முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினை: இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரத்தில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக, உலக வங்கி உதவியுடன் இந்தியா, பாகிஸ்தான் இடையே 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனிடையே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாயும் ஜீலம், செனாப் நதிகளின் கிளை நதிகளான கிஷன்கங்கா (330 மெகாவாட்) மற்றும் ராட்டில் (850 மெகாவாட்) ஆகியவற்றில் நீர் மின் உற்பத்தி நிலையங்களை கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக இந்த திட்டங்களின் தொழில்நுட்ப வடிவமைப்பு குறித்து கவலை தெரிவித்தது.

இதையடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினையில் மத்தியஸ்தராக செயல்பட்டு வரும் உலக வங்கி முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு நாடுகளின் செயலாளர் நிலையிலான உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2 நீர் மின் நிலையங்களை கட்டிக்கொள்ள உலக வங்கி இந்தியாவுக்கு அனுமதி வழங்கியதாக தகவல் வெளியானது. எனினும், இது தொடர்பாக செப்டம்பரில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறியது.

இதன்படி, இரு நாடுகளின் செயலாளர் நிலையிலான பேச்சுவார்த்தை உலக வங்கி அதிகாரிகள் முன்னிலையில் வாஷிங்டனில் கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தியா தரப்பில் நீர்வளத் துறை செயலாளர் அமர்ஜித் சிங் தலைமையிலான அதிகாரிகளும், பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு நீர்வளத் துறை செயலாளர் ஆரிப் அகமது கான் தலைமையிலான அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதுகுறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், “2 நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனினும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களின் அடிப்படையில் இந்தப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்க உலக வங்கி தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும்” என கூறப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. இதற்கு தீர்வு காண்பது தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளது. எல்லை தாண்டிய தீவிரவாத செயலை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என இந்தியா கூறி வருகிறது. இந்நிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மட்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து