முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மரில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்கள் சண்டை நிறுத்தம் அறிவிப்பு

திங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

மியான்மர்: மியான்மரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருப்போருக்கு உதவும் வகையில், சண்டையை நிறுத்திக் கொள்வதாக ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்கள் நேற்று அறிவித்தனர். இதுபோல அரசும் சண்டையை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராடி வரும் ‘ஆரக்கன் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி’ தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சண்டையில் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், ராணுவத்துக்கு எதிரான சண்டையை ஒரு மாதத்துக்கு நாங்கள் நிறுத்திக் கொள்கிறோம். அதேபோல, மியான்மர் அரசும் எங்களுக்கு எதிரான சண்டையை நிறுத்த வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. பல தலைமுறைகளாக வசித்து வரும் அவர்களுக்கு குடியுரிமை வழங்காமல் அரசு பாகுபாடு காட்டுவதாக கூறப்படுகிறது. அதேநேரம், அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என அந்நாட்டு அரசு கூறி வருகிறது.

இதனிடையே அந்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள புத்த மதத்தினர், ராணுவத்தின் உதவியுடன் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அடக்குமுறையை கையாண்டு வந்தனர். இதையடுத்து, முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக ‘தி ஆரக்கன் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி’ என்ற போராளிகள் குழு தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பினர் முதல் முறையாக ராணுவத்துக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இருதரப்புக்கும் பயங்கர மோதல் வெடித்ததில் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி போராளிகள் குழுவினர் ராணுவத்துக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்தினர். இதற்கு பழிவாங்கும் வகையில் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் வன்முறைக்கு 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளர். இதில் பெரும்பாலானவர்கள் தீவிரவாதிகள் என மியான்மர் அரசு கூறுகிறது.

கடந்த 15 நாட்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் வங்கதேசத்தின் காக்ஸ் பாஜர் பகுதியில் அகதிகளாக குடியேறி உள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அகதிகள் வந்து கொண்டே இருப்பதால் தங்க இடமின்றி திறந்தவெளியிலும், சாலையோரமும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அகதிகள் வருகை தொடர்கதையாக இருப்பதால் குடிநீர், உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அங்கு முகாமிட்டுள்ள ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், தங்களால் முடிந்தவரை குடிநீர், உணவுப்பொருள்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, குழந்தைகளும் பெண்களும் பசி, பட்டினியால் வாடுகின்றனர். அப்பகுதியில் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களிடம் தங்களது வயிற்றைத் தட்டி பசியால் வாடுவதாக தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, சுகாதார வசதி இல்லாததால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் சண்டையை நிறுத்திக் கொள்வதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து