முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் முகவை ஊருணி ரூ.35 லட்சத்தில் சீரமைப்பு செய்யதம்மாள் அறக்கட்டளை சார்பில் பணிகள் தீவிரம்

வியாழக்கிழமை, 14 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- சேதுபதி மன்னர்கள் காலத்திற்கு பிறகு ராமநாதபுரத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த முகவை ஊருணி ராமநாதபுரம் செய்யதம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.35 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
    ஆண்டாண்டு காலமாக வறட்சியான மாவட்டம் என்று பெயர் பெற்ற ராமநாதபுரத்தின் ஒரே நீர் ஆதாரம் வைகை தண்ணீரும், வடகிழக்கு பருவமழையும்தான். இவை இரண்டும் இந்த மாவட்டத்தை ஆண்டுதோறும் வஞ்சித்துவிடுவதால் ராமநாதபுரத்திற்கு வறட்சியான மாவட்டம் என்ற பெயர் காலம்காலமாக இருந்து வருகிறது. மன்னர்கள் ஆண்ட காலத்தில் இருந்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை வைகை தண்ணீர் ஆண்டுதோறும் ராமநாதபுரத்திற்கு வந்து கொண்டிருந்தது. ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் இந்த வைகை தண்ணீரை 50-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் சேமித்து வைத்து பயன்படுத்தி வந்தனர். வைகை தண்ணீரால் பெரியகண்மாய் நிரம்பியதும் முறையாக அமைக்கப்பட்டிருந்த மடைகள் மற்றும் வரத்துகால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு அனைத்து ஊரணிகள் மற்றும் கண்மாய்கள் நிரம்பும் வகையில் சங்கலி கோர்வை போல வடிமைக்கப்பட்டிருந்தன. தொடர் வறட்சி காரணமாகவும், இந்த நீர் நிலைகள் தொடர் வறட்சி மற்றும் ஆக்கிரமிப்புகளால் வரத்துகால்கள், மடைகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக இந்த நீர்நிலைகள் அனைத்தும் படிப்படியாக தூர்வாரி சீரமைக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் மாவட்ட கலெக்டர் நந்தகுமார், தற்போதைய கலெக்டர் முனைவர் நடராஜன் ஆகியோரின் தொடர் நடவடிக்கை காரணமாக ராமநாதபுரத்தில் பல ஊரணிகள், கண்மாய்கள் தூர்வாரி சீரமைக்கப்பட்டு வருகிறது.
       ராமநாதபுரம் செய்யதம்மாள் அறக்கட்டளை சார்பில் லெட்சுமிபுரம் ஊருணி கடந்த ஆண்டு முழுமையாக ஆழப்படுத்தி கரைகள் பலப்படுத்தப்பட்டு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு காவலர்கள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்த நடவடிக்கையின் பயனாக தற்போது அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததுடன் நிலத்தடி நீரின் தன்மையும் மாறி உள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது ராமநாதபுரம் நகரின் தொன்மை சிறப்பு வாய்ந்த பழமையான முகவை ஊரணியை தூர்வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் முனைவர் நடராஜன், வருவாய் கோட்டாட்சியர் பேபி ஆகியோரின் ஆலோசணையின்பேரில் செய்யதம்மாள் அறக்கட்டளையின் சார்பில் தூர்வாரி சீரமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் செய்யது அம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா கூறியதாவது:- ராமநாதபுரத்தில் எங்களின் அறக்கட்டளையின் சார்பில் ஊருணிகளை பாதுகாக்கவும், சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காகவும் கடந்த 17 ஆண்டுகளாக எங்களது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு தொடர்  நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்காக பசுமைப்படை என்ற அமைப்பினை ஏற்படுத்தி ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை ஒன்றரை லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துள்ளோம்.
     ஏற்கனவே, ராமநாதபுரம் லெட்சுமிபுரம் ஊருணி பாராங்குண்டு ஊருணி, ராஜசூரிய மடை ஊருணி, மல்லிகை கண்மாய் போன்றவற்றை தூர்வாரி ஆழப்படுத்தி மழைநீரை சேகரித்து வருகிறோம். ராமநாதபுரத்தில் உள்ள சிதம்பரம்பிள்ளை ஊருணியில் 700 மரக்கன்றுகளும், லெட்சுமிபுரம் ஊருணியில் 900 மரக்கன்றுகளும், செம்பொன்குன்று ஊருணியில் 100 மரக்கன்றுகளும் நட்டு வளர்த்து வருகிறோம். தற்போது, பழமை வாய்ந்த முகவை ஊருணியை தூர்வாரி சீரமைத்து கரைகளை பலப்படுத்தி வருகிறோம். இதன்பின்னர் ஊருணியை சுற்றி வேலி அமைத்து 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். இதற்காக செய்யது அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.35 லட்சம் நிதி செலவிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே,  பெரியகண்மாயில் இருந்து முகவை ஊருணி மற்றும் லெட்சுமிபுரம் ஊருணிக்கு தண்ணீர் வரக்கூடிய 5 கிலோ மீட்டர் நீள வரத்துக்கால்வாயை கண்டறிந்து அவற்றை புனரமைத்து உள்ளோம். இவ்வாறு கூறினார். அப்போது பசுமைப்படை ஆசிரியர் ஜாகிர்உசேன், முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து