பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்தினால் வழக்கு - டி.ஜி.பி உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      தமிழகம்
DGP TK Rajendran 2017 9 10

சென்னை :  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி காவல்துறையினருக்கு டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

நீட் தேர்வு காவு கொண்ட அனிதாவின் மரணம், போராட்டத்தை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து போராட்டங்களை அறிவித்து வருகின்றன . அதேநேரத்தில் மாநிலம் முழுவதும் கல்லூரிகள், பள்ளிகள் முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

நீட் தேர்வுக்கு எதிராக போராட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்படியோ, சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடையும்படியோ போராட்டங்கள் நடத்தக் கூடாது. அதற்காக பேச்சுரிமையை நாங்கள் தடுக்க மாட்டோம். சட்டத்தை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தலைமைச் செயலாளருக்கு உத்தரவின் நகல் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இந்தநிலையில், வருகிற 13ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் 12ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவால், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், சட்டம் ஒழுங்கு கெடும் வகையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்துகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் உள்ள போலீசாருக்கு டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது. அதேநேரத்தில் சாலையில் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் டிஜிபி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

இதனால் தமிழகத்தில் இன்று கல்லூரி, பள்ளிகள் திறக்கும்போது அதிக அளவில் போலீசார் குவிக்கும்படியும், தேவையான நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து