முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்கனி ஈட்ட இரவுபகல் பாராமல் மக்கள் பணி ஆற்ற வேண்டும் - தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கின்றது. அதில் வெற்றிக்கனி ஈட்டுவதற்காக அ.தி.மு.க தொண்டர்களும், நிர்வாகிகளும் இரவு, பகல் பாராமல் மக்கள் பணி ஆற்றவேண்டும் என்று அ.தி.மு.க தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தகர்த்தெறியப்படும்

சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி.பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்றைக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக, ஏன் இந்த மாவட்டத்திலே தமிழகத்தினுடைய முதல்வராக கூட அ.தி.மு.கவில் தான் வரமுடியும். வேறு எந்த இயக்கத்திலும் வரமுடியாது. தி.மு.க இயக்கம் வாரிசு அரசியலிலே உருவாக்கப்பட்ட இயக்கம். அவர், அவருக்குப் பின்னாலே அவர் மகன், பிறகு மகள், பேரன், இப்படித்தான் வரமுடியும். ஆனால் அ.தி.மு.கவில் இந்த இயக்கத்தின் விசுவாசம்மிக்க தொண்டர்கள், இந்த இயக்கத்திற்கு உண்மையாக உழைக்கின்றவர்கள் நிச்சயமாக ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு பதவிக்கு வரமுடியும். அப்படிப்பட்ட இயக்கத்திலே நீங்கள் இடம் பெற்றிருக்கின்றீர்கள். உங்களுக்கு பெருமை சேர்க்கின்ற இயக்கம் இந்த இயக்கம். ஆகவே, அத்தனை பேரும் ஒருமித்த கருத்தோடு பணியாற்றினால், எத்தகைய பிரச்சினை வந்தாலும் சரி, எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் சரி, எவ்வளவு தடைகள் வந்தாலும் சரி, உங்களின் ஆதரவோடு அனைத்தும் தகர்த்தெறியப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இரு பெரும் தலைவர்கள்...

எம்.ஜி.ஆருக்கு பிறகு இந்த இயக்கம் உடைந்துவிடும் என்றார்கள். ஜெயலலிதா அதை கட்டிக்காத்தார்கள். அம்மா இந்த இயக்கத்திற்கு பொறுப்பேற்கின்றபொழுது, எவ்வளவு துன்பப்பட்டார் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தார் ஏச்சுக்களும், பேச்சுக்களும், பல்வேறு வழக்குகளும் தொடுத்தார்கள். அத்தனையையும் தாக்குப்பிடித்து எம்.ஜி.ஆருடைய ஆட்சி 16 ஆண்டுகாலம் தமிழ்நாட்டிலே வேரூன்றியது. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுடைய வாழ்வு முன்னேற தன் உயிரையே தியாகம் செய்த ஒரே தலைவி ஜெயலலிதா. சில தலைவர்கள் தமிழகத்திலே இருக்கின்றார்கள். அவர்களெல்லாம் மக்கள் மனதிலே இடம்பெறவில்லை. ஆனால், மக்கள் மனதிலே இடம் பெற்றிருந்த இருபெரும் தலைவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான். இந்த இருபெரும் தலைவர்களும் மக்களுக்காக உழைத்தார்கள். அவர்கள் இருவருக்குமே தனக்கென்று வாரிசுகள் கிடையாது. தனக்கென்று குடும்பம் கிடையாது. மக்கள் தான் குடும்பம். மக்கள்தான் தங்களுடைய வாரிசு என்று எண்ணினார்கள். மக்களுக்காக இரவு, பகல் பாராமல் உழைத்தார்கள், தன் இறுதி மூச்சு இருக்கும்வரை மக்களுக்காக உழைத்தார்கள். அதனால் தான், இருபெரும் தலைவர்களும் இன்று மக்கள் மனதில் குடிகொண்டிருக்கின்றார்கள், ஆகவே இருபெரும் தலைவர்களும் தெய்வமாக இருக்கின்றார்கள். அந்த தெய்வத்தினுடைய ஆசியோடு இன்றைக்கு அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

