முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நூற்றாண்டு விழாவையொட்டி எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 மற்றும் 5 ரூபாய் நாணயங்களை மத்திய அரசு வெளியிடுகிறது.

மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களது உருவம் பொறித்த தபால்தலைகள் மற்றும் நாணயங்கள் வெளியிடப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்றும் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் அவர்களது உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியிடப்பட உள்ளன.

இதுபற்றிய அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

இந்த புதிய நாணயங்கள் 100 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 5 ரூபாய் மதிப்புகளில் வெளியாகிறது. எம்.ஜி.ஆர். உருவம் பொறித்து 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படுகிறது. இந்த நாணயங்களில் அவரது நூற்றாண்டை குறிக்கும் வகையில் ‘1917-2017’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். எம்.எஸ்.சுப்புலட்சுமி உருவத்துடன் 100 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் வெளிவரும். இந்த நாணயங்களில் அவரது நூற்றாண்டை குறிக்கும் வகையில் ‘1916-2016’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

100 ரூபாய் நாணயங்கள் 44 மி.மீ. விட்டத்துடன் 35 கிராம் எடையிலும், 10 ரூபாய் நாணயங்கள் 27 மி.மீ. விட்டத்துடன் 7.71 கிராம் எடையிலும், 5 ரூபாய் நாணயங்கள் 23 மி.மீ. விட்டத்துடன், 6 கிராம் எடையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் 100 ரூபாய் நாணயங்கள் முதல்முறையாக இனிதான் புழக்கத்துக்கு வர இருக்கிறது. அந்த நாணயங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உருவங்களே முதன்முதலாக இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நாணயங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து