அ.தி.மு.க.வில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது: சசிகலா நியமனம் ரத்து - பொதுக்குழுவில் நிறைவேற்றம்

செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் 2017      தமிழகம்
admk general council 2017 9 12

சென்னை : அ.தி.மு.க.வில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச் செயலாளர். இனி பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வர் எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளராகவும் அ.தி.மு.க பொதுக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் கட்சியில் சேர்த்தல்-நீக்கல் அதிகாரம் வழங்கி கட்சியின் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்வதோடு, அவரால் 30.12.2016 அன்று முதல் 15.2.2017 வரை மேற்கொண்ட நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது மற்றும் தினகரனின் நியமனங்கள், அறிவிப்புகள் செல்லாது உள்ளிட்ட 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழுக் கூட்டம்

அ.தி.மு.க (அம்மா), அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா ஆகிய அணிகளின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் வருமாறு:-


கட்சி பணிகளுக்கு வருவதற்கு முன்னரே நாடு போற்றும் புகழ் பெற்றிருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தனது புகழை கட்சிக்கு அர்ப்பணித்து அதன் மூலம் கட்சி மேலும் வலுப்பெற பல ஆண்டுகள் பணியாற்றியவர். எனவேதான், அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா என அழைத்தோம். தந்தை பெரியாரை தலைவராக ஏற்று பொதுவாழ்வில் நடைபோட்ட அண்ணா தான் உருவாக்கிய கட்சிக்கு தலைவர் என்று யாரையும் குறிப்பிடாமல் அந்த தகுதி தந்தை பெரியாருக்கு மட்டுமே உரியது என வாழ்ந்தார்.

அண்ணா தனது தலைவராம், தந்தை பெரியார் மீது கொண்டிருந்த மரியாதையை பின்பற்றும் அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என்பதை நிலைநாட்டவும், அவர்களின் வாழ்வைப் போற்றவும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற பெருமை மறைந்த ஜெயலலிதாவிற்கு மட்டுமே உரியது.

பொதுச்செயலாளர் இனி இல்லை

எனவே, அ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர், அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த இரு பெரும் தலைவர்கள் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் ஒருபோதும் நிரப்ப முடியாது என்ற காரணத்தால், இனி அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு இல்லை என்று முடிவெடுத்து அந்தப் பதவியை ரத்து செய்கிறோம். அதற்கு ஏற்ப, அ.தி.மு.க.வின் சட்டதிட்ட விதி எண்.43 திருத்தம் செய்யப்படுகிறது. இந்தத் திருத்தங்களை பொதுக்குழு ஏகமனதாக ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது.

சசிகலா நியமனம் ரத்து

அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாருமான வைத்திலிங்கம் எம்.பி. முன்மொழிந்த தீர்மானத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தந்த அதிர்ச்சியும், கவலையும் நிறைந்த சூழ்நிலையில் 2016-ம் ஆண்டு டிசம்பர்  29-ம் தேதி கூட்டப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள சசிகலா கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்வதோடு, சசிகலா 30.12.2016 அன்று முதல் 15.2.2017 வரை மேற்கொண்ட நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது.

அதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பொதுக்குழு கூட்டங்களில் உரையாற்றிய போது கட்சியை கட்டிக் காக்கவும், கட்சியை அபகரிக்க சிலர் செய்யும் சூழ்ச்சிகளை முறியடிக்கவும் தான் படுகின்ற துன்பங்களையும், எதிர்கொள்ளும் வேதனைகளையும் பலமுறை எடுத்துக் கூறியிருக்கிறார்.

அறிவிப்புகள் செல்லாது

அ.தி.மு.க. தொண்டர்களின் இயக்கமாகவும், மக்களுக்குத் தொண்டாற்றும் இயக்கமாகவும் திகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கட்சியின் நிர்வாக அமைப்பினை சீர்குலைக்கும் நோக்கிலும் அ.தி.மு.க. சட்டதிட்ட விதிகளின்படி நியமனம் செய்யப்படாதவரும், கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாதவருமான டி.டி.வி.தினகரன் கட்சியின் நிர்வாகிகளை நீக்குவது மற்றும் புதிதாக நியமிப்பது குறித்து வெளியிடும் எந்த ஓர் அறிவிப்பும் செல்லத்தக்கதல்ல. அவை கட்சியின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டது இல்லை என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய காலத்திற்குப் பிறகும் கட்சி நூறாண்டுகளுக்கு மக்கள் பணியாற்ற வேண்டும் என்று சூளூரைத்தார். வாரிசு அரசியலுக்கு இடம் தராமல் ஜனநாயக இயக்கமாக அ.தி.மு.க. இருக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம். இதனை கட்சியின் பொதுக்குழு கூட்டங்களிலும், சட்டமன்றத்திலும் பலமுறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.

