குரு ஸ்ரீமேதா தஷிணாமூர்த்தி ஆலயம்

வெள்ளிக்கிழமை, 15 செப்டம்பர் 2017      ஆன்மிகம்
Anmikaboomi

Source: provided

குரு பார்க்க கோடி நன்மை
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வாக்கிற்கு ஏற்ப பெறுதற்கரிய மானிடப் பிறவியை பெற்றுள்ள நாம் இந்நிலையில் இருந்து மேலான நிலைக்கு செல்வதற்கு பரிபூரண இறையருள் அவசியமாகும். நம்முடைய வாழ்க்கை என்பது நம்முடைய வினைப் பயன்களை நமக்கு அளித்து நம்முடைய வாழ்க்கையைச் செலுத்துவதில் நவக்கிரகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நவக்கிரகங்களுடைய ஆலயத்திற்கு ஆட்படாத மனிதப் பிறவியே இல்லை என்பது உண்மை.
பிறவிகளில் மானுடப் பிறவி உயர்ந்தது என்பதே மனிதனுக்கு அடிப்படையிலேயே அமைந்த சிந்திக்கக் கூடிய அறிவைப் பெற்றதினால்தான் ஆகும். அப்படிப்பட்ட மிக உயர்ந்த அறிவையும், ஞானத்தையும் கொடுக்கக் கூடிய தெய்வங்களிலே குரு ஸ்ரீ மேதா தஷிணாமூர்த்தி முதன்மையானவர் என்பது அனைவரும் அறிந்தது. நம்முடைய பாரம்பரியத்தில் மாதா, பிதா, குரு என்று குருவிற்கு ஒரு தனி சிறப்பான இடத்தை சொல்லியிருக்கிறார்கள்.

குருர் ப்ரஹ்மர் குருர் விஷ்ணு குரூர் தேவோ மகேச்வர;

குரு ஸாஷாத் பரப் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுருவே நம :  என்று குருவை வணங்குதல் அனைவரையும் வணங்குவதற்கு சமமானதாகச் சொல்லப்படுகின்றது. இவரைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது தெய்வீக அறிவுக்கும், வேதாந்த ஞானத்திற்கும் முக்காரணங்களின் தூய்மைக்கும், மூலப்பொருளாக உள்ளவர் வியாழன், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் ஆச்சார்யராக விளங்கக் கூடியவரும், மூவுலகங்களின் புத்தி, சக்தியாக விளங்கக் கூடிய குருபகவான் மனித வாழ்க்கையில் அனைத்து சுப விசேஷங்களையும் அருளக்கூடிய ஸ்ர்வமங்களகாரகன் ஆக விளங்குகின்றனர்.

ஒருவருடைய ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் சற்று ஏறத்தாழ இருந்தாலும் கூட குரு ஒருவர் மட்டும் உயர்ந்திருந்தால் ஒருவர் எல்லா நற்பலன்களையும் அனுபவிக்க முடியும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட குருபகவான் தமிழகத்தில் ஆலங்குடி ஈஸ்வரன் கோயிலில் தட்சிணாமூர்த்தியாகவும், காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரத்தில் ஈஸ்வரன் கோயிலில் யோகதட்சிணாமூர்த்தியாகவும், மயிலாடுதுறையில் வல்லல் என்ற ஊரில் ஈஸ்வரன் கோயிலில் மேதா தட்சிணாமூர்த்தியாகவும் அருள்பாலித்து வருகிறார். இக்கோயில்களில் எல்லாம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பரிவார மூர்த்தியாக மட்டுமே உள்ளார். ஆனால் தமிழகத்திலேயே வேலூரில் குரு ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி என்று தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார்.

இத்திருக்கோயிலில் சொர்ணபந்தத்துடன் ஸ்ரீகுருமேதா தட்சிணாமூர்த்தி சுவாமி அமைந்திருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் கோட்டை நகரம் என்று அழைக்கப்படுகின்ற வேலூரின் தென்பாகத்தில் வள்ளலார் நகர் சாயிநாதபுரத்தில் தென்முகக் கடவுளாகிய குரு ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி கோயில் கொண்டு எழுந்தருளி அருளாசி புரிந்து வருகின்றார்.

இத்திருக்கோயிலில் குருபகவானுக்கு விசேஷ பூஜைகள், ஹோமங்கள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் அனைத்து தோஷங்களுக்குரிய பரிகாரங்களையும், பூஜைகளையும் செய்வித்தல் என்பது ஸர்வார்த்த தோஷ பரிகாரமாக கருதப்படுகிறது. வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருள்பாவிக்க கூடிய மூர்த்தியாக குருபகவான் இங்கிருப்பதினால் இது மிகச்சிறப்பு வாய்ந்த பிரார்த்தனா ஷேத்திரமாக விளங்குகிறது.

ஸ்ரீகுருபரிகார தல சிறப்பு அம்சங்கள் :  இத்திருக்கோயிலின் முன்வாயிலில் சுயம்பு வலம்புரி விநாயகர் தோன்றி இருப்பது சிறப்பாகும். இத்திருக்கோயிலில் உள்ள அருள்மிகு விநாயகர், பிள்ளையார்பட்டியில் உள்ளது போன்று ஸ்ரீ வலம்புரி விநாயகர் தும்பிக்கையில் அமிர்தகலசம் வைத்துக்கொண்டு வடக்கு பார்த்து அமைந்துள்ளது.

வடக்கு பார்த்துஸ்ரீவிஷ்ணு துர்கை அமைந்துள்ளது. வடக்கு பார்த்து வள்ளி தேவசேனாம்பிகா சமேத சுப்பிரமணி சுவாமி அமைந்துள்ளது. தெற்கு நோக்கி ஸ்ரீ யோக பைரவர் தமிழகத்திலேயே இரண்டாவது இடமாக அமைந்துள்ளார். கிழக்கு நோக்கி 1000 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஸ்ரீ கிரி பக்த ஆஞ்சநேயர் அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அருள்மிகு குரு ஸ்ரீ மேதா தஷிணாமூர்த்தி நமது வேலூர் கோட்டையில் இருந்து தென் திசையில் அமைந்துள்ளது மிகுந்த சிறப்பம்சமாகும். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அனைத்து விக்ரகங்களும் ஒரே சிற்பியின் கைவண்ணத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு நிலம் வழங்கியவர் பெயரும் உயர்திரு.யு.வி.தஷிணாமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. /அதே போன்று இந்த கோயிலை 28.10.1994&ல் ஆரம்பித்து தனி நபராக இருந்து கட்டி முடித்து கும்பாபிஷேகம் 10.02.2001ல் செய்து கொடுத்தவரும், தற்போது அறங்காவலருமாக உள்ள எல்.தட்சிணாமூர்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திருக்கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் வாகனத்துடன் அமைந்துள்ளது.

திருக்கோயிலின் உற்சவர் வழிபாட்டு விழா :  தமிழகத்திலேயே இத்திருக்கோயிலில் மட்டுமே தட்சிணாமூர்த்தி ஸ்வாமி உற்சவ மூர்த்தியாக உள்ளார். குருபெயர்ச்சியின் போதும், விநாயகர் சதுர்த்தியின் போதும் உற்சவர், வீதி உலா வழிபாடு நடைபெறுவது இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

சிறப்பு வருட வழிபாடு :  விநாயகர் சதுர்த்தி அன்றும், நவராத்திரி பூஜை அன்றும், ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், ஆண்டுவிழா மற்றும் குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி, இராகு, கேது பெயர்ச்சி, இந்த நாட்களில் சிறப்பு இலட்சார்ச்சனையும் சிறப்பு ஹோமங்களும் சிறப்பு அலங்கார ஆராதனைகளும் நடைபெறும்.

சிறப்பு மாத வழிபாடு : ஸ்ரீவலம்புரி விநாயகர்க்கு சங்கடஹர சதுர்த்தியில் மாலையில் சிறப்பு ஹோமங்கள் (ம) அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். பௌர்ணமி அன்று மாலையில் ஹோமங்கள் (ம) சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து மகா ஜோதி ஏற்றி வழிபடுகிறார்கள். ஒவ்வொரு கிருத்திகை தினத்தன்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். ஸ்ரீ யோக பைவர்க்கு ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி நாளில் இராகு கால நேரத்தில் ஹோமங்கள் (ம) சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து வருகிறோம். அன்று பக்தர்கள் அவர்களது ஜாதகத்தை வைத்து வழிபடுகிறார்கள்.

சிறப்பு வார வழிபாடு : ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் குருபகவானுக்கு குரு மூல மந்திரம் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் அருள்மிகுஸ்ரீ விஷ்ணு துர்கையம்மனுக்கு இராகு கால நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். மாலை 6.00 மணிக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம், சனிக்கிழமை சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ஸ்ரீகிரி பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு ஆராதனையும் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிறு மாலை இராகு கால நேரத்தில் ஸ்ரீயோக பைவரவர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம்.

நித்யகால பூஜை : தினமும் காலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வருகிறோம். காலை 6.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். விசேஷ நாட்களில் காலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தொடர்ந்து இருக்கும்.

ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் காலை 4.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும் மாலை 3.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் கோயில் நடை திறந்து இருக்கும். அன்றைய தினம் சிறப்பு அப«ஷேக ஆராதனை அர்ச்சனை செய்யப்படும்.
இத்திருக்கோயிலில் ஸ்ரீ மேதா தஷிணாமூர்த்திக்கும், வலம்புரி விநாயகருக்கும் ஸ்ரீவள்ளி, தேவசேனாம்பிகா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் விசேஷ நாட்களில் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு அருள்பாலிக்கின்றனர்.

ஸ்ரீவலம்புரி விநாயகர், குரு ஸ்ரீமேதா தஷிணாமூர்த்தி ஆலயம், 19, முதல் நெடுஞ்சாலை, வள்ளலார் நகர், சாயிநாதபுரம், வேலூர்-1.

செல் : 94437 19412

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து