தடையை மீறி தொடர்ந்து போராட்டம் நடத்தினால் ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்து மாணவர்களுக்கு இழப்பீடு தர நேரிடும் - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      தமிழகம்
highcourt chennai 2017 09 06

சென்னை : தடையை மீறி நடந்துவரும் ஆசிரியர்கள் சங்கங்களின் போராட்டத்தால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டியதிருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனு தாக்கல்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சூரிய பிரகாசம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவ- மாணவிகள் பலர் நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மனசோர்வு அடையும் மாணவ-மாணவிகள் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். அது போன்ற பாதிப்புகளில் இருந்து மாணவர்களை மீட்டெடுக்க சிறப்பு குழுக்களை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறி இருந்தார்.


நீதிபதி கண்டனம்

இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் சூரிய பிரகாசம் நீட்தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்களின் போராட்டமும் தொடர்கிறது என்று குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்துக்கு நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

நீதிபதி கேள்வி

போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போராட்டம் நடத்தும் இவர்கள் எதிர்காலத்தில் ஏதாவது நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும். ஆசிரியர் சங்கங்கள்தான் போராட்டத்தை தூண்டுகின்றன. எனவே ஆசிரியர் சங்கங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தருணம் இது.

சம்பளம் பிடித்தம்...

இந்த போராட்டத்தால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டியதிருக்கும். இதற்கு முன்னரும், தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அதுவும் நீட் தேர்வில் மாணவர்கள் சோபிக்க முடியாமல் போனதற்கு ஒரு காரணமாகும். தவறு செய்த ஆசிரியர்கள் மீது ஆசிரியர் சங்கத்தினர் எப்போதாவது நடவடிக்கை எடுத்தது உண்டா? அது போல் நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு ஆசிரியர்கள் கூட சங்கத்தில் இருந்திருக்க மாட்டார்கள். ஆசிரியர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.அரசு அலுவலகங்களில் பணியாற்றும் நல்ல அதிகாரிகள் பலர் வேலை செய்ய விடாமல் தடுக்கப்படுகிறார்கள். இதுபோன்று முட்டுக்கட்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து