தன்னை வேண்டி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அருள்புரியும் விநாயகப் பெருமான்

வியாழக்கிழமை, 24 ஆகஸ்ட் 2017      ஆன்மிகம்
ganesaha-pooja

ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்த நாளாக விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படு கிறது. விநாயகர் முழு முதற்கடவுளாகவும், பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை உடனே நிறைவேற்றும் எளிமையானவராக கருதப்படுகிறார். மஞ்சள்பொடி, வெல்லம், களிமண், வெள்ளெருக்கவேர், சந்தனம் மற்றும் சாணம் முதலானவற்றில் கூட விநா யகரை உருவாக்கி பூஜைகள் செய்து விடலாம். விநாயகரை வழிபடுவது மிகவும் சுலபமானதும் அவரை திருப்திப்படுத்துவதும் மிகவும் எளிதானதாகும். தேடி வந்து வழிபட்டால் ஓடிவந்து வினைகள் தீர்ப்பார் விநாயகப் பெருமான். விநாயகரை இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, சீனா, நேபாளம், கிரேக்கம், எகிப்து, கயா, ஜாவா மற்றும் பர்மா போன்ற நாடுகளிலும் இந்திய மக்களால் வழிபாடு நடத்தப் படுகிறது.

ஒரு முறை பார்வதிதேவி குளிக்கச் செல்லும் முன் தன்னுடைய அழுக்கை ஒன்று திரட்டி ஒரு சிறுவனை படைத்து, அவனை காவலுக்கு நிறுத்தி வைத்து ஒருவரையும் உள்ளே அனுமதிக்காதே! என்று கட்டளையிட்டு குளிக்கச் சென்றா ராம். அதுசமயம் சிவபெருமான் வர, அவரை அச்சிறுவன் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டான். இருவருக்கும் சண்டை ஏற்பட்டு இறுதியில் சிவபெருமான் அச்சிறு வனின் தலையை துண்டித்து விட்டாராம். அந்த சமயம் அங்கு வந்த பார்வதிதேவி மிகவும் வருத்தமடைந்தார். தன்னிலிருந்து உருவான அச்சிறுவன் தன்னுடைய குழந்தை போன்றவன் என்று கூற, உடனே சிவபெருமான் அதற்கு வருந்தி அச்சிறுவனுக்கு உயிர் கொடுக்க முன்வந்தார். உடனே தனது பூத கணங்களை அழைத்து அச்சிறுவனின் தலையை தேட ஆணையிட்டார். ஆனால் அச்சிறுவனின் தலை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனே வடக்கு திசை நோக்கி உறங்கிக் கொண்டிருக்கும் பாலகனின் தலையை கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டார். ஆனால் அந்த பாலகனின் தாய் வேறு திசை நோக்கி உறங்கியிருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார்.
 
ஆனால் பூத கணங்கள் எங்கு தேடியும் வடக்கு திசை நோக்கி யாரும் உறங்கவில்லை. ஆனால் ஒரு சிறு யானை மட்டும் வடக்கு திசை நோக்கி உறங் கிக் கொண்டிருந்தது. அதன் தாய் வேறு திசை நோக்கி உறங்கியது. இதனைக் கண்ட பூத கணங்கள் அந்த யானையின் தலையை வெட்டி சிவபெருமானிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டனர். உடனே சிவபெருமான் அச்சிறுவனின் உடலின் மீது பொருத்தி மந்திரங்கள் ஜெபித்து உயிர் கொடுத்தார். அவ்வாறாக அச்சிறுவன் விநாயகராக பெயர் கொண்டான்.

விநாயகர் சதுர்த்தியன்று பூஜையறையில் ஒரு பலகையை வைத்து அதன் மீது கோல மிட்டு, அதன் மீது தலை வாழை இலையினை விரித்து, அதன் மேல் பச்சரியை பரப்பி, அதன் நடுவில் விநாயகரை வைப்பார்கள். விநாயகருக்கு வண்ணக்குடை அணிவித்து, எருக்கம்பூ மாலை அணிவிப்பர். அருகம்புல், மல்லி, அரளி போன்ற மலர்களைத் தூவி அர்ச்சனை செய்வர். விநாயகருக்கு விருப்பமான கொலுக்கட்டை, பொரி, அவல், சுண்டல், அப்பம், கரும்பு, கொய்யா போன்ற உண வுப் பொருட்கள் படைத்து வணங்குவர்.

 விநாயகருக்கு அருகில் ஒரு சொம்பு வைத்து, அதில் மாவிலை, தேங்காய், பூ போன்றவற்றை கொண்டு கும்பம் வைப்பார்கள். பிறகு விநாயகருக்கு படையலிட்டு வணங்குவார்கள். அவருடைய மூல மந்திரத்தை 51 முறை சொல்லி வழிபடுவார்கள். அன்று முழுவதும் பகலில் விரதம் இருந்து மாலையில் சந்திரனைப் பார்த்துவிட்டு விநாயகரை வணங்குவார்கள். அப்படி செய்தால் தான் விரதம் முழுமையடையும்.

