ராணுவத்தில் வெடிமருந்துகள் பற்றாக்குறையா ? சி.ஏ.ஜி அறிக்கைக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் 2017      இந்தியா
Nirmala Sitharaman 2017 9 12

புதுடெல்லி : போர் வந்தால் 20 நாட்களுக்கு சமாளிக்கும் அளவுக்குதான் ராணுவத்திடம் வெடிமருந்துகள் இருக்கின்றன என்று மத்திய கணக்கு தணிக்கை துறை அளித்துள்ள அறிக்கை தவறானது. இதுகுறித்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை’’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, மத்திய கணக்கு தணிக்கைத் துறையின் (சிஏஜி) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், ‘அண்டை நாடுகள் ஒருவேளை நம் நாட்டின் மீது போர் தொடுத்தால், அதை எதிர் கொள்ள நம் ராணுவத்திடம் வெடிமருந்துகள் போதிய அளவு இல்லை. வெறும் 20 நாட்களுக்கு மட்டுமே வெடிமருந்து கையிருப்பு உள்ளது. குறைந்தபட்சம் 40 நாட்களுக்குத் தேவையான வெடிமருந்துகள் கையிருப்பு இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

போர் வந்தால் 20 நாட்களுக்கு சமாளிக்கும் அளவுக்குதான் ராணுவத்திடம் வெடிமருந்துகள் இருக்கின்றன என்று மத்திய கணக்கு தணிக்கை துறை அளித்துள்ள அறிக்கை தவறானது. -
அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மேலும் கடந்த 2013-ம் ஆண்டுக்குப் பிறகு ராணுவத்துக்கு தேவையான அளவு வெடிமருந்துகளை அரசு வெடிமருந்து தொழிற்சாலை சப்ளை செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்நிலையில் பாதுகாப்புத் துறை புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், ராஜஸ்தான் மாநிலம் உட்டார்லாய் விமானப் படை தளத்தை நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராணுவத்தில் வெடிமருந்து பற்றாக்குறை என்று சிஏஜி வெளியிட்ட அறிக்கை தவறானது. ராணுவத்திடம் ஆயுதங்கள் பற்றாக்குறை எதுவும் இல்லை. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டியது தேவையற்றது. நான் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ராணுவ உயரதிகாரிகள், நிபுணர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினேன். ஆயுதங்கள் தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

நிர்மலா சீதாராமனுக்கு முன்பு பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கும்போது, ‘‘ஒரு கால கட்டத்தில் மட்டும்தான் வெடிமருந்து குறைவாக இருந்தது. அதன் பின்னர் தற்போது நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. வெடிமருந்துகளை கையிருப்பில் வைப்பது தொடர்ந்து நடக்கும் பணியாகும். எனவே, போதிய ஆயுதங்கள், வெடிமருந்துகள் பற்றியோ அல்லது போர் வந்தால் நமது படைகளின் தயார் நிலை குறித்தோ யாருக்கும் சந்தேகம் வேண்டாம்’’ என்று கூறினார்.


இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து