செப்டம்பர் 2-ம் தேதி குருப்பெயர்ச்சி: ஆலங்குடி, திட்டை, பட்டமங்கலம் மற்றும் குருவித்துறை கோயில்களில் கோலாகல விழா

புதன்கிழமை, 30 ஆகஸ்ட் 2017      ஆன்மிகம்
guripeyarchi 2017 8 30

மதுரை : செப்டம்பர் மாதம் 2-ம் தேதி குருப்பெயர்ச்சி நடக்கிறது. இதை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடி, திட்டை மற்றும் சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம், மதுரை மாவட்டத்திலுள்ள குருவித்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள குருபகவான் ஆலயங்களில் குருப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துவருகிறார்கள்.

குருப்பெயர்ச்சி

இவ்வாண்டும் வருகின்ற சனிக்கிழமை 2-ம் தேதி காலை 9.25 மணிக்கு குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த குருப்பெயர்ச்சி மூலம் மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் சிறப்பான பலனை அடைவர். மீதி உள்ள ரிஷபம், கடகம், துலாம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் பரிகாரங்கள் செய்யவேண்டுமென்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அதே நேரம், ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருப்பவர்களுக்கு குருப்பெயர்ச்சியால் கெடுபலன்கள் ஏற்படாது என்றும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.


காரணம் இது பொதுப்பலன். அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைப்படியே பலன்கள் கிடைக்கும். இருந்தாலும், மக்கள் மத்தியில் குருப்பெயர்ச்சி என்றாலே ஒரு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகத்தில் ஆலங்குடி, திட்டை, பட்டமங்கலம், குருவித்துறை மற்றும் திருச்செந்தூர் போன்ற கோவில்களில் சிறப்பான வழிபாடு நடைபெறுவது வழக்கம். பரிகார பூஜைகளும், லட்சார்ச்சனைகளும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மேற்கண்ட கோவில்களில் வழக்கம்போல், பூஜைகள் நடைபெறவுள்ளன.

குருவித்துறை கோவில்

குருபகவான் கோவில் அமைந்துள்ள குருவித்துறை மதுரை வைகையாற்றின் கரையோரம் உள்ளது. இங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முன்பு தவக்கோலத்தில் குருபகவான் தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறார். இங்கு ஆண்டுதோறும் குருபெயர்ச்சி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி இந்த கோவிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. முன்னதாக இன்று வியாழக்கிழமை பட்டர்கள் ரங்கநாதன், ஷ்ரிதர், சடகோபன், ராஜா ஆகியோர் தலைமையில் லட்சார்ச்சனை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. 2-ம் தேதி காலை 6 மணிமுதல் பரிகார மகாயாகசாலை தொடங்குகிறது. அதைதொடர்ந்து காலை 9.25 மணியளவில் குருபெயர்ச்சி நடைபெற்று திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

பரிகார ராசிகள்

குருபெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்யவேண்டிய ராசிகளான ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தங்கள் பெயர் மற்றும் நட்சத்திரங்களுக்கு பரிகார பூஜைகள்  செய்துகொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை கோவில்செயல் அலுவலர் பொறுப்பு சக்கரையம்மாள், தக்கார் ஞானசேகரன், கோவில் பணியாளர்கள் வெங்கடேசன், கிருஷ்ணன், நாகராஜ், மணி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

லட்சார்ச்சனை கட்டணம்

ரூ.300 செலுத்துபவர்களுக்கு  2 கிராம் வெள்ளி டாலரும், பிரசாதங்களும் வழங்கப்படும். அதேபோல் ரூ.100 செலுத்துபவர்களுக்கு பிரசாதம் மட்டும் வழங்கப்படும். லட்சார்ச்சனை டிக்கெட் வேண்டுவோர் கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல்  சோழவந்தான் பிரளயநாதர் (சிவன்) கோவிலில் வருகின்ற சனிக்கிழமை 2-ம் தேதி குரு தெட்சிணாமூர்த்தி  சன்னதி முன்பாக மகாயாகமும், அதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகசங்களும் நடைபெறுகிறது. விசேஷமான இக்கோவிலில் ஸ்தல மூர்த்தியான  சனீஸ்வரலிங்கமும், பிரளயநாதர் ராகுவுக்கு அதிபதியாகவும், ஸ்தல நட்சத்திரம் விசாகமும், அது குருவுக்கு உகந்ததுமாக அமையப்பெற்றது சிறப்பம்சமாகும்.  நிகழச்சிக்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் மணி, பள்ளி தாளாளர் மருதுபாண்டியன், கோவில் தக்கார் லதா, கணக்கர் பூபதி உள்பட  பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து