அகமதாபாத் - மும்பை இடையே 'புல்லட் ரெயில்' திட்டம்: பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் அபே இன்று அடிக்கல் நாட்டுகின்றனர்

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      இந்தியா
PM Modi- Japan PM abe 2017 9 13

ஆமதாபாத் : அகமதாபாத் - மும்பை இடையே 'புல்லட் ரெயில்' திட்டத்தை பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் அபே இணைந்து இன்று அடிக்கல் நாட்டுகின்றனர்.

இந்தியா வருகை

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று குஜராத் வந்தார். அங்கு அவருக்கு ஆமதாபாத் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு ஜப்பான் பிரதமரை வரவேற்றனர். ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேராக மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சாலை மார்க்கத்தில் காரில் சென்றார். உடன் பிரதமர் மோடியும் சென்றார். பின் காந்தி ஆசிரமத்தை ஜப்பான் பிரதமர் சுற்றிப் பார்த்தார்.


புல்லட் ரயில் திட்டம்

இன்று ஆமதாபாத்தில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் அபேயும் இணைந்து மும்பை- ஆமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரெயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகின்றனர்.  மும்பை- ஆமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்கும் இந்த புல்லட் ரெயில் திட்டம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்றப்படுகிறது. 2022-23ம் ஆண்டில் திட்டம் முடிவடைந்து ரெயில் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளில் ...

இந்த திட்டத்துக்கு ஜப்பான் அரசு ரூ.88 ஆயிரம் கோடி நிதியை 0.1 சதவீத வட்டியில் கடனாக அளிக்கிறது. இந்த நிதி 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்படும். 508 கி.மீ. தூரத்தில் 468 கி.மீ. தூரம் உயர்மட்ட பாதையில் அமைக்கப்படும் தண்டவாளத்திலும், 27 கி.மீ. தூரம் தரைவழி சுரங்கத்திலும், 7 கி.மீ. தூரம் கடல் வழி சுரங்கத்திலும், 13 கி.மீ. தரையிலும் புல்லட் ரெயில் ஓடும்.

15 ஒப்பந்தங்கள்

முன்னதாக மோடி- அபே பேச்சுவார்த்தையின் போது 15 ஒப்பந்தங்களில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திடுகிறார்கள். இந்த ஒப்பந்தங்கள் குஜராத் மாநிலத்தில் ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான திட்டங்கள் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து