முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களுக்கான புதிய இணையதள சேவைகள் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் தொடங்கினார்

வியாழக்கிழமை, 31 ஆகஸ்ட் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக காவல்துறையின் பொதுமக்களுக்கான புதிய இணையதள சேவைகளை மாவட்ட எஸ்.பி. சக்திவேல் தொடங்கி வைத்து அறிமுகம் செய்தார்.
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் நிருபர்களிடம் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் காவல்துறையின் புதிய இணையதள சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று முதல் புதிதாக பொதுமக்களுக்கான இரண்டு புதிய இணையதள சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர், மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு ஆவணங்களை பெறும் வசதி மற்றும் தொலைந்து போன ஆவணங்கள் பற்றிய புகார் அளிக்கும் வசதி 2 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது இழப்பீட்டுத் தொகையை விரைவாக பெற்றுக் கொள்ள உதவி செய்ய இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாலை விபத்து வழக்குகளில் இறந்தவர்களின் சட்டப் பிரதிநிதிகள் இந்த வசதியின் மூலம் ஆவணங்களைப் பெறலாம். புலன் விசாரணையின் போது காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட அவர்களின் மொபைல் எண்ணை அடிப்படையாக கொண்டு பயனீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மெட் பேங்க் வசதியை பயன்படுத்தி ஒரு ஆவணத்திற்கு ரூ.10 செலுத்தி ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம். கூடுதலாக பதிவிறக்கம் செய்த ஆவணத்தின் நகலானது பயனீட்டாளரின் மின் அஞ்சல் கணக்கிற்கு தானாக அனுப்பப் படும். இதில் 16 வகையான ஆவணங்களை இந்த இணையதளத்தின் மூலம் பெற முடியும்.
மற்றொரு இணையதளத்தின் மூலமாக பாஸ்போர்ட், வாகன பதிவு சான்றிதழ்,ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, போன்ற ஆவணங்கள் தொலைந்து போனது பற்றி காவல் துறையில் புகார் அளித்து ஒப்புதல் பெறும் செயல்முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. பயனீட்டாளரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓ.டி.பி. அடிப்படையில் அங்கீகாரம் உறுதி செய்யப்படும். ஆதார், பான், டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அட்டை போன்ற அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் தொலைந்த ஆவண  அறிக்கை ஒரு தனித்துவமான குறிப்பு எண்ணுடன் உடனடியாக பயனீட்டாளருக்கு அளிக்கப்படும். ஆவணம் வழங்கும் அதிகாரிகளால் எல்.டி.ஆரின் உண்மைத் தன்மையை சரிபார்க்க இணையதளத்தில் ஒரு ஏற்பாடு வழங்கப்பட்டுள்ளது. புகாரின் மீது காவல்துறையில் எந்த விசாரணையும் செய்யவில்லை என்றாலும் காவல்துறைக்கு தவறான தகவல் தருவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த அரிய சேவையை திண்டுக்கல் மாவட்ட மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
பேட்டியின் போது டவுன் டி.எஸ்.பி. சிகாமணி, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சந்திரன், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தெய்வம் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் இச்சேவையை அறிமுகம் செய்து வைத்த எஸ்.பி. உடனடியாக ஒரு பயனீட்டாளருக்கு வேண்டிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்து வழங்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து