எவராலும் அசைக்க முடியாது

இந்த இருபெரும் தலைவர்களுடைய அன்பு, ஆசி, அருளாசி இருக்கின்ற வரை இந்த கட்சியையோ, ஆட்சியையோ எவராலும் அசைக்க முடியாது என்பதை திட்டவட்டமாக இந்தநேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆட்சி நடைபெறுகின்ற பொழுது சாதாரணமாக நினைத்தார்கள். எப்படியாவது உடைத்து விடலாம். முடித்துவிடலாம் என்றெல்லாம் திட்டம் போட்டார்கள். ஆனால், அம்மாவினுடைய ஆசியோடு, ஆத்மாவோடு, அம்மா அரணாக இருந்து காத்த ஆட்சி, கட்சி என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன். முதலில் பட்ஜெட் கூட்டம் நடக்குமா என்று எதிர்பார்த்தார்கள். வெற்றிகரமாக நடைபெற்று, சிறப்பாக நடந்தது. அதன்பிறகு, மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்பொழுதும் இந்த ஆட்சி தாக்குப் பிடிக்குமா ? என்று எண்ணினார்கள், குழப்பினார்கள். அந்த மானியக் கோரிக்கையும் சிறப்பாக நடைபெற்றது. அதற்குப் பிறகு வேண்டுமென்றே, திட்டமிட்டு, ஏதாவது ஒருபோராட்டத்தை அறிவித்து, இந்த ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துவதும், குழப்பத்தைஏற்படுத்துவதும், இதன் மூலமாக ஆட்சிக்கு ஒரு நெருக்கடி கொடுப்பதுபோல் மிரட்டி, தினந்தோறும் ஏதாவது செய்து கொண்டிருக்கிறார்கள். அதையும் அம்மாவினுடைய ஆத்மாவோடு, அம்மா அரணாக இருந்து இந்த ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று இந்த நேரத்திலே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

தொட்டுக்கூட பார்க்கமுடியாது

எத்தனை சூழ்நிலைகள் வந்தாலும், உங்களுடைய ஆதரவு இருக்கின்றவரை இந்த கட்சிக்கோ, ஆட்சிக்கோ யாராலும் தொட்டுக்கூட பார்க்கமுடியாது என்று மீண்டும், மீண்டும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கின்றது. உள்ளாட்சித் தேர்தலில் 60 வார்டுகள் இருக்கின்றது. 60 வார்டுகளில் உள்ள அ.தி.மு.க தொண்டர்களும், நிர்வாகிகளும் இரவு, பகல் பாராமல் மக்கள் பணி ஆற்றவேண்டும். மக்களைசந்திக்க வேண்டும். மக்கள் பணி என்பது மிக முக்கியமான பணி, சேவை. ஆகவே எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா ஆகியோரின் கனவை நனவாக்க வேண்டுமென்று சொன்னால், 60 வார்டுகளில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து பணியாற்றி அம்மாவினுடைய ஆசியோடு நிறுத்தப்படுகின்ற நம்முடைய கவுன்சிலர்களுக்கும் , மாமன்ற உறுப்பினர்களுக்கும் பேராதரவு தந்து அம்மாவினுடைய கோட்டை சேலம் மாவட்டம் என்பதை நீங்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

பொறுப்பிற்கு வரவேண்டும்

நாம் பதவியில் இருந்தாலும், நிர்வாகிகள் இங்கே தேர்ந்தெடுக்கப்பட்டால்தான், நம்முடைய மக்களுக்குத் தேவையான பணிகளை செய்ய முடியும்.அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென்றால், நம்முடைய கழகத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்பிற்கு வரவேண்டும். அந்தப் பொறுப்பிற்கு வரவேண்டுமென்றால் உங்களுடைய உழைப்பு தேவை என்று இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன். ஆகவே, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நம்முடைய மாவட்டங்களில் எல்லாம் நடத்த திட்டமிட்டிருக்கின்றோம். வரும் 30ம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் அந்த நூற்றாண்டு விழாவிலே கலந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

ஒத்துழைப்பு நல்கவேண்டும்

தமிழகத்தில் 13 இடங்களிலே எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடைபெற்று முடிந்து நிறைவு பெற்றுள்ளது. 13 இடங்களிலும் சிறந்த மக்கள் கூட்டம், சிறப்பான நிகழ்ச்சி என்று பொதுமக்கள் பேசுகிறார்கள். நடுநிலையாளர்கள் பேசுகிறார்கள். நான் முதலமைச்சராக இருக்கின்ற இந்த சேலம் மாவட்டத்திலே நடைபெறுகின்ற கூட்டம். நீங்கள் அத்தனை பேரும் பக்கபலமாக என்னோடு இருக்க வேண்டும். இங்கே வருகை தந்திருக்கின்ற தொண்டர்கள், கழக நிர்வாகிகள், மேடையிலே வீற்றிருக்கின்ற முன்னோடி நிர்வாகிகள் அத்தனை பேரும், ஒருமித்த கருத்தோடு இணைந்து பணியாற்றி, தமிழகத்திலேயே சேலத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, இந்தியாவிலேயே எங்கேயும் இப்படிப்பட்ட கூட்டம் நடைபெறவில்லை என்று சொல்கின்ற அளவிற்கு அந்த நிகழ்ச்சி சிறக்க, நீங்கள் அத்தனை பேரும் ஒத்துழைப்பை நல்கவேண்டும், திரளாக அந்த கூட்டத்திலே பங்கேற்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இரட்டை இலையை மீட்போம்