விநாயகரை மூன்று நாட்கள் வீட்டில் வைத்து வழிபட்டு பின் கடலில் சென்று கரைத்து விடுவர். இந்தியா முழுவதும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. அகத்தியர், மகாமுனி காவேரி நதியைத் தன் கமண்டலத்தில் அடைத்து வைத்த போது, விநாயகப் பெருமான் மக்களுக்கு பயன்பட வேண்டிய நீரை கமண்டலத்தில் அடைத்து வைத்துள்ளதை கவனித்தார். அது சமயம் அகத்தியர் மகாமுனி கமண்டலத்தை கீழே வைத்துவிட்டு மாலைக்கடன்களை முடிக்கச் சென்ற போது, விநாயகர் அங்கே அந்தணச் சிறுவனாக தோன்றி கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டார். அப்போது காவேரி தரணி எங்கும் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. அதைப் பார்த்த அகத்தியருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அடைத்து வைத்த காவேரியை அச்சிறுவன் பூமியில் ஓடவிட்டு விட்டானே என்று கோபமுற்று, அச்சிறு வனை அடிக்கத் துரத்தினர். அகத்தியருக்கு அகப்படாமல் போக்கு காட்டி ஓடி விட்டு, பின்பு மாட்டிக் கொண்டான். அப்போது அகத்தியர் அச்சிறுவனின் தலையில் குட்ட முற்பட்டபோது, அவன் உடனே விநாயகனாக உருமாறினார். பின்பு அகத்தி யர் தன் தலையிலேயே கொட்டிக் கொண்டார். குட்ட நினைத்து தன் தலையிலேயே குட்டிக் கொண்டு மன்னிப்பும் கோருகிறார். மக்களின் பயனுக்கு உள்ள காவேரியை இப்படி கமண்டலத்தில் அடைத்து வைக்கலாமா என்று விநாயகர் வினவ, அகத்தியரும் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கோரினார்.

முன்பு ஒரு சமயம் திரிபுரர்கள் என்றழைக்கப்பட்ட மூன்று அசுரர்கள் கடும் தவம் புரிந்து பறக்கும் தன்மை கொண்ட மூன்று கோட்டைகளைப் பெற்று, தவவழிமையால் கிடைத்த அபூர்வ சக்தியால் மனச்செருக்குற்று, தேவர்களை துன்புறுத்தத் தொடங்கினர். அதுசமயம் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அப்போது சிவபெருமான் அந்த அசுரர்களை அழிக்க மனமுவந்தார். அப்போது நான்கு வேதங்களும் புரவிகள் ஆக, சூரிய சந்திரர்கள், சக்கரங்கள் ஆக, நான்முகன் சாரதியாக, அனைத்து தேவர்களும் போர் கருவிகளாக, சிவபெருமான் திருத்தேரில் போருக்கு தயாரானார். சிவபெருமான் கட்டளைக்கு இணங்க நான்முகன் தேரை செலுத்த முற்பட்டபோது தேர் சக்கரங்களின் அச்சு முறிந்து போர் பயணம் தடைபட்டது. சிவபெருமான் புன்முறுவலுடன் விநாயகரை வணங்காமல் போருக்கு புறப்பட்ட காரணத்தை நான்முகனுக்கு உணர்த்தினார். உடனே தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விநாயகரை வணங்கி துதி பாடினர். திரிபுர சம்ஹாரம் விக்கினமின்றி நிகழ ஆசி வேண்டி நின்றனர். தன்னை வேண்டி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அருள்புரியும் விநாயகப் பெருமான் அவர்களுக்கும் தயவு கூர்ந்து ஆசி வழங்கினார்.

விநாயகருக்கு மோதகம் என்னும் கொழுக்கட்டை படைப்பதன் நோக்கம், வெளியே வெறுமையாக இருக்கும் நம் உடலின் உள்ளே இருக்கும் இனிமையான அமிர்தத்தைப் போல் இருக்கும் மனத்தைப்போல், வெளியே வெறும் மாவாகச் காட்சியளித்தாலும் உள்ளேயிருக்கும் பூரணம் இனிப்பாக இருப்பதைப் போல் நம் வாழ்விலும் இனிமையும் பூரணமாய் அளிப்பார் விநாயகர். எவ்வாறு வெறும் அரிசி மாவினால் செய்த தோலினுள் உள்ளே உள்ள பூரணம் இனிப்பாக இருக்கிறதோ அவ்வாறே நம் உடலின் உள்ளே உள்ள அம்ருதமயமான ஆனந்த நிலையை விநாயகன் துணையால் நாம் அடைவதும் இனிப்பாக இருக்கும்.

விநாயகரைப் போன்ற எளிமையான கடவுள் வேறு யாரும் இல்லை. அவ ருக்குப் பிரசாதமாக அவல், பொரி கொடுத்தால் கூடப்போதும், இல்லை தெருவில் முளைத்துக் கிடக்கும் அருகம்புல்லை பறித்து வந்து சுத்தம் செய்து விநாயகருக்கு சாற்றினால் கூட போதும் அவரை மனம் குளிர செய்து விடலாம். செவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிகவும் உகந்த நாட்கள் அந்த தினங்களில் செவ்வரளி, மற்றும் மஞ்சள் அரளி மலர்களை மாலை தொடுத்து வணங்குவது மிகவும் சிறப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து