திருமங்கலம் அருகே கிராமத்திற்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      மதுரை
tmm news

 திருமங்கலம்.-திருமங்கலம் தாலுகாவில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக கள்ளிக்குடி அருகேயுள்ள வடக்கம்பட்டி கிராமத்திற்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்ததால் பாதுகாப்பான இடங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் தாலுகாவில் உள்ள ஊரணிகள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில் தற்போது பாசன கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கி கள்ளிக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் வில்லூர் தொடங்கி கள்ளிக்குடி வரையிலான பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் உருவாகி பிரியாணி கிராமம் என்று அழைக்கப்படும் வடக்கம்பட்டி கிராமத்து ஊரணியில் தேங்கத் தொடங்கியது.காட்டாற்று வெள்ளத்தின் சீற்றம் அதிகமாக இருந்ததன் காரணமாக நேற்று அதிகாலை வடக்கம்பட்டி ஊரணி நிரம்பி காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது.
ஊரணியிலிருந்து தண்ணீர் வெளியேறுவதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாழ்வான பகுதிகளில் வசித்திடும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். இருப்பினும் சிறது நேரத்திற்குள்ளாக வடக்கம்பட்டி கிராமத்தின் அனைத்து தெருக்களிலும் காட்டாற்று வெள்ளம் புகுந்துவிட்டது.இதுபற்றி தகவலறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுத்ததுடன் தண்ணீர் வேகமாக வெளியேறிச் சென்றிட வழியமைத்துக் கொடுத்தனர்.காலை தொடங்கி மதியம் வரையில் சுமார் 8மணி நேரத்திற்கு மேலாக வீதிகளில் ஓடிய காட்டாற்று வெள்ளம் மழை குறைந்த காரணத்தினால் முற்றிலுமாக வடிந்து விட்டது.இதையடுத்தே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து