முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கற்பனையில் மிதப்பவர்கள் குறித்து நாகை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி சொன்ன குட்டிக்கதை

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : கற்பனையில் மிதப்பவர்கள், தங்கள் கற்பனையை நிறுத்திக் கொண்டு, தானும் கெட்டு பிறரையும் கெடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாகையில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கனவு கண்டு பானைகளை உடைத்த வியாபாரியின் கதையை சொல்லி முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில்  எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய குட்டிக்கதை வருமாறு:-
ஒரு ஊரில் ஒரு குயவர் சட்டி பானைகள்விற்கும் கடை வைத்திருந்தார். அவருக்கு திருமணம் ஆக வில்லை. ஒரு நாளைக்கு இரண்டு பானைகள் விற்பதே கடினம். ஒரு நாள் ஒருவர் 20 பானைகள் வேண்டுமென்று பணத்தோடு வந்துவிட்டார். குயவர் மகிழ்ச்சியில் மிதந்தார். நீங்கள் கடைத்தெருவில் வேலையிருந்தால் முடித்துவிட்டு வாருங்கள். நீங்கள் எடுத்து போகிற அளவிற்கு பானைகளை கட்டி வைக்கின்றேன் என்று வந்தவரை அனுப்பிவைத்தார்.

20 பானைகளையும் எடுத்து அழகாக அடுக்கி வைத்தார். பானைக்கு அருகில் அமர்ந்தபடி கற்பனையில் ஆழ்ந்து விட்டார். 20 பானைகளை விற்று வரும் பணத்தில் ஒரு கோழி வாங்க வேண்டும். கோழி முட்டைகள் இட்டு பல கோழிகளாகும். அவற்றை விற்று, ஓர் ஆடு வாங்க வேண்டும். அந்த ஆடு பல குட்டிகள் போடும். அதை விற்று ஒரு கறவை மாடு வாங்க வேண்டும். அந்த கறவை மாடு கன்று போடும் அதை விற்று ஒரு மாட்டு வண்டி வாங்க வேண்டும்.

அதில் ஜாம் ஜாம்னு சவாரி போகலாம். மாட்டு வண்டியை நல்ல விலைக்கு விற்று குதிரை வாங்கி சொகுசாக பயணம் செய்யலாம். குதிரையும் குட்டி போடும். பிறகு வசதி பெருகிவிடும், பிறகு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். குழந்தை பிறக்கும். குழந்தை சும்மாயிருக்குமா. நான் பானை சட்டி செய்யும்போது பக்கத்தில் வந்து களிமண்ணில் விளையாடும். பணக்கார குழந்தையாயிற்றே களிமண்ணில் விளையாடுவதா. இவளுக்கு அறிவே இல்லையா? குழந்தையைக் கவனிக்காமல் அப்படி என்ன வேலை,“அடியே குழந்தையை தூக்கு”என்று கத்துகிறான். (பகற் கனவில்) மனைவி இருந்தால் தானே குழந்தையை வந்து தூக்குவதற்கு. ‘அழாதடா மகனே, அம்மா வரட்டும் அவளை இப்படி உதைக்கிறேன்’என்று காலை வேகமாக எதிரே உதைக்க, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து பானைகளும் சரிந்து உடைந்து நொறுங்கின.

கற்பனைக்கும் ஒரு எல்லை வேண்டும் ? பலபேர் இப்படித்தான் கற்பனை செய்து கொண்டுதானும் கெட்டு, தன்னை நம்பியவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யார் என்று உங்களுக்கு நன்றாக புரியும். இவ்வாறு கற்பனையில் மிதப்பவர்கள், தங்கள் கற்பனையை நிறுத்திக் கொண்டு, தானும் கெட்டு  பிறரையும் கெடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த குட்டிக்கதை மூலம் விளக்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து