முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு:

வெள்ளிக்கிழமை, 8 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சொக்கநாதர் சுவாமி திருக்கோவிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.இதையடுத்து கும்பாபிஷேக விழாவிற்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
பழம்பெரும் பாண்டிய நாட்டின் தலைநகராகிய தமிழ் மதுரை மாநகரின் உள்ளதும் அதனை சூழ்ந்துள்ள ஐந்து திருத்தலங்களில் முதன்மையானதும், கந்த புராணத்தில் குறிக்கப் பெற்றதும்,நலங்கள் எல்லாம் நல்கும் மங்கலம் எனும் பெயரால் விளங்குவதுமாகிய திருமங்கலம் திருவூரில் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதசுவாமி திருக்கோவில் சிவாகம் முறைப்படி கருங்கல் திருப்பணி செய்யப் பெற்றதாகும்.தல மரமாக வில்வ மரத்தை பெற்று பெருமை உடையது.ஆகாய கங்கை என்று அழைக்கப்படும் கிணற்றை புனித தீர்த்தமாக பெற்றது.தென்திசை காவலனான எமனின் பயத்தை உயிர்களுக்குப் போக்கும் வல்லமையும்,தீர்க்க ஆயுளும்,தீர்க்க சுமங்கலித்துவமும் அருள்பவரும்,மகளிரின் திருமணத் தடைகளை நீக்கி சர்வ மங்கலங்களையும் அருள்பவளுமாகிய அன்னை மீனாட்சி வர பிரசாதியாக தென்திசை நோக்கி அருள் பாலிக்கிறார்.ஸ்ரீமங்கள தெட்சணாமூர்த்தி,+அஷ்ட புஜதுர்க்கை,ஸ்ரீயோக சனீஸ்வரன்,ஸ்ரீகாலபைரவர் சந்நிதிகளும் இத்தலத்தில் சிறப்புடையன.வேம்பும் வில்வமும் அர்த்த நாரீஸ்வர வடிவமாக இணைந்து வளர்ந்துள்ளமை இத்தலத்தின் மகிமையாகும்.
இத்தகைய சிறப்புகள் மிக்க பலநூற்றாண்டு பழமை வாய்ந்த திருமங்கலம் அருள்மிகு மீனாட்சி சொக்கநாத சுவாமி திருக்கோவிலில் மங்களகரமான நாளான நேற்று அருள்மிகு சொக்கநாத சுவாமிக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மற்றும் விமானத்திற்கும் மஹாகும்பாபிஷேகம் சிவஆகம விதிப்படி நேற்று காலை நடைபெற்றது.இவ்விழாவில் கலந்துகொள்ள கோவிலுக்கு கட்சி நிர்வாகிகளுடன் வருகை புரிந்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கோவிலின் சார்பில் பிரிவட்டம் கட்டி பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.பின்னர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை பந்தலிலும்,கோவிலின் சன்னதியிலும் நடைபெற்ற பூஜைகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து புதிதாக காட்சியளிக்கும் திருக்கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலைகள் அமைக்கப்;பட்டு சிறப்பு பூஜைகள் கடந்த 4நாட்களாக நடத்தப்பட்டு வந்தது.அதன்படி நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் வேதவிற்பன்னர்கள் புனிதநீர் கலசங்களை தலையில் சுமந்து வந்து தமிழக வருவாய்த்துறைஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் கோபுர விமானங்களில் அமைக்கப்பட்டிருந்த கலசங்களில் வேதமந்திரங்கள் முழங்கிட புனிதநீர்ஊற்றி மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து  சுவாமிகளுக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக சர்வ சாதகங்களை மதுரை வேதஆகம ஜோதிடர் சிவஸ்ரீ சந்திர சிவாச்சாரியார்,திருமங்கலம் சிவஸ்ரீ சங்கரநாராயண சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தினார்கள்.இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு புல்பேட்டை பகுதியில் வைத்து அறுசுவை அன்னதான விருந்து வழங்கப்பட்டது.இவ்விழாவில் மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் மகலிங்கம்,ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி முன்னாள் திண்டுக்கல் எம்.பி.,என்.எஸ்.வி.சித்தன்,மாநில மூவேந்தர் முன்னேற்ற கழக மகளிரணி செயலாளர் ஒ.சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர்,மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவரக்கோட்டை வி.செல்வம்,பொறியாளர் ராகேஷ் ஒச்சாத்தேவர்,மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.ஜெயராம்,ராஜா சித்தா மருந்தக நிர்வாகி கா.ராஜமுருகன் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து