பொய் குற்றச்சாட்டுகளை கூறி மக்கள் மனதை கலைத்து ஆட்சியை கவிழ்க்க முயற்சி - ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      தமிழகம்
panneer 2017 8 20

வேலூர் : பொய்குற்றச்சாட்டுகளைக் கூறி  மக்கள் மனதை கலைத்து ஆட்சியை கவிழ்க்க சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பேசினார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு துணைமுதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பல பிரச்சனைகளில் இருந்து தமிழகத்தை மீட்க  அம்மா இருக்கிறார் என்ற குரல் தமிழகம் முழுவதும்  ஒலித்துக்கொண்டிருக்கிறது.  ஆனால் அவர் தற்போது நம்மிடமில்லை. தமிழகத்தை காப்பாற்ற அவரின் நல்லரசு தமிழகத்தில் தொடர்கிறது.  என்னை நம்பி வாக்களித்தவர்களுக்கு  எனது வாக்குறிதியை நிறைவேற்றுவேன் என்றும் அதை எனது புனித கடமையாக செயல்படுத்துவேன் என்றும் ஜெயலலிதா எடுத்துரைத்தார். அவர் கூறியபடி நாங்களும்  நல்லாட்சியை தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். பொய் குற்றச்சாட்டு கூறி மக்கள் மனதை கலைத்து  ஆட்சியை கவிழ்க்க சிலர் முயற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள்.


தற்போது எடப்பாடி தலைமையில் நடைபெறும்  அரசு அம்மாவின் நல்லரசாகும். இது மக்களுக்காக உருவான அரசாகும்.  அதை அசைத்துப் பார்க்க  எந்த கொம்பாதி கொம்பனாலும் முடியாது.  இரும்புக் கோட்டையை எறும்புகளால்  வீழ்த்த முடியாது.  இமயமலையை ஈக்களால் சாய்த்துவிட முடியாது.  நம்மை சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று சிலர் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி நினைப்பவர்கள் எதற்காக  மெகா கூட்டணிக்கு முயற்சி செய்கிறார்கள்? புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என்மீது வந்து படுத்துக்கொள்ளுங்கள்  என்று அலறுவது போல கூட்டணிக்கு வா...வா... என்று சிலர் கூவி , கூவி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் நம்மஅரசு  பலத்தோடு இருக்கிறது. தமிழக மக்கள்  பக்கபலமாக இருக்கிறார்கள். எங்களிடமிருந்து மக்களை பிரித்து விட முடியாது. மக்களிடமிருந்து எங்களையும் பிரித்து விட முடியாது.

யாரை எதிர்த்து புரட்சி தலைவர்  இயக்கத்தை உருவாக்கினாரோ, யாரை எதிர்ப்பதற்காக புரட்சி தலைவி கழகத்தை வழிநடத்தி வலுப்படுத்தினாரோ, அந்த தீயசக்தியோடு கரம் கோர்த்து கழகத்தை காப்பாற்றி விடலாம் என்று மனக்கணக்கு போடும் சிலரது செயல்பாடுகளை பார்க்கும்போது  , கொள்ளையடிக்க போகிறவன் குருடனை துணைக்கு கூட்டிக்கொண்டு போனானாம் என்ற பழமொழி தான் எனக்கு நினைவுக்க வருகிறது.

நீங்கள் யாரை வேண்டுமானாலும் கூட்டணிக்கு அழைத்து கொள்ளுங்கள். அதற்கெல்லாம் அம்மாவின் விசுவாச தொண்டர்கள் அஞ்சமாட்டார்கள். எங்களுக்கு தர்மம், நீதி, நேர்மை, வாய்மை, சத்யம், எம்.ஜி.ஆர். ஆசி என்றும் துணை நிற்கிறது. அந்த துணையோடு  தமிழக மக்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம், எத்தனை சவால்கள் வந்தாலும் சந்திப்போம், எல்லாவற்றிலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு  ஒ.பன்னீர்செல்வம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து