ஓராயிரம் தினகரன்கள் வந்தாலும் ஆட்சியையோ, கட்சியையோ ஆட்டவோ - அசைக்கவோ முடியாது - பொதுக்குழுவில் முதல்வர் எடப்பாடி ஆவேசப்பேச்சு

செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் 2017      தமிழகம்
cm edapadi speech 2017 9 12

சென்னை : ஓராயிரம் தினகரன் வந்தாலும், இந்த ஆட்சியையோ, கட்சியையோ அசைக்கவோ, ஆட்டவோ முடியாது என்று அ.தி.மு.க பொது்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
வெற்றி கிடைத்திருக்கின்றது

அப்போது அவர் பேசியதாவது:-

இன்றைக்கு நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா ? நடைபெறாது என்றெல்லாம் எதிர்பார்த்தார்கள். ஜெயலலிதாவின் ஆத்மா இந்த பொதுக்குழுக்கூட்டம் நடைபெற வேண்டும் என்று நீதியை நீதிமன்றம் மூலமாக பெற்று, உண்மையான அ.தி.மு.க விசுவாசம் மிக்க பொதுக்குழு உறுப்பினர்கள் தான் இந்த பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டுவார்கள் என்று நீதிமன்றமே நமக்கு நீதி வழங்கியிருக்கிறது. ஆகவே, நீதிமன்றம் மூலமாக நீதி கிடைத்திருக்கிறது. ஆகவே, முதல் வெற்றி நமக்கு இன்று கிடைத்திருக்கின்றது. பிரிந்த இயக்கம் ஒன்றாக இணைந்த வரலாறு இந்தியாவிலேயே ஒரு சில இயக்கங்களுக்குத் தான் பொருந்தும்.


அற்புதமான ஆட்சி

எம்.ஜி.ஆர். மறைந்தபொழுது, ஜெயலலிதா பிரிந்த இயக்கத்தை ஒன்றாக இணைத்து மீண்டும் எம்.ஜி.ஆரின் ஆட்சியை 1991-லே அமைத்த பெருமை ஜெயலலிதாவை சாரும். ஆகவே, இந்தக் கட்சிக்கு வரலாறு இருக்கின்றது. எவராக இருந்தாலும், கட்சியை உடைக்கவோ, மாற்றவோ முடியாது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அம்மா மறைந்துவிட்டார்.  இந்த இயக்கத்தை அழித்துவிடலாம், ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்றெல்லாம் நினைத்தார்கள். தி.மு.க எவ்வளவோ பிரச்னையை தூண்டியது. அதையெல்லாம் உங்களுடைய ஆதரவினால் அதை தவிடுபொடியாக்கி ஜெயலலிதாவின் கனவை அம்மாவினுடைய அரசு நிறைவேற்ற வேண்டுமென்ற அடிப்படையிலே இன்றைக்கு அற்புதமான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.

மக்களுக்காக உழைத்தவர்

ஜெயலலிதா பிறக்கின்றபொழுதே செல்வாக்கு மிக்கவராக பிறந்தவர். வாழ்கின்றபொழுது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார். இந்த இயக்கத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஜெயலலிதா , முதலமைச்சராக பொறுப்பேற்று நாள்தோறும் 20 மணிநேரம் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்து, எண்ணற்ற திட்டங்களை நாட்டு மக்களுக்கு தந்து, இன்றைக்கு மக்கள் மனதிலே குடிகொண்டிருக்கின்றார் என்று சொன்னால், அவர் போட்ட திட்டம், எந்த ஆட்சியாளர்களாலும் அகற்ற முடியாத திட்டத்தை தமிழகத்திலே போட்டிருக்கின்றார்கள். ஆகவே தான் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுகின்ற கட்சியே, மீண்டும் தமிழகத்திலே வந்திருக்கின்றது என்பதை இந்த நேரத்திலே நினைவுகூர கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஆகவே, ஜெயலலிதாவின் அருமை, பெருமைகளை மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். இதையெல்லாம் பார்க்கின்றபோது, ஏன் நம் மீது பகைவர்களுக்கு இவ்வளவு கோபம்? கனி இருக்கின்ற மரத்திலே தான் கல்லடி படும் என்று கிராமத்திலே பழமொழி சொல்லுவார்கள். வலிமைமிக்க இயக்கம்அ.தி.மு.க . ஆகவே தான் அத்தனை எதிர்க்கட்சிகளும் நம் மீது பாய்கின்றார்கள். ஆகவே, எதிர்க்கட்சியினர் எவ்வளவு பாய்ந்தாலும் சரி, எவ்வளவு சிரமங்கள் கொடுத்தாலும் சரி, இடர்பாடுகள் கொடுத்தாலும் சரி, உங்கள் துணையோடு அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து, உடைத்தெறிந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்றியே தீருவோம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

எவ்வளவோ சிரமங்கள்

தினகரன், யார் இவர் ? 10 ஆண்டு காலம் எங்கே போனார் ? வனவாசம் போயிருந்தார். ஜெயலலிதாவால் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி வைக்கப்பட்டவர் இந்த தினகரன். இன்றைக்கு நம்மைப் பார்த்து கேட்கின்றார். மேடையிலே இருக்கின்றவர்கள் உங்களையும், என்னையும் துரோகி என்று பட்டம் சூட்டுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கின்றது ? என்று இந்த நேரத்திலே கேட்க விரும்புகின்றேன். இங்கே வருகை புரிந்திருக்கின்றவர்களும், மேடையிலே அமர்ந்திருக்கின்றவர்களும் இரவு, பகல் பாராமல் இரத்தத்தை மண்ணிலே, சிந்தி, உழைத்ததின் காரணமாக, ஜெயலலிதாவின் செல்வாக்கின் காரணமாக இந்த கட்சியும், ஆட்சியும் உயர்ந்து நிற்கின்றது. இவர்களைப்போல துரோகிகள் யாரும் இல்லை. எவ்வளவோ சிரமத்தை கொடுத்தார்கள். ஜெயலலிதா அதையெல்லாம் தாங்கிக்கொண்டு இந்த கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி சென்றார்கள்.

தொண்டர்களின் உழைப்பு

ஜெயலலிதாவின் விசுவாசி என்று சொல்கின்றார்களே, ஏன் 10 ஆண்டுகாலம் நீக்கி வைத்தார்கள் இவர்களை, எண்ணிப் பாருங்கள். அம்மாவால், இந்தக் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக்கூடாது என்று நீக்கி வைக்கப்பட்டவர்கள் இவர்கள். இவர்கள் கட்சிக்கும், ஆட்சிக்கும் உரிமை கொண்டாடுகின்றார்கள். எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சிந்தியுங்கள். இங்கு வருகை புரிந்திருக்கின்ற அ.தி.மு.க , பொதுக்குழு உறுப்பினர்கள் இரவு, பகல் பாராமல் உழைக்கின்றார்கள். ஜெயலலிதா எந்தத் தேர்தலை வந்தாலும், அது கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆனாலும் சரி, உள்ளாட்சித் தேர்லானாலும் சரி, நாடாளுமன்ற தேர்தலானாலும் சரி, அம்மா நிறுத்துகின்ற வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது தான் இலட்சியம் என்ற குறிக்கோளோடு இயங்கிக் கொண்டிருக்கின்ற பொதுக்குழு உறுப்பினர்கள் நீங்கள். ஒன்றரை கோடி அ.தி.மு.க தொண்டர்களின் உழைப்பு, அம்மாவிற்கு பெரும் செல்வாக்கை உருவாக்கியிருக்கின்றது. அம்மா செய்த சாதனைக்கு இன்றைக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.

எப்படி நீக்கமுடியும் ?

இவர்கள், இன்றைக்கு ஆட்சியை கவிழ்ப்போம் என்று சொல்கின்றார்கள். என்ன தகுதி இருக்கின்றது எண்ணிப் பாருங்கள். ஏற்கனவே திட்டமிட்டு இந்த கட்சியை உடைக்க வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். நாள்தோறும் நீக்கல் பட்டியல். இவரே உறுப்பினரில்லை, இவர் எப்படி மற்றவர்களை நீக்கமுடியும். சொல்லுங்கள் பார்க்கலாம். முதலில் நீ உறுப்பினரா? நீங்களே உறுப்பினராக இல்லாதபோது எப்படி நீங்கள் நீக்க முடியும். இவர் வேண்டுமென்றே திட்டமிட்டு இன்றைக்கு உண்மையாக இருக்கின்ற அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் இதைக் கூட்டி தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று எண்ணி, நீதிமன்றம் சென்றார். நீதிமன்றத்தில் என்ன கிடைத்தது? நீதிதான் வென்றது, என்றைக்கும் நீதி தான் வெல்லும். ஆகவே, இன்றைக்கு நீதி வென்றிருக்கிறது. முதல் கட்டத்திலேயே நமக்கு சாதகமாக இருக்கின்றது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக் காட்டி, தினகரன் போல, ஓராயிரம் தினகரன் வந்தாலும், இந்த ஆட்சியையோ, கட்சியையோ அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. ஒரு தொண்டன் மீது கூட இவர்கள் கை வைக்க முடியாது, பிரிந்து செல்லமாட்டார்கள்.

அழிக்கவும் முடியாது

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம்,  அம்மா கட்டிக்காத்த இயக்கம், இருபெரும் தலைவர்களும் உருவாக்கிய இந்த இயக்கத்தை எவராலும் வெல்லவும் முடியாது, அழிக்கவும் முடியாது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன். ஆகவே, சிலர் கைக்கூலியாக மாறிவிட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயல்தலைவர் ஸ்டாலின், அவர் எப்பொழுது பார்த்தாலும், மைக் கிடைத்துவிட்டால் போதும், இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும், என்னய்யா உனக்கு துரோகம் செய்தது இந்த ஆட்சி? சொல்வார்களா? ஆகவே, இந்த ஆட்சி, முறைப்படி தேர்தலில் வென்ற ஆட்சி, சட்டமன்றத்திலே நிரூபிக்கப்பட்ட ஆட்சி, ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே, இன்றைக்கு ஆட்சி, அதிகாரம் இரண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து