முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தாவில் இன்று 2-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : கொல்கத்தாவில் இன்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுப்பயணம்

ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

2-வது ஒருநாள்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் இந்திய அணியின் வெற்றி தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி தொடர்ந்து முன்னிலை பெற போராடும். மிகப்பெரிய ரன்னை குவிக்கும் திறமை கொண்ட பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்து வீச்சாளர்களும் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி அளிக்க கூடியவர்கள்.

ராகுலுக்கு வாய்ப்பு

பேட்டிங்கில் கேப்டன் கோலி, ரோகித்சர்மா, டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ் ஆகியோரும், பந்துவீச்சில் யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது. ஒருவேளை அக்‌ஷர்பட்டேல் இடம் பெற்றால் குல்தீப் யாதவ் நீக்கப்படலாம். லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் ரகானே கழற்றி விடப்படுவார்.

வீரர்கள் தேர்வில் மாற்றம்

ஆஸ்திரேலிய அணி சென்னை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து சமநிலை செய்யும் ஆர்வத்துடன் உள்ளது. மேக்ஸ்வெல், பல்க்னெர் ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் திறமையை வெளிப்படுத்தினர். இன்றைய போட்டியில் அனைவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தி இந்தியாவை வீழ்த்த முயற்சிப்பார்கள். இதற்காக வீரர்கள் தேர்வில் அதிரடியான மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழையால் அச்சுறுத்தல்

கொல்கத்தாவில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்று அச்சுறுத்தல் உள்ளது. இரு அணிகளும் இன்று மோதுவது 125-வது போட்டியாகும். இதுவரை நடந்த 124ஆட்டத்தில் இந்தியா 42-ல், ஆஸ்திரேலியா 72-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.

இந்திய வீரர்கள்:

விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, ராகுல், கேதர்ஜாதவ், ரகானே, டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ்பாண்டே, அக்‌ஷர்பட்டேல், யசுவேந்திர சஹால், பும்ரா, முகமது ‌ஷமி, உமேஷ்யாதவ், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார்.

ஆஸ்திரேலிய வீரர்கள்:

ஸ்டீவன் சுமித் (கேப்டன்), வார்னர், ஆரோன்பிஞ்ச், மேக்ஸ்வெல், டிரெவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கம் மேத்யூ வாடே, கும்மின்ஸ், நாதன் கோல்ட்டர் நைல், பல்க்னெர், ஸ்டோனிஸ், கானே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஆஸ்டன் அகர், ஹில்டன் கார்ட் ரைட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து