நீங்கள் எந்த நேரத்திலும் என்னை சந்திக்கலாம், நான் ஒரு சாதாரண பழனிசாமி, நான் முதலமைச்சராக இல்லவே இல்லை. அம்மா தான் முதலமைச்சர். கட்சிக்கு நிரந்தரபொதுச்செயலாளர் ஜெயலலிதா , முதலமைச்சரும் ஜெயலலிதா அவர் விட்டுச் சென்றபணியைத்தான் நான் தொடருகின்றேன். உங்கள் ஆதரவோடு, அவர் விட்டுச் சென்ற பணியைநான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றேன். அதுமட்டுமல்ல, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இந்த இயக்கம் இணைந்ததற்குப் பிறகு, அதனுடைய நிர்வாகியான துணை-முதலமைச்சர் அண்ணன் ஓ.பி.எஸ்.ஒருங்கிணைப்பாளராகவும், நான் கழகத்திற்கு இணை ஒருங்கிணைப்பாளராகவும் இன்றைக்குகழக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். இந்த இரண்டு பொறுப்புகளும் மிகமுக்கியமான பொறுப்புகள். இந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் அ.தி.மு.கவை வழிநடத்திச் செல்கிற மிகப்பெரிய பொறுப்பை நீங்கள் தந்திருக்கின்றீர்கள், என்றென்றும் உங்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் என்பதைஇந்த நேரத்திலே நினைவுகூர்ந்து, இன்றைக்கு தொண்டன் தான் இந்த இயக்கத்தினுடைய முதுகெலும்பாக விளங்குகின்றார்கள், அவர்களை மதிக்கிறோம், போற்றுகின்றோம், அவர்கள் எங்களுக்கு பக்கபலமாக இருக்கவேண்டும். அனைத்து நிர்வாகிகளும் உடனிருந்து இந்த ஆட்சிக்கும், கட்சிக்கும் அரணாக இருந்து ஜெயலலிதாவின் ஆசியோடு சிறப்பான ஆட்சியை நாட்டுமக்களுக்கு தருவோம், எதிரிகளை வீழ்த்துவோம். எம்.ஜி.ஆரின் கனவை அம்மா விட்டுச் சென்ற பணியை தொடருவோம். நம்முள் இருக்கின்ற பிரச்சினையின் காரணமாக, இரட்டை இலை இன்றைக்கு தேர்தல் ஆணையத்திலே இருக்கின்றது. அதை மீட்டெடுப்போம், வெற்றி காண்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, தியாகராஜன், சரவணன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எம்.துரைராஜ், மகளிரணி செயலாளர் ஜமுனா ராணி, ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.ஆர்.ஆர்.அய்யப்பமணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கீதா, ஏ.கே.ராமச்சந்திரன், எம்.ஜிய.ஆர்மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து, முன்னாள் கவுன்சிலர்கள் முருகன், புல்லட்ட ராஜேந்திரன், பாலசுப்பிரமணி, பேங்க் ராமசாமி, மார்க்கபந்து, லலிதா செந்தில்குமார், சுப்பிரமணி, முருகானந்தம், மீனவர் பிரிவு செயலாளர் ராமசாமி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் கிரிநடராஜன், அம்மாபேட்டை ஜானகிராமன், ஜெகதீஸ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

வீட்டுக்கு தான் செல்ல வேண்டும்

சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி.பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதவி இழந்திருப்பது குறித்து மறைமுகமாக சுட்டிக்காட்டினார். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இந்த ஆட்சியை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். சாதாரணவிஷயமல்ல. ஏதோ ஒரு இடத்தில் எம்.எல்.ஏக்கு நின்று ஜெயித்திட முடியாது. சட்டமன்ற உறுப்பினராக ஆகவேண்டுமென்று சொன்னால், அவர்கள் அந்தப் பகுதியிலே இருக்கின்ற அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள், இரவு, பகல் பாராமல் உழைத்து, மக்களுடைய நன்மதிப்பைபெற்று, மக்களுடைய செல்வாக்கைப் பெற்றுதான் வரமுடியும். அந்த உழைப்பைக் கொடுத்தவர்கள் நீங்கள். உங்களுடைய உழைப்பால் தான் மேடையிலே இருக்கின்ற அத்தனைபேருக்கும் பதவி கிடைத்திருக்கின்றது. அதை மறந்தவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் வீட்டிற்குத்தான் செல்லவேண்டும். ஆகவே, ஒரு சாதாரண தொண்டன்கூட உயர்ந்த நிலைக்குவரமுடியும் என்ற நிலை, அ.தி.மு.கவில் தான்இருக்கிறது. இங்கே கீழே அமர்ந்திருப்பவர்கள் கூட நாளை மேடையிலே அமரமுடியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து