12 நாட்களாக நடைப்பெற்ற பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      சினிமா
kala shotting 2017 8 3

சென்னை : பெப்சிக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இடையே நிலவி வந்த மோதலால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பெப்சி தொழிலாளர்கள் நேற்று முதல் பணிக்கு திரும்பி உள்ளனர்.

வேலை நிறுத்தம்

திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பான ‘பெப்சி’- பட அதிபர்கள் இடையே மோதல் சமீபத்தில் ஏற்பட்டது. இதன் காரணமாக ‘பெப்சி’ அமைப்பினர் கடந்த 1-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக, ரஜினி காந்த் நடிக்கும் ‘காலா’ உள்பட 30-க்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப்புகள் 12 நாட்களாக நடைபெறவில்லை. வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பு நடத்தலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. என்றாலும் வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்பு தவிர வேறு படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.


பேச்சுவார்த்தை

எனவே, வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் ‘பெப்சி’ நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. சில தினங்களில் பிரச்சினை தீர்வுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் 12 நாட்களாக எந்த தீர்வும் ஏற்படவில்லை. சில தினங்களாக நடந்த பேச்சுவார்த்தையில், பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. என்றாலும் ஒரு சில பிரச்சினைகள் தொடர்பாக தீர்வு ஏற்படாமல் இழுபறி ஏற்பட்டது. இது குறித்து பெப்சி அமைப்பில் உள்ள 22 சங்கத்தினரிடமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது.

சுமூக தீர்வு

இதையடுத்து இரு தரப்பினரிடையே சுமூக தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. இதில் தயாரிப்பாளர்கள், பெப்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் சிறிது இழுபறி ஏற்பட்டது. இதனால் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நீடித்தது. இறுதியில் சுமூக தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், ‘பெப்சி’ தலைவர் செல்வமணி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதை தொடர்ந்து பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதாக நேற்று முன்தினம் நள்ளிரவு அறிவிக்கப்பட்டது.

படப்பிடிப்பு...

ஸ்டிரைக் வாபஸ் ஆனதால் பெப்சி தொழிலாளர்கள் நேற்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். இதனால் ரஜினியின் ‘காலா’ உள்பட அனைத்து படப்பிடிப்புகளும் மீண்டும் தொடங்கி உள்ளன. 12 நாட்களாக நடந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் திரைப்பட துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து