முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.100 கோடி சொத்து, 3 வயது மகளை கைவிட்டு துறவறம் மேற்கொள்ளும் ஜெயின் தம்பதி

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

போபால்: மத்திய பிரதேசத்தில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த இளம் தம்பதியர், ரூ.100 கோடி சொத்து, 3 வயது மகளை கைவிட்டு துறவறம் செல்கின்றனர். தாயும் தந்தையும் துறவறம் மேற்கொள்வதால் 3 வயது குழந்தை ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியாகிறது.

மத்திய பிரதேசம் நீமுச் நகரைச் சேர்ந்தவர் சுமித் ரத்தோர் (35). இவரது மனைவி அனாமிகா (34). இவர்களுக்கு 3 வயதில் அபயா என்ற பெண் குழந்தை உள்ளது.

சுமித் ரத்தோரின் தந்தை ராஜேந்திர சிங் ரத்தோர் பெரும் தொழிலதிபர். சிமென்ட் ஆலைகளுக்காக சாக்குகள் தயார் செய்யும் ஆலையை நடத்தி வருகிறார். அவரின் ஒரே மகன் சுமித் ரத்தோர். இந்தியாவில் பள்ளி, கல்லூரி படிப்பை நிறைவு செய்த அவர் லண்டனில் வணிகம் தொடர்பாக டிப்ளமோ படித்துள்ளார். அங்கேயே 2 ஆண்டு பணியாற்றி தொழில் அனுபவங்களை கற்றுக் கொண்டு சொந்த ஊர் திரும்பினார்.

சுமித் ரத்தோரின் மனைவி அனாமிகா அரசியல் குடும்ப பின்னணி கொண்டவர். அவரது தந்தை அசோக் சாண்டில்யா, நிமூச் மாவட்ட பாஜகவின் முன்னாள் தலைவர் ஆவார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுமித்தும் அனாமிகாவும் திருமணம் செய்து கொண்டனர். குழந்தை அபயா பிறந்து 8 மாதங்களானபோதே இருவரும் துறவறம் மேற்கொள்ள தீர்மானித்தனர். அப்போதுமுதல் கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர். இருதரப்பு வீட்டாரும் துறவறத்தை விட்டு வெளியேற வற்புறுத்தியபோதும் முடிவை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டனர்.

அனாமிகாவின் தந்தை அசோக் சாண்டில்யா கூறியபோது, எனது பேத்தியை நானே வளர்க்க முடிவு செய்துள்ளேன். மகளையும் மருமகனையும் ஆன்மிகம் அழைக்கிறது. எவ்வளவோ முயன்றும் அவர்களின் முடிவை என்னால் மாற்ற முடியவில்லை என்றார்.

சுமித்தின் தந்தை ராஜேந்திர சிங் ரத்தோர் கூறியபோது, எனது மகனின் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் இவ்வளவு இளவயதில் துறவறம் செல்வார் என்பதை எதிர்பார்க்கவில்லை என்றார்.

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி சுமித்தும் அனாமிகாவும் தங்களின் துறவற முடிவை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். வரும் 23-ம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஆச்சார்யா ராம்லால் ஆசிரமத்தில் தீட்சை பெற்று துறவறத்தை தொடர உள்ளனர். அதற்காக தற்போது மவுன விரதம் இருந்து வருகின்றனர். தாயும் தந்தையும் துறவறம் பூண்டபிறகு 3 வயது குழந்தை அபயா ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து