முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோயில்களில் விநாயகருக்கு அபிஷேகம் - வழிபாடு

வெள்ளிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2017      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் கோவில்கள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில், 3 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள விநாயகர் கோவில்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, விநாயகர் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. நேற்று அதிகாலை கணபதி ஹோமமும், சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகள் சென்னையில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சிலைகளை வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். இதே போல் வாழை மரம், பூ, பழங்கள், குடை வியாபாரம் களைகட்டியது.

விநாயகர் சிலைகள்

கடந்த ஆண்டு சென்னையில் 2 ஆயிரத்து 697 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய போலீசார் அனுமதி வழங்கினர். இந்த ஆண்டு சுமார் 3 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்து அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலைகளை ஆங்காங்கே முக்கிய இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டிசென்னையில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். வழிபாட்டுக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகளை போலீசார் மாறுவேடத்தில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னையில் நீலாங் கரை பல்கலைநகர், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகப்பகுதி, திருவொற்றியூர், எண்ணூர் கடல் பகுதிகளில் கரைக்கப்பட உள்ளன. விநாயகர் சிலை ஊர்வலம் 31-ந் தேதி, செப்டம்பர் 3-ந் தேதி அன்று சென்னையில் நடத்த போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். 31-ந் தேதி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

சென்னை புறநகர் பகுதியில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் செப்டம்பர் 3-ந் தேதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீலாங்கரை பல்கலைநகர் கடல் பகுதியில் கரைக்கப்படுகிறது. ஜெய் சிவசேனா அமைப்பினர் செப்டம்பர் 3-ந் தேதி மதுரவாயல், பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து நீலாங்கரை பல்கலைநகர் கடலில் கரைக்க போவதாக அறிவித்துள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த விழாக்குழுவினர்கள் போலீசாரிடம் முன்அனுமதி பெற்றுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சதுர்த்தி விழா முடிவடைந்த பின்னர் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைத்து விடுவது வழக்கம். அதற்காக கிழக்கு கடற்கரை மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரையுள்ள இடங்களான பொம்மியார் பாளையம், கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம் மற்றும் அரகண்டநல்லூர் அதுல்ய நாதேஸ்வரர் குளம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஏரிகள், வீடூர், கோமுகி அணை ஆகிய இடங்களில் மட்டுமே கரைப்பதற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
 
கோவை

கோவை புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில். இது ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலையாகும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காலை 3.30 மணியளவில், விநாயகர் வழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது. இதனைத்தொடர்ந்து, விநாயகருக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், மஹா அபிசேகமும், சந்தன காப்பும் நடைபெற்றது. பல்வேறு வகையான மலர்கள், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களாலும் அபிசேகம் செய்யப்பட்டது. பின்பு, நீலநிற பட்டாடை உடுத்தி மலர்களால், அலங்கரிக்கப்பட்டு விநாயகர் ராஜ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விநாயகருக்கு பழங்கள், தின்பண்டங்கள், மலர்கள் அதிக அளவில் படைக்கப்பட்டிருந்தது. இதே போல் கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது. இதில் திராளன பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

மதுரை

விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு நேற்று காலை 18 படி அரிசியில் தயாரிக்கப்பட்ட ராட்சத கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் அந்த கொழுக்கட்டையை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

பிள்ளையார்பட்டி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. அதிகாலை நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

திருச்சி

திருச்சி மலைக்கோட்டையில் 150 கிலோ கொழுக்கட்டை தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் மிகவும் பிரச்சித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக கொண்டா டப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 150 கிலோவில் மிக பிரமாண்டமான கொழுக்கட்டை விநாயகருக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து