2 முக்கிய பொறுப்புகள்

அ.தி.மு.க.வை வழி நடத்த, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளை உருவாக்கப்படுகிறது.

கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால், கட்சியின் அமைப்புத் தேர்தல் மூலம், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கட்சியின் அமைப்புத் தேர்தல் நடைபெறும் வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கையினை பெற்று பல ஆண்டுகள் கட்சிப் பணியாற்றி வந்திருக்கும் கட்சியின் முன்னோடிகளான பொருளாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும், சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

கட்சியின் பொதுச் செயலாளருக்கு கட்சியின் சட்ட திட்ட விதிகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முழுமையாகப் பெற்று கட்சியை வழிநடத்துவர். இரண்டு கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்படவும், அவற்றில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் நியமிக்கப்படுகின்றனர். மேலும், கட்சியின் வழிகாட்டுக்குழு ஒன்று அமைக்கப்படுகிறது.

அ.தி.மு.க. சட்டதிட்ட விதிகளின்படி, கட்சியின் பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்து பொறுப்புகளும் அதிகாரங்களும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையாக வழங்கப்படுகிறது.

இருவரும் கையெழுத்திட்டு...

தேர்தல் ஆணையத்திற்கும், அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும், வங்கி கணக்குகள் உள்ளிட்ட அனைத்து வரவு செலவுகளுக்கும், அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட வேண்டிய படிவம் ஏ, படிவம் பி உள்ளிட்ட அனைத்து வகை ஆவணங்களிலும் மற்றும் கட்சி தொடர்புடைய அனைத்து அறிவிப்புகளிலும், நியமனங்களிலும் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளிலும், ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து, இருவரும் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகள்

முன்னதாக அ.தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இரு கூட்டங்களிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா உருவப்படத்திற்கு அமைச்சர்கள் கட்சியின் நிர்வாகிகள் மலர்களை தூவி மரியாதை செய்தனர். பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தையொட்டி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து வானகரம் கல்யாண மண்டபம் வரை அ.தி.மு.க பேனர்கள், கொடிகள் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. பொதுக்குழுவுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பொதுக்குழு முடிந்து இருவரும் புறப்பட்ட போது அ.தி.மு.க தொண்டர்கள் வாழ்த்து முழக்கங்களுடன் வழியனுப்பிவைத்தனர்.

தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்

* இரட்டை இலை சின்னத்தை  மீட்க வேண்டும் என முதல் தீர்மானம் நிறைவேற்றம்.

* அ.தி.மு.க இரு அணிகளும் இணைந்ததற்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு பாராட்டி தீர்மானம்.

* வார்தா புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு.

* ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி.

* தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றம்.

* யார் யார் என்ன என்ன பொறுப்புகளில் இருந்தார்களோ அதில் தொடர்வார்கள்.

* அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்கும் அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* பொதுச்செயலாளர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது. அ.தி.மு.கவில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என சட்டதிருத்தம் கொண்டு வரப்படும்.

*வழிகாட்டு குழுவிற்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

* ஒருங்கிணைப்பு குழு  தலைவராக ஓ. பன்னீர் செல்வமும், ஒருங்கிணைப்பு குழு துணைத்தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார்கள்.

* ஒருவரை கட்சியில் சேர்க்கவோ நீக்கவோ எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் பொதுக்கூழுவில் ஒப்புதல்.

*கட்சி விதியில் சட்டதிருத்தம் கொண்டு வர ஈபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* கட்சி விதி எண் 19-ல் திருத்தத்தம் செய்ய  ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*துணை ஒருங்கிணைப்பாளர்களாக வைத்தியலிங்கம், கே.பி முனுசாமி நியமனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து