இந்திய பாதிரியார் விடுதலை: ஒமன் மன்னருக்கு நன்றி தெரிவித்த போப் ஆண்டவர்

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      இந்தியா
Wor - Father Uzhunnalil 2017 09 13

திருவனந்தபுரம்: இந்திய பாதிரியார் தாமஸ் உலுன்நளில் விடுதலை ஆக முயற்சி மேற்கொண்ட ஒமன் நாட்டு மன்னருக்கு போப் ஆண்டவர் நன்றி தெரிவித்துள்ளார்.

கடத்தல்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் தாமஸ் உலுன்நளில்.இவர், ஒமன் நாட்டில் அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த இல்லத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை சுட்டுக் கொன்றனர். பின்னர் அந்த இல்லத்தில் இருந்த பாதிரியார் தாமஸ் உலுன்நளிலை கடத்திச் சென்றனர். அதன் பிறகு அவர், என்னவானார்? என்பது தெரியாமல் இருந்தது. சில மாதங்களுக்கு பிறகு தாமஸ் உழுநாளில் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டனர். அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கத்தோலிக்க அமைப்புகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.

விடுதலை
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.18 மாதங்கள் ஆன நிலையில் பாதிரியார் தாமஸ் உலுன்நளில் கடந்த 3 நாட்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டார். இதனை மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜும் உறுதி செய்தார். அவர், இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் தாமஸ் உலுன்நளில் மீட்கப்பட்ட செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார். மேலும் தாமஸ் உலுன்நளில் விரைவில் இந்தியா திரும்புவார் என்றும் தெரிவித்திருந்தார்.


பாராட்டு
இதற்கிடையே ஒமன் நாட்டு மன்னரும், பாதிரியார் தாமஸ் உலுன்நளில் விடுதலை ஆன தகவலை உறுதி செய்தார். இதற்கு உலக கத்தோலிக்க தலைமையகமான வாடிகன் அரண்மனை பாராட்டும், நன்றியும் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாதிரியார் தாமஸ் உலுன்நளில் விடுதலை ஆக முயற்சி மேற்கொண்ட ஒமன் நாட்டு மன்னருக்கு வாடிகன் நன்றி தெரிவிக்கிறது. இதற்காக முயற்சி மேற்கொண்ட அனைவரையும் போப் ஆண்டவர் பாராட்டுகிறார். விடுதலையான பாதிரியார் தாமஸ் உலுன்நளில் ஒமன் நாட்டில் இருந்து வாடிகன் வருகிறார். இங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்த பின்பு அவர், மீண்டும் இந்தியா செல்வார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து