற்கு நெருங்கிய பொருளாதார ஆலோசகராக இருக்கும் கென்னத் ஐ ஜஸ்டர் என்பவர் இந்தியாவுக்கு அமெரிக்க தூதராக நியமிக்கப்படுவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. ஆனால் இதுவரை அவர் தூதராக நியமிக்கப்படவில்லை.

இந்தநிலையில் அதிபர் டிரம்பிற்கு பிராங் பலோனே ஒரு அவசர கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்தியாவானது அமெரிக்காவுக்கு மிகுவும் நெருங்கிய நட்பு நாடாகும்.

இந்தியா விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட அமெரிக்க பாராளுமன்ற குழுவின் முன்னாள் தலைவர் பிராங். தற்போது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் இருந்து எம்.பி,யாக பிராங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நட்பு எனக்கும் எனது தொகுதிக்கும் மிகவும் அவசியமானதாகும். அதனால் இந்தியாவுக்கு உடனடியாக தூதரை நியமிக்க வேண்டும் என்று அதிபர் டிரம்பை பலோனே கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் நேற்றுமுன்தினம் கூறியுள்ளார். அதேசமயத்தில் அதிபராக டிரம்ப் பதவி ஏற்று 8 மாத காலமாகியும் இந்தியாவுக்கு இன்னும் அமெரிக்க தூதர் நியமிக்கப்படவில்லை. தெற்காசியாவில் இந்தியாவானது அமெரிக்காவுக்கு நெருங்கிய கூட்டாளி நாடாகும் என்று கடந்த திங்கள்கிழமை அன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றுகையில் கூறியுள்ளீர்கள். ஆனால் இந்தியாவுக்கு இன்னும் தூதர் நியமிக்கப்படவில்லை என்று அந்த கடிதத்தில் பிராங் பலோனே கூறியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வேண்டும் என்று அமெரிக்கா கூறிவருகிறது. அதனால் அமெரிக்காவின் நலனுக்காக இந்தியாவுக்கு ஒரு அனுபவம் வாய்ந்த தூதரை நியமிக்க வேண்டும் என்றும் அந்த கடித்ததில் பிராங் பலோனே மேலும் கூறினார்.

இந்தியாவுக்கு தூதரை நியமிப்பதில் காலம் தாமதம் ஏன் என்று வெள்ளை மாளிகை அதிகாரியிடம் கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். வெளியுறவுத்துறையில் முக்கிய அதிகாரிகள் நியமிக்கப்படாததற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் பணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் மறுத்துள்ளார். இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அனுபவம் மிகுந்த அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றும் டில்லர்சன் மேலும் கூறியுள்ளார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து