நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் 15-ம் தேதி நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் 2017      தமிழகம்
Madurai high court branch 2017 9 4

மதுரை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை (செப்.15) நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கூட்டு செயல் குழு (ஜாக்டோ - ஜியோ) சார்பில் 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்ப்டடது. இதற்கு தடை விதிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.சேகரன் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பேராட்டம் நடத்துவது அடிப்படை உரிமையாகாது என்று கூறி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து 7.9.2017-ல் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டு, விசாரணை செப். 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில் உயர் நீதிமன்றம் தடை விதித்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்வதால், இதனால் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் தாஸ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மோசஸ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் சேகரன் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன் பிறகும் சென்னை திருவல்லிக்கேணியில் சங்க நிர்வாகிகள் 9.9.2017-ல் கூட்டம் நடத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்வதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் 7 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்றதாகவும், இவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெறுவதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் 8.9.2017-ல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 74,675 ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு அரசு நோட்டீஸ் அனுப்பியது. வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தடையை நீக்கக்கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யாமல், வேலை நிறுத்தத்தை தொடர்வது நீதிமன்ற அவமதிப்பதாகும். இதனால் நீதிமன்ற உத்தரவை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற அவமதிப்பு மனு தொடர்பாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் வரும் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து