நியமன பொதுச்செயலாளரை நீக்குவதற்காக கூடிய முதல் அ.தி.மு.க பொதுக்குழு

செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் 2017      தமிழகம்
admk 2017 09 12

சென்னை: நியமன பொதுச் செயலாளரை  ( சசிகலா ) நீக்குவதற்காக கூடிய முதல் அதிமுக பொதுக்குழு நேற்று கூடிய பொதுக்குழுவாகும்.

ஜெயலலிதா மறைந்தவுடன் அ.தி.மு.க.வையும், ஆட்சியையும் கைப்பற்றி கொள்ள மிகவும் சாதுர்யமாக காய் நகர்த்தி வந்தார் சசிகலா. பின்னர் பொதுச் செயலாளராக கடந்த ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்றுக் கொள்ள  நினைந்திருந்த வேளையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு உறுதியானதால் சிறை சென்றார் சசிகலா.

பாதுகாப்பு உணர்வு
4 ஆண்டுகளில் கட்சி நம் கையை விட்டு போய்விடுமோ என்ற சந்தேகமடைந்த சசிகலா, தனது அக்காள் மகன் டி.டி.வி தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்து விட்டு சென்றார். அன்று முதல் ஆட்சியிலும் , கட்சியிலும் தினகரனின் தலையீடு அதிகரிக்க ஆரம்பித்தது.


கடுப்படைந்த நிர்வாகிகள்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மீறும் அளவுக்கு தினகரனின் தலையீடு இருந்ததால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்தனர். ஒரு கட்டத்தில் தினகரனை கட்சியிலிருந்து விலக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அடுத்தடுத்த நகர்வுகளால் கோபமடைந்த தினகரன் தன் பதவியின் அதிகாரத்தைக்  காண்பிக்க சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த எடப்பாடியையே நீக்கினார்.

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை தினகரன் நீக்குவது, அவர் ஆதரவாளர்களை அப்பதவிகளுக்கு நியமிப்பது உள்ளிட்ட வேலைகளில் இறங்கினார். இதனால் பொறுத்தது போதும் என நினைத்த எடப்பாடி அணியினர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி துணை பொதுச் செயலாளரின் நியமனமே கேள்விக்குறியாக உள்ள நிலையில் அவரால் செய்யப்பட்ட நியமனங்கள் ஏதும் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்நிலையில் சசிகலா, தினகரனை நீக்குவது உள்ளிட்ட 14 தீர்மானங்களை நிறைவேற்ற அ.தி.மு.க பொதுக் குழு கூட்டம் நேற்று கூடியது. எதிர்பார்த்தபடியே இருவரையும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளனர்.

முதல் முறையாக...
பொதுவாக பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கவும், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றமும் மட்டுமே பொதுக் குழு கூடுவது வழக்கம். ஆனால் நேற்று எடப்பாடியால் கூட்டப்பட்ட பொதுக் குழுவில் முதல் முறையாக நியமன பொதுச் செயலாளரை நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றியுளளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து