தடையை மீறி போராடும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - மதுரை ஐகோர்ட் கிளை அனுமதி

திங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017      தமிழகம்
Madurai high court branch 2017 9 4

மதுரை : நீதிமன்ற தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியது.

பொதுநல வழக்கு

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சேகரன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கூட்டு செயல் குழுவினர் 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். அன்று அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள் இயங்காது என்றும், இந்த வேலை நிறுத்தத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.


இடையூறு ஏற்படும்

இந்த வேலை நிறுத்தப் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும் நிறுத்தி அரசு பள்ளிகள்,கல்லூரிகள் சுமுகமாக செயல்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு தலைமைச் செயலர், உள்துறை செயலருக்கு 24.8.2017-ல் மனு அனுப்பினேன். என் மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறு ஏற்படும்.

அரசு ஊழியர்களுக்கு அரசு ஏற்கெனவே போதுமான அளவு ஊதியம் வழங்கி வருகிறது. அரசின் மொத்த வருவாயையும் சம்பளம் வழங்குவதற்கு மட்டும் பயன்படுத்த முடியாது. மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவும் தேவைப்படுகிறது. கூடுதல் ஊதியம் பெறுவதற்காக வேலை நிறுத்தம் என்ற மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுப்பது தவறு.

அடிப்படை உரிமை அல்ல

கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு வழிகள் உள்ளன. அரசிடம் மனு அளிக்கலாம். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம். இதை செய்யாமல் பொதுமக்களையும், அரசு நிர்வாகத்தையும் ஸ்தம்பிக்க செய்யும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி தவறு. வேலை நிறுத்தம் அடிப்படை உரிமை அல்ல. மேலும் வேலை நிறுத்தம் செய்வது அரசு ஊழியர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.
வேலை நிறுத்தத்தை அனுமதித்தால் அரசுப் பள்ளிகளில் 10, 11, 12 பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொதுமக்களும் பாதிக்கப்படுவர். அரசு அலுவலங்களில் பணிகள் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் 7.9.2017முதல் மேற்கொள்ள உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இடைக்கால தடை

இந்த மனு ஏற்கனவே, விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் காலவரம்பற்ற வேலை நிறுத்தத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்ததை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே, "பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், போராடுவது அடிப்படை உரிமையாகாது" என அறிவுறுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பினர் தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்த வேறு வழிகளைக் கையாளலாம். அதைவிடுத்து காலவரம்பற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, தீர்வாக அமையாது என தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர். 

வழக்கு தொடர அனுமதி

இந்நிலையில் நேற்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர அனுமதியளித்தனர்.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து