முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

32-வது கண்தான இருவார விழா பேரணியினை கலெக்டர் வீரராகவராவ் கொடியசைத்து துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 5 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை -மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 32வது கண்தான இருவார விழா பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.  250க்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும், செவிலிய மாணவர்கள் கலந்து கொண்ட இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் முடிவடைந்தது. 
 பின்னர் அரசு இராசாசி மருத்துவமனை கண் பிரிவில் 32வது கண்தான இருவார விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
 கண்தான இருவார விழா ஆண்டு தோறும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.  மனிதன் செய்யும் தானங்களில் சிறந்தது கண் தானம் ஆகும்.  ஏனென்றால் இறந்த ஒருவரிடமிருந்து பெறப்படும் கண்களால் பார்வையில்லாமல் இருப்பவர்கள் பார்வை பெறுகின்றனர்.  இத்தகைய மதிப்புமிக்க கண்தானம் பற்றிய விழிப்புணர்வினை மருத்துவர்களாகிய நீங்கள் உங்களிடம் சிகிச்சை பெற வந்திருப்பவர்களிடமும், நண்பர்களிடமும், சக ஊழியர்களிடமும் ஏற்படுத்திட வேண்டும்.
 கண் எனும் உறுப்பு நமக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதமாகும்.  அதன் மூலமாக தான் இயற்கையை, நம் குடும்பத்தினரை, அன்பானவர்களை பார்க்கிறோம்.  இத்தனை அத்தியாவசியமுள்ள உறுப்பான கண்ணினை நாம் உரிய முறையில் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.  தமிழகஅரசின் சார்பில் அரசு மருத்துவமனைகளில் கண் பாதுகாப்பு தொடர்பாக முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதனை நகர் மற்றும் கிராமப்புற பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு உரிய சிகிச்சை மேற்கொண்டு கண்ணினை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 
 எனவே நம் கண்களை நன்கு பராமரிப்போம், பாதுகாப்போம்.  இறந்த பின்னர் மனித உடலிலிருந்து மனிதனுக்கு பயன்படக்கூடிய கண்களை தானம் செய்து மற்றவர்களுக்கு உதவியாக இருப்போம்.  மண்ணுக்குள் மக்கும் கண்கள், மனிதனுக்கு பயன்படட்டும்.  எனவே இன்று நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கண்தானம் மற்றும் விழிப்புணர்வு குறித்து வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கண்தானம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விரிவாக விவரிக்கப்பட்டது என தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் மதுரை மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மரு.மருதுபாண்டியன், துணை முதல்வர் மரு.தனலெட்சுமி, அரவிந்த் கண் மருத்துவமனையின் துறைத்தலைவர் மரு.சீனிவாசன், மருத்துவ கண்காணிப்பாளர் மரு.ஷ{லாமல்லிகாராணி, மரு.சாமுவேல் ஞானதாஸ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.அர்ஜுன்குமார், நிலைய மருத்துவ அதிகாரி மரு.சுபாங்கி, வேலம்மாள் மருத்துவமனையின் பேராசிரியர் மரு.செல்வக்கடுங்கோ வாழியநாதன், கண்துறைத்தலைவர் பேரா.மரு.சந்திரகுமார், செவிலியக் கண்காணிப்பாளர் கலாராணி ஜெயராஜ், கண்துறையின் உதவிப் போராசிரியர் மரு.ராஜேஸ்வரி உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து