முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாகவி பாரதி நினைவு தினக் கூட்டம்

திங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-தியாகதீபம் பேரவை சார்பில் மகாகவி பாரதியின் 96ஆம் ஆண்டு நினைவு தினக் கூட்டம் டி.பி.கே.ரோடு நற்பணி மன்ற அலுவலகத்தில் அதன் அமைப்பாளர் அ.பாலு தலைமையில் நடைபெற்றது. சிவனந்த சீனிவாசன் முன்னிலை வகித்தார். கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் “கருத்துக் களஞ்சியம்” என்ற தலைப்பில் பேசுகையில் 39 வயது மட்டும் வாழ்ந்த பாரதி - தேச விடுதலை, பெண்விடுதலை, தனி மனித உரிமை, பல்துறை சிந்தனை, தமிழின் தனிச்சிறப்பு எனப் பலமுகங்களுடன் வாழ்ந்தவர். அதற்கு சில உதாரணம் : “பக்தி யுடையார் காரியத்திற் பதறார், மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயன் அடைவார்”, உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர், எண்ணிய முடிதல் வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்அறிவு வேண்டும், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்றவர்.
 பாரதி மறைந்து முப்பதாண்டுகள் சென்ற பிறகு திருச்சி வானொலியில் அவரது மனைவி செல்லம்மாள் ஆற்றிய உரை : மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயதுவரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். பாரதியார் அறியாத கலை, “பணம் பண்ணும் கலை” என் கணவர் மறந்தும் காசுக்காகத் தமிழ்த்தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாக்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆற அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழ வேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்தது என்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன். இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷம்தான்.
 மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைபிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று. ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது என்றார் செல்லம்மாள் பாரதி.  இதனை இன்றுள்ள தலைமுறை கவனத்தில் நிறுத்தி செய்லபடுங்கள். அதுவே புகழஞ்சலியாய் அமைந்திடும் என்றார்.
 கூட்டத்தில் சீ.கிருஷ்ணமூர்த்தி, கே.அண்ணாமலை, நரசிம்மன், மீ.ராமசுப்பிரமணியன், முனைவர் வீ.சுப்புராஜ், என்.செல்வம், ரெ.கார்த்திகேயன், நவாப்ஜான், வி.காளீஸ்வரன், ஏ.சி.பாபுலால், பி.பன்னீர்செல்வம், என்.முனுசாமி, ஜெ.ரவிசங்கர் கலந்து கொண்டனர். முனைவர் கே.ரெங்கநாதன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து