முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் தூய்மை சேவை வாகன பிரசார பயணம்: முதல்வர் எடப்பாடி தொடங்கிவைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிரதமர் மோடியின் தூய்மை சேவை இயக்கம் குறித்த வாகன விழிப்புணர்வு பிரசார பயணத்தை சேலம் சூரமங்கலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.  இந்த வாகன விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

“தூய்மை சேவை இயக்கம்” தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்டு, 7 மாவட்டங்களில் வாகன பிரச்சாரம்  மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, கொடியசைத்து துவக்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் செல்லுகின்ற பகுதிகளில் எல்லாம் மக்கள் இதனை பார்த்து,விழிப்புணர்வு ஏற்பட்டு சுகாதாரமாக, சுத்தமாக நமது மாநிலம் திகழவேண்டும் என்ற அடிப்படையிலேயே, பிரதமர் மோடி கொண்டுவந்த இத்திட்டம் தமிழகத்தில் வெற்றிகரமாக அமல்படுத்தப்படும்  என்பதை மகிழ்ச்சியோடு இந்த நேரத்தில் தெரிவித்துகொள்கிறேன்.

இந்த தூய்மை சேவை இயக்கத்தின் மூலமாக, இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும், சாலைகள்,தெருக்கள் எல்லாம் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும். சுகாதாரம் தான் முக்கியம், “நோயற்ற வாழ்வே குறைவற்றசெல்வம்” என்று சொல்வார்கள், ஆகவே, மனிதன் நோய் இல்லாமல் வாழ்ந்தாலே குறைவற்ற செல்வத்தோடு வாழ்வதற்குச் சமம்.

ஆகவே, நாம் ஒவ்வொருவரும் தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும். தூய்மையாக இருந்தால் நாம் மகிழ்ச்சியாக வாழலாம், மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தூய்மை முக்கியம். ஆகவே அப்படிபட்ட தூய்மையைக் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, வாகனத்தின்மூலமாக இச்செய்தியை அவர்களிடையே கொண்டு சேர்க்கின்ற துவக்க விழா நிகழ்ச்சி இன்றைக்கு துவங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் அகற்றவேண்டும் என்பது நமது இலக்கு, நோக்கம். அதனை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும், அதற்காக கழிவறை கட்டுவதற்கு அரசாங்கத்தால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதை பொதுமக்கள் பயன்படுத்தி, திறந்தவெளி மலம் கழிப்பற்ற சூழ்நிலையை நீங்கள் உருவாக்கவேண்டும், கை, கால்களை நன்றாகக் கழுவி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் எங்கெல்லாம் நம்முடைய பகுதியில் நீர் தேங்கி இருக்கின்றதோ அவற்றை முழுமையாக அகற்றிடவேண்டும். ஏனென்றால் நன்னீரில்தான் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசு உருவாகிறது. ஆகவே, பருவ மழை காரணமாக பொழிகின்ற மழையின் காரணமாக, ஆங்காங்கே, சிறு, சிறு குட்டைகள் தேங்கி இருந்தால்கூட, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தாங்களே முன்வந்து அதனை உடனடியாக அகற்ற வேண்டும். எல்லாவற்றையும் அதிகாரிகள்தான் வந்து அகற்ற வேண்டுமென்று நினைக்காமல், நம்மை நாம் பாதுகாத்துகொள்ள வேண்டும்.

இந்த டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகின்றது. மக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைய செய்யப்படுகின்றது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மக்களுக்கு சேவைசெய்வதில் முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, இந்த“தூய்மை சேவை இயக்கம்” செப்டம்பர் 15-ம் தேதி துவங்கப்பட்டு, அக்டோபர்  2-ம் தேதி காந்திஜெயந்தி வரை தொடரும் என்று தெரிவித்து அதற்கு பொதுமக்கள் முழு ஆதரவு நல்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன் .இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார், .

இவ்விழாவில் அமைச்சர்கள் .எஸ்.பி.வேலுமணி,விஜயபாஸ்கர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் .ஹன்ஸ்ராஜ்வர்மா, ஊரகவளர்ச்சித்துறை இயக்குநர்.பாஸ்கரன், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்,ரோஹிணி ரா.பாஜிபாகரே, மாவட்ட வருவாய் அலுவலர் .சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன் மற்றும் அரசுத்துறைஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து