தினகரனைத் தேடும் புதுவை ரிசார்ட் உரிமையாளர் ரூ18 லட்சம் செலுத்தாமல் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எஸ்கேப்

செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் 2017      தமிழகம்
ttv-dinakaran 2017 02 25

சென்னை: புதுவை சொகுசு ரிசார்ட்டில் 19 எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்ததற்காக ரூ18 லட்சம் கட்டணத்தை செலுத்தாமல் தினகரன் தரப்பு எஸ்கேப் ஆகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெங்களூரு சிறையில் சசிகலாவை நேற்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சந்திக்கும் முயற்சி நடக்கவில்லை. பொதுக்குழுவுக்கு எதிராக வெற்றிவேல் நடத்திய சட்டப் போராட்டமும்  வெற்றிபெறவில்லை. இதைவிடக் கொடுமை, புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியதற்கான கட்டணத்தை தினகரன் தரப்பினர் செலுத்தவில்லையாம் . இதனால் ரிசார்ட் தரப்பில் நொந்து போய் உள்ளனர்' என்கின்றன புதுவை வட்டாரங்கள்

முடிவு சொல்லாத ஆளுநர் மாளிகை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என கையெழுத்து போட்டு, அ.தி.மு.கவின் 19 எம்.எல்.ஏக்களும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதன்பேரில் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த ஆளுநர் அலுவலகம், தற்போது வரையில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
ஆளுநரும் மும்பை கிளம்பிச் சென்றுவிட்டார். எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதற்காக புதுச்சேரியில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் அவர்களைத் தங்க வைத்தார் தினகரன். தங்க.தமிழ்ச்செல்வனின் பாதுகாப்பில் அவர்கள் இருந்தாலும், பெண் எம்.எல்.ஏக்கள் இருவர் போர்க்கொடி உயர்த்தியதாகத் தகவல் வெளியானது.


கர்நாடகாவில் ஜாகை
இந்நிலையில் தினகரன் தரப்பில் ஜக்கையன் எம்.எல்.ஏ அணி மாறியதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த ரிசார்ட் உரிமையாளர், மிகுந்த கவலையில் இருக்கிறாராம்.

ரூ18 லட்சம் வாடகை
ரிசார்ட்டில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியதற்கான மொத்த வாடகையான ரூ18 லட்சத்தை யாரிடம் வசூலிப்பது எனத் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறாராம்.

ஆனால், விடுதியைக் காலி செய்துவிட்டுச் சென்றவர்கள், தற்போது வரையில் கட்டணத் தொகையை செலுத்தவில்லை. இவர்களுக்கு சிபாரிசு செய்த அரசியல் பிரமுகரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பாக இருந்த தங்க.தமிழ்ச்செல்வனிடமும் அவர்களால் பேச முடியவில்லை. எனவே, தினகரனை நேரடியாக சந்தித்து முறையிடுவது என ரிசார்ட